மன்னார்குடியில் டிடிவி தினகரன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “பேரறிஞர் அண்ணா இருந்திருந்தால் காலத்தின் தன்மையைக் கருதி மும்மொழிக் கொள்கையை ஏற்றுக் கொண்டிருப்பார். திமுகவினர் தொடர்புடைய பள்ளிகளிலும் அவர்களின் பிள்ளைகள் படிக்கும் பள்ளிகளிலும் மூன்றாவது மொழியாக இந்தி கற்பிக்கப்படுகிறது. மெட்ரிகுலேஷன், சிபிஎஸ்இ பள்ளிகளிலும் மூன்றாவது மொழி கற்பிக்கப்படுகிறது. ஏழை, எளிய மாணவர்கள் பயிலும் அரசு பள்ளிகளில் மட்டும் மூன்றாவது மொழி இல்லை. இது முற்றிலும் தவறு.

முதல்வர் ஸ்டாலினுக்கு தைரியம் இருந்தால், மூன்றாவது மொழிக் கொள்கையை அனுமதிப்பது குறித்தும், இந்தியைப் பயிற்றுவிப்பது குறித்தும் பொதுவாக்கெடுப்பு நடத்தி முடிவு செய்ய வேண்டும். மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தமிழகத்தைப் பற்றி அவதூறாக எதையும் பேசவில்லை. புதிய கல்விக் கொள்கையை ஏற்றுக்கொள்வதாக திமுக தலைமையிலான தமிழக அரசு ஏற்கனவே எழுத்துப்பூர்வமாக ஒப்புதல் அளித்திருந்தது. பின்னர் அதிலிருந்து பின்வாங்கி விட்டனர். இதைத்தான் மத்திய அமைச்சர் குறிப்பிடுகிறார்.

ஆட்சியில் இல்லாத போது பிரதமருக்கு திமுகவினர் கறுப்புக்கொடி காட்டினர். ஆட்சிக்கு வந்த பிறகு கருணாநிதியின் நாணயம் வெளியிடவும், சிலை திறக்கவும், தமிழகத்தில் நடைபெறும் நிகழ்ச்சிகளுக்காகவும், மத்திய அமைச்சர் ராஜநாத் சிங், முன்னாள் குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு, பிரதமர் மோடி ஆகியோரை டெல்லிக்கு நேரில் சென்று அழைத்து காத்துக் கிடந்தனர். ஆனால், தமிழகத்துக்கு மத்திய அரசு தரவேண்டிய நிதியைப் பெறுவதற்கு நேரில் சென்று பிரதமரை சந்தித்து கேட்க மறுக்கின்றனர்.
மத்திய அரசு நிதி கொடுக்காமல் போனாலும் பார்த்துக் கொள்வோம் என கல்வி அமைச்சர் சொல்கிறார்.
இதையும் படிங்க: எனக்கு 8 மொழிகள் தெரியும், குழந்தைகளால் பலமொழிகளைக் கற்கமுடியும்.. மும்மொழி கொள்கைக்கு சுதா மூர்த்தி ஆதரவு..!
தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் மின்கட்டணம் கூட செலுத்த முடியாமல் ஆசிரியர்கள் தங்கள் சொந்த பணத்தை செலுத்தி வரும் நிலை உள்ளது. திமுகவை பொறுத்தவரை கச்சத்தீவு, காவிரி பிரச்சினை, ஹைட்ரோ கார்பன் திட்டம், நீட் தேர்வு, டங்ஸ்டன் திட்டம், புதிய கல்விக் கொள்கை என முதலில் ஒப்புதல் தெரிவித்தது விட்டு, பின்னர் மக்கள் எதிர்க்கிறார்கள் என்றவுடன் அதிலிருந்து பின்வாங்கி விடுவது வழக்கமாகவே வைத்துள்ளனர்.

இவற்றையெல்லாம் தமிழக மக்கள் புரிந்து கொள்வார்கள். தமிழகத்தில் பள்ளி அருகேயே போதை பொருட்களின் விற்பனை அதிகரித்துள்ளது. இளம் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலையும் நிலவுகிறது. சட்டம் ஒழுங்கு முற்றிலும் சீர்கெட்டுள்ளது. அமமுக தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ளது. அதிமுகவை பொறுத்தவரை ஒரு சிலரை தவிர்த்து சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக ஒருங்கிணைந்து செயல்படுவோம். இரட்டை இலையை வைத்திருப்பவர்தான் உண்மையான அதிமுக என நினைத்துக் கொண்டு இருக்கும் தொண்டர்கள், தேர்தலுக்குப் பின்பு அதனையும் உணர்வார்கள்.” என்று டிடிவி தினகரன் தெரிவித்தார்.
இதையும் படிங்க: மூன்று மொழிக் கொள்கை என்றால் என்ன..? தமிழ்நாடு-மத்திய அரசு மோதல் ஏன்..? இத படிங்க..!