அசாம் மாநிலத்தின் திமா ஹசாவ் மாவட்டத்தில் இந்த விபத்து நடந்துள்ளது. அங்குள்ள 300 அடி ஆழ நிலக்கரி சுரங்கம் ஒன்று எதிர்பாராத விதத்தில் வெள்ளத்தில் மூழ்கியது.
அங்கு பணிபுரிந்த 12 தொழிலாளர்கள் வெள்ளத்தில் சிக்கி வெளியேற முடியாமல் தவித்தனர். ராணுவம், தேசிய பேரிடர் மீட்பு படை, மாநில பேரிடர் மீட்பு படை மற்றும் போலீசார் அவர்களை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர்.
சுரங்க வெள்ளத்தில் சிக்கிய தொழிலாளர்களில் மூன்று பேர் தண்ணீரில் மூழ்கி பலியாகி இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
மற்றவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மயன் குமார் தெரிவித்தார்.
இதையும் படிங்க: இந்தியாவுக்கு எதிராக செயல்பட்டதால் படு பாதாளத்துக்குப் போன செல்வாக்கு...!! ஜஸ்டின் ட்ருடோ பதவி விலகியதின் பின்னணி....
நீச்சல் வீரர்கள், ஹெலிகாப்டர் மற்றும் பொறியியல் வல்லுனர்களும் இந்த பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருப்பதாக ராணுவம் தரப்பில் கூறப்பட்டது.
அருகிலுள்ள பயன்படுத்தப்படாத சுரங்கத்திலிருந்து வெளியேறிய தண்ணீரால் சுரங்கத்தில் வெள்ளம் புகுந்து விட்டதாக சுரங்க துறை அமைச்சர் கௌஷிக் ராய் கூறினார்.
ராணுவத்தினர் வெளியிட்ட மீட்பு பணிகள் பற்றிய படங்கள் சிலவற்றை சமூக ஊடகங்கள் வெளியிட்டு இருந்தன.
கங்கா பகதூர் ஷ்ரத், ஹுசைன் அலி, ஜாகிர் உசேன், சர்பா பர்மன், முஸ்தபா சேக், குஷி மோகன் ராய், சஞ்சித் சர்க்கார், லிஜான் மகர் மற்றும் சரத் கோயாரி உள்ளிட்ட தொழிலாளர்கள் சுரங்கத்துக்குள் சிக்கி இருப்பதாகத் தெரிய வந்துள்ளது.
மீட்புப் பணிகளில் உதவிய ராணுவத்துக்கு முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா நன்றி தெரிவித்தார்.

தண்ணீரை வெளியேற்ற இரண்டு நீர் இறைக்கும் இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இந்தியாவின் கிழக்கு மற்றும் வடகிழக்கு மலைப் பாங்கான பகுதிகளில், சிறிய 'எலிவளை' சுரங்கங்களில் அபாயகரமான சூழ்நிலையில் தொழிலாளர்கள் நிலக்கரியை பிரித்து எடுத்து வருகிறார்கள். சட்டவிரோதமாக நடைபெற்று வரும் இந்த நடவடிக்கைகளில் அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு வருகின்றன.
அவற்றில் கடந்த 2019 ஆம் ஆண்டில் மேகாலயா மாநிலத்தில் இருந்த சட்டவிரோத சுரங்கத்தில் ஆற்று வெள்ளம் புகுந்து 15 தொழிலாளர்கள் பலியானது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: எச்என்பிவி வைரஸ் என்றால் என்ன? அறிகுறிகள் என்ன? கர்நாடக மாநிலத்தில் 2வது குழந்தை பாதிப்பு...