தமிழகத்தில் 2026-ல் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் அரசியல் கட்சிகள் தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக அதிமுகவில் கட்சி பணிகள் மேற்கொள்ள 82 மாவட்டப் பொறுப்பாளர்களை அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி நியமித்து இருந்தார்.
இதனையடுத்து முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாளான கடந்த பிப்ரவரி 24ஆம் தேதி எடப்பாடி பழனிசாமி புதிதாக நியமிக்கப்பட்ட மாவட்டப் பொறுப்பாளர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார். அடுத்து இரண்டாம் கட்டமாக மாவட்ட பொறுப்பாளர்களின் ஆலோசனைக் கூட்டம் 'ஜூம்' வீடியோ கான்ஃபெரன்ஸ் மூலம் கடந்த 9ம் தேதி நடைபெற்றது. ஓவ்வொரு மாவட்ட பொறுப்பாளர்களுடனும் பேசி வந்த எடப்பாடி பழனிசாமி திருச்சி மாவட்ட முறை வந்தபோது திடீரென ஆவேசமானார்.

அப்போது,‘‘திருச்சி மாவட்ட கட்சி நிர்வாகிகள் பலரும் திமுக அமைச்சர்களுடன் தொடர்பிலிருந்து வருகின்றனர். அவர்கள் அனைவரும் அந்த தொடர்புகளை எல்லாம் மறந்துவிட வேண்டும். கடந்த காலங்களில் திருச்சி மாவட்டம் அ திமுகவின் கோட்டையாக இருந்தது. அதே நிலைமையை வரும் சட்டமன்ற தேர்தலில் உருவாக்க வேண்டும். இதற்காகத் திருச்சி மாவட்ட அதிமுக நிர்வாகிகள் அனைவரும் ஒருங்கிணைந்து பணியாற்றியாக வேண்டும். அவ்வாறு கட்சி விதிகளுக்கு உட்பட்டுச் செயல்படாத கட்சி நிர்வாகிகள் கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும்” என பகிரங்கமாக கட்சி நிர்வாகிகளுக்கு எடப்பாடி பழனிசாமி எச்சரிக்கை விடுத்ததாக தலவல் வெளியானது. இது அதிமுகவில் சலசலப்பை ஏற்படுத்தியது.
இதையும் படிங்க: வெறுப்பின் உச்சம்... வீடு தேடிச் சென்ற பாமகவினர் - லெப்ட் ஹேண்டில் டீல் செய்த எடப்பாடியார்..!

இதற்கு பதிலடி கொடுத்த திமுக அமைச்சர் கே.என்.நேரு,'' அதிமுக திமுகவில் கோட்டை அல்ல. எம்.ஜி.ஆர், ஜெயலலிதா காலத்தில் இருந்தே திமுகவின் கோட்டைதான்'' எனக்கூறி புள்ளிவிவரங்களை அடுக்கி இருந்ததோடு, ''உங்கள் கட்சி.. நிர்வாகிகளை நீக்குங்கள் அல்லது நீக்காமல் போங்கள். அதைப்பற்றி எங்களுக்கு என்ன கவலை'' என பதிலடி கொடுத்து இருந்தார்...
இந்த விவகாரம் குறித்து அதிமுகவில் உள்ள மூத்த நிர்வாகிகள் சிலர், ''கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போதே அதிமுக நிர்வாகிகள் பலர் திமுக அமைச்சரிடம் விலைபோய்விட்டனர். காரணம், அமைச்சரின் மகன் அருண் நேரு, பெரம்பலூர் தொகுதியில் போட்டியிட்டார். தொகுதி பெரம்பலூராக இருந்தாலும், திருச்சி புறநகர் மாவட்டத்தின் பகுதிகள்தான் இதில் அதிகம் இடம் பெறுகிறது.

குறிப்பாக சொல்ல வேண்டுமானால், மாநகர் மாவட்டத்தில் முக்கிய நிர்வாகியே தொழில் ரீதியாக திமுக அமைச்சருடன் மறைமுகமாக நட்பு பாராட்டி வருகிறார்கள். தவிர, திருச்சியின் ‘பவல் ஃபுல்’ அமைச்சருடன் திமுகவை சேர்ந்த ஒன்றியச் செயலாளர்களே நேரடியாக பேசுவதற்கு தயக்கம் காட்டுவார்கள். ஆனால், அதிமுக ஒன்றியச் செயலாளர்கள் அமைச்சரை ‘மாமா’ என்றுதான் உரிமையுடன் அழைப்பார்கள். அந்த அமைச்சரும் அதிமுகவினர் எப்போது கூப்பிட்டாலும் இவர்களது அழைப்பை உடனே எடுத்துவிடுவார்.
இப்படி இருந்தால், அதிமுக எப்படி திருச்சியில் வெற்றி பெறும்? கட்சிக்கு உண்மையாக இருக்காத ஒன்றிய, நகர நிர்வாகிகளை எடப்பாடி பழனிசாமி விடுத்த எச்சரிக்கைக்குப் பிறகும் தொடர்பு வைத்திருந்தால் நடவடிக்கை எடுக்கவேண்டும். அப்போதுதான் எடப்பாடி பழனிசாமியின் 2026 கனவு நனவாகும்’’ என்கின்றனர்.
இதையும் படிங்க: தயாநிதி மாறனுக்கு எதிரான வழக்கை எதிர்கொள்ளத் தயார்.. விடுவிக்கக்கோரிய மனுவை திரும்ப பெற்ற இபிஎஸ்..!