தொகுதி மறுசீரமைப்பு என்பது தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த தென்னிந்தியாவுக்கே அபாயமான செயல். இதில் நமக்குள்ள நிச்சயமாக கருத்து வேறுபாடு இருக்காதுன்னு நான் நினைக்கிறேன், இருக்கக்கூடாதுன்னு விரும்புறேன் என அனைத்துக் கட்சி கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்துக் கட்சிக்கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. தலைமைச் செயலகத்தில் நடைபெற்று வரும் கூட்டத்தில் செல்வப்பெருந்தகை, ஜெயக்குமார், அன்புமணி ராமதாஸ், திருமாவளவன், முத்தரசன், கமல் ஹாசன், புஸ்ஸி ஆனந்த் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். அனைத்துக் கட்சி எம்.எல்.ஏக்கள் குழு குடியரசுத் தலைவரைச் சந்தித்து தீர்மானத்தை நேரில் வழங்கத் திட்டமிட்டுள்ளன.

இக்கூட்டத்தில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு மிகப்பெரிய உரிமைப் போராட்டத்தை நடத்த வேண்டிய நிலைமைக்கு தள்ளப்பட்டிருக்கிறதை உணர்த்துவதற்காக தான், இந்த அனைத்து கட்சி கூட்டத்தை ஏற்பாடு செய்திருக்கிறோம். தொகுதி மறுசீரமைப்பு கத்தி தென்னிந்தியாவோட தலைக்கு மேல் தொங்கிக்கிக்கொண்டு இருக்கிறது. இதனால் தமிழ்நாடு கடுமையாக பாதிக்கப்படவுள்ளது. இன்று தமிழ்நாடு 39 நாடாளுமன்ற தொகுதி உள்ளது, இதை குறைக்கிற அபாயம் நெருங்கிக்கொண்டு இருக்கிறது.
ஒன்றிய அரசு 2026 ஆம் ஆண்டுல மக்களவை தொகுதிகளுடைய எண்ணிக்கையை மறு சீரமைப்பு செய்யப்போகிறது. பொதுவாக இதை மக்கள் தொகையை கணக்கிட்டு தான் செய்வார்கள். மக்கள் தொகையை கட்டுப்படுத்தணும் என்பது இந்திய நாட்டோட மிக முக்கியமான இலக்கு, அந்த இலக்குல நம்ம தமிழ்நாடு வெற்றி பெற்றிருக்கு. பல பத்தாண்டுகளாக வெற்றிகரமான குடும்ப கட்டுப்பாடு திட்டங்கள், பெண்கள் கல்வி மற்றும் சுகாதார முன்முயற்சிகள் மூலமாக நாம் இதை சாதித்திருக்கிறோம். இப்போது இருக்கும் 543 நாடாளுமன்றத் தொகுதிகள் உள்ளது, மக்கள் தொகை குறைவாக இருப்பதனால் நம்முடைய தொகுதிகளின் எண்ணிக்கை குறைக்கப்பட வாய்ப்பு உள்ளது.

இதையும் படிங்க: இந்தி மொழிய திணிக்காதீங்க..! மொழிச் சமத்துவமே திமுகவின் இலட்சியம் - முதல்வர் ஸ்டாலின்..!
தமிழ்நாடு மொத்தமாக எட்டு மக்களவை இடங்களை இழக்கும் எனக்கூறப்படுகிறது. அதாவது 39 எம்பிக்கள் கிடைக்க மாட்டாங்க. நாடாளுமன்ற தொகுதிகளோட எண்ணிக்கை 848 ஆக உயர்த்தப்பட்டு, தற்போதைய விகிதாச்சரத்தின்படி மறுசீரமைப்பு செய்யப்பட்டா நமக்கு கூடுதலா 22 தொகுதிகள் கிடைக்கணும். ஆனால் தற்போதைய மக்கள் தொகையின்படி மறுசீரமைப்பு செஞ்சா 10 தொகுதிகள் தான் கூடுதலாக கிடைக்கும். இதனால் நாம் 12 கூடுதல் தொகுதிகளை இழக்க நேரிடும். இந்த ரெண்டு முறைகளிலுமே நமக்கான பிரதிநிதித்துவம் குறைந்து, அதிக மக்கள் கொண்ட மாநிலங்களுக்கு அதிக பிரதிநிதித்துவம் கிடைக்கும்.
இதனால் தமிழ்நாட்டுடைய குரல் நசுக்கப்படும்.இது வெறும் உறுப்பினர்களோட எண்ணிக்கையை பற்றிய கவலை இல்லை, நம்ம தமிழ்நாட்டுடைய உரிமை சார்ந்த கவலை. நம்ம தமிழ்நாடு எதிர்கொள்ளவிருக்கும் இந்த முக்கியமான பிரச்சனையில், எல்லா அரசியல் கட்சிகள் மற்றும் தலைவர்கள் ஒன்றிணைய வேண்டும் என்ற வேண்டுகோளை அனைவர் முன்பும் நான் வைக்கிறேன். எல்லா கட்சிகளும் கட்சி எல்லைகளை கடந்து குரல் கொடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன்.

மக்கள் தொகை அடிப்படையில் மறு சீரமைப்பு செய்தால், அது தமிழ்நாட்டு மக்களுடைய பிரதிநிதித்துவ எண்ணிக்கையை குறைத்துவிடும். எனவே இந்த சதியை நாம் அனைவரும் சேர்ந்து முறியடித்தாக வேண்டும். இது மக்கள் தொகை அடிப்படையில் மக்களவை, மாநிலங்களவை மற்றும் சட்டமன்ற பேரவைகளுடைய இடங்கள் குறைக்கணுன்னு சொல்றது, மக்கள் தொகை கட்டுப்பாடு என்ன கொள்கையை முனைப்பாக செயல்படுத்தி நாட்டு வளர்ச்சியில் பெரும் பங்காற்றியுள்ள தென்மாநிலங்களுக்கு தரப்படுகிற தண்டனையாகத்தான் அமையும். இதை முன்கூட்டியே உணர்ந்து தான் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 14 ஆம் நாள் தமிழ்நாடு சட்டமன்றத்தில் நம்ம தீர்மானத்தை நிறைவேற்றினோம்.
இந்த தொகுதி மறுசீரமைப்பு என்பது தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த தென்னிந்தியாவுக்கே அபாயமான செயல். இதில் நமக்குள்ள நிச்சயமாக கருத்து வேறுபாடு இருக்காதுன்னு நான் நினைக்கிறேன், இருக்கக்கூடாதுன்னு விரும்புறேன். இந்திய நாட்டோட கூட்டாட்சி அமைப்புக்கும், தென்மாநிலங்களோட அரசியல் உரிமைக்கும் இது அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது. இது இந்திய ஜனநாயகத்தில் தமிழ்நாட்டுக்கு கிடைக்கிற அரசியல் பிரதிநிதித்தும் மீதான நேரடி தாக்குதல். இப்படி ஒரு சம நீதியற்ற அநீதியான தொகுதி மறுசீமைப்பு செயல்படுத்தப்பட்டால், இந்திய அரசியலில் தமிழ்நாட்டுடைய குரல் நெறிக்கப்படும்.

தமிழ்நாட்டுடைய நலன் மற்றும் தமிழ்நாட்டு மக்களுடைய நலன் ஆகியவற்றை பாதுகாப்பதில், நம் மாநிலத்திற்கு இருக்கக்கூடிய பலம் குறைக்கப்படும். 39 எம்பிக்கள் இருக்கும்போதே நாம் எழுப்புற குரலையே ஒன்றிய அரசு ஏற்க மறுக்கிறது. இந்நிலையில், எம்பிக்கள் எண்ணிக்கை இன்னும் குறைந்தாலோ, குறைக்கப்பட்டாலோ அது தமிழ்நாட்டுக்கு அழிக்க முடியாத அநீதியா மாறும் என்பதை எல்லோரும் கருத்தில் கொள்ள வேண்டும். எனவே நம்முடைய நிலைப்பாட்டை அழுத்தம் திருத்தமாக ஒரே சிந்தனையோடு எடுத்துரைக்க வேண்டும் என்றார்.
இதையும் படிங்க: முதலமைச்சர் தலைமையில் இன்று அனைத்துக் கட்சி கூட்டம்..! முக்கிய விவகாரங்கள் குறித்து காரசார விவாதம்!