மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா 2 நாள் பயணமாக தமிழ்நாட்டிற்கு வந்துள்ளார். இதை அடுத்து அவர் இன்று காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை பாஜக நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். இந்த ஆலோசனையில் சட்டப்பேரவை தேர்தல் கூட்டணி, பாஜக புதிய மாநிலத் தலைவர் நியமனம் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஒருபுறம் தமிழக பாஜக தலைவராக நயினார் நாகேந்திரன் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். இந்த நிலையில், மறுபுறம் சென்னையில் உள்ள ஐடிசி ஹோட்டலில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து பேசினார்.

இந்த சந்திப்புக்கு பின்னர் எடப்பாடி பழனிசாமியும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய அமித்ஷா, மீண்டும் அதிமுக - பாஜக கூட்டணி அமைந்துள்ளது. தேசிய அளவில் நரேந்திர மோடி தலைமையிலும், தமிழ்நாட்டில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலும் கூட்டணி செயல்படுகிறது. 1998ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணி இணைந்து 30 தொகுதிகளில் வென்றது. அதன்பின் மீண்டும் இயல்பாக அமைந்துள்ள கூட்டணி இது. இந்த கூட்டணிக்காக அதிமுக தரப்பில் எந்த நிபந்தனையும் விதிக்கப்படவில்லை.
இதையும் படிங்க: அதிமுக - பாஜக கூட்டணியால் எந்த பயனும் ஏற்படாது... குண்டை தூக்கிப்போட்ட மூத்த பத்திரிகையாளர்!!

அதிமுக - பாஜக என்பது உறுதியான கூட்டணியாகும். இதில் எந்த குழப்பமும் கிடையாது. 2026 சட்டமன்றத் தேர்தலில் கூட்டணி ஆட்சிதான் என்றார். மேலும் தமிழ்நாட்டில் ஆட்சியில் இருக்கும் திமுக டாஸ்மாக் ஊழல், மணல் கொள்ளை ஊழல், பணமோசடி உள்ளிட்டவை மூலமாக சுமார் ரூ.40 ஆயிரம் கோடியில் ஊழல் செய்துள்ளது. அதேபோல் மக்களை குழப்புவதற்காக திமுகவினர் தொகுதி மறுசீரமைப்பு, மும்மொழி கொள்கை உள்ளிட்ட விவகாரங்களை கிளப்பி வருகிறார்கள். நீட் தேர்வு விவகாரத்தில் அதிமுக மற்றும் பாஜக இணைந்து அமர்ந்து ஒரு முடிவை எடுப்போம்.

தமிழ்நாட்டையும், தமிழக மக்களையும் பாஜக கவுரவமாக கருதுகிறது என்று தெரிவித்தார். இதனிடையே செய்தியாளர்கள் குறுக்கிட்டு பல்வேறு கேள்விகளை எழுப்பினர். அதற்கு அமித்ஷா பதிலளித்து வந்தார். அப்போது அமித்ஷா அண்ணாமலையிடம் பத்திரிகையாளர்கள் கேள்வி குறித்து கூறியதாக தெரிகிறது. இதை அடுத்து மைக்கை வாங்கிய அண்ணாமலை, பத்திரிகையாளர்களிடம், மத்திய உள்துறை அமைச்சரும், முன்னாள் முதலமைச்சரும் தங்களது அனைத்து கேள்விகளுக்கும் பதிலளிப்பார்கள் எனவும் ஒரு பத்திரிகையாளர் ஒரு கேள்வி மட்டுமே கேட்குமாறும் கேட்டுக்கொண்டார்.
இதையும் படிங்க: அண்ணாமலைக்கு என்ன பதவி தெரியுமா..? அறிவித்தார் அமித் ஷா... பாஜக அசத்தல் ப்ளான்..!