தொல்.திருமாவளவன் மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "திமுகவை ஆட்சியிலிருந்து விரட்ட யாருடனும் கூட்டணி வைப்போம் என எடப்பாடி பழனிச்சாமி கூறியிதுக்கிறார். அது அவருடைய விருப்பம். கடந்த நான்கு ஆண்டுகள் ஆட்சியில், எண்ணற்ற நலத்திட்டங்களை திமுக அரசு செயல்படுத்தி உள்ளது. திமுக கூட்டணிக்கு பொது மக்களின் அமோக ஆதரவு வழக்கம்போல கிடைக்கும் என்கிற நம்பிக்கை உள்ளது.

ஆட்சியிலும் அதிகாரத்திலும் விசிகவுக்கும பங்கு என்பதைச் சொல்லக் கூடாது என்று இல்லை. சொல்லக்கூடிய நேரத்தில் சூழலை பொறுத்து நாங்கள் கோரிக்கை வைப்போம். விசிகவைப் பொறுத்தவரை கட்சி, நாட்டு நலனை கருத்தில் கொண்டுதான் முடிவெடுத்து வந்துள்ளோம். இனிமேலும் அப்படித்தான் முடிவெடுப்போம். எங்களுடைய கட்சியை மக்கள் முழுமையாக ஏற்கும் காலம் நிச்சயம் வரும். இதைக் கணித்து சொல்ல முடியாது. தற்போது மாநிலக் கட்சியாக மக்கள் எங்களை அங்கீகரித்து இருக்கின்றனர். இதேபோல ஓர் அதிகார வலிமை மிக்க கட்சியாக அங்கீகரிக்கப்படும்.
மும்மொழிக் கொள்கை விவகாரத்தில் நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் மன்னிப்பு கேட்கவில்லை. வருத்தம்கூடத் தெரிவிக்கவில்லை. சொன்ன வார்த்தையை திரும்ப பெற்றுக் கொள்கிறேன் என்றுதான் சொன்னார். அவருடைய பேச்சு அநாகரிகமானது. அதை வரவேற்கும் வகையில் தமிழக பாஜக பேசுவது அதைவிட அநாகரிகமானது. மும்மொழிக் கொள்கை தொடர்பாக மத்திய அரசு எத்தகைய அணுகுமுறையை கொண்டிருக்கிறது என தேசிய அளவில் அனைவரும் உணர வேண்டும்.

வட இந்தியாவிலிருந்து வரும் அமைச்சர்கள் ஆங்கிலத்தில் பேசுவதே கிடையாது. நாம் ஆங்கிலத்தில் பேசினாலும் அவர்கள் புரிந்து கொள்வதில்லை. ஆங்கிலத்தை அவர்கள் இன்னொரு மொழியாக கற்கவில்லை என்பது என்னுடைய கருத்து. ஒரு மொழி கொள்கையைப் பின்பற்றும் இந்தி பேசக் கூடியவர்கள் தமிழகத்தில் மும்மொழிக் கொள்கையை கொண்டு வர முயற்சி செய்கின்றனர். தமிழக மாணவர்களை அறிவாளிகளாக மாற்றுவதற்காக இதை அவர்கள் சொல்லவில்லை. இந்தியைப் பேச வேண்டும் என்பதற்காகவே ஒரே நாடு, ஒரே கலாச்சாரம், ஒரே மொழி என அவர்கள் ஆதிக்கத்தை வெளிப்படுத்தக் கூடிய ஒன்றாக உள்ளது.
இந்தியை யார் வேண்டுமானாலும் சொல்லிக் கொடுக்கட்டும். பிற பள்ளிகளில் இந்தி கற்றுக் கொடுப்பதை யாரும் எதிர்க்கவில்லை. இந்தியைத் திணிப்பதை எதிர்க்கிறோம்.
தென் மாவட்டங்களில் சாதி ரீதியான கொலை நடக்கிறது. குறிப்பாக மதுரை ,சிவகங்கை பகுதிகளில் சிறுவர்களைக் கொலை செய்கின்றனர். மாணவர்களை தாக்கும் சம்பவமும் நடக்கிறது. சாதிய மோதல்களை தடுக்க புலனாய்வு ரீதியான அமைப்பை ஏற்படுத்த வேண்டும். இது பற்றி சட்டமன்ற கூட்டத் தொடரில் அரசிடம் வலியுறுத்துவோம்” என்று திருமாவளவன் தெரிவித்தார்.
இதையும் படிங்க: இந்தி பேசுபவர்களே இங்க தான் வேலை கேட்டு வராங்க... திருமா பதிலடி!!
இதையும் படிங்க: எப்போது முதல் விஜய்க்கு ஒய் பிரிவு பாதுகாப்பு..? நாள் குறித்த மத்திய அரசு.!