தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் அலுவலகம் மற்றும் மதுபான ஆலைகளில் அமலாக்கத் துறை மேற்கொண்ட சோதனையில் சுமார் ரூ. 1,000 கோடி ஊழல் செய்யப்பட்டிருப்பதாக அமலாக்கத் துறை அறிக்கை வெளியிட்டது. இதை அடுத்து டாஸ்மாக் தலைமை அலுவலகத்தை முற்றுகையிட போவதாக பாஜகவினர் அறிவித்திருந்தனர். அதன்படி, சென்னையில் இன்று பாஜக சார்பில் போராட்டம் நடத்த காவல்துறையிடம் அனுமதி கோரப்பட்டது. ஆனால் போலீஸார் அனுமதி அளிக்காமல் போராட்டத்தில் ஈடுபட வந்தவர்களை தடுத்து நிறுத்தினர். மறுபுறம் போராட்டத்தில் பங்கேற்க வந்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையையும் போலீசார் கைது செய்தனர். இதைதொடர்ந்து தமிழிசை சவுந்தரராஜன், பொன்.ராதாகிருஷ்ணன், நயினார் நாகேந்திரன், வானதி சீனிவாசன் உள்ளிட்ட தலைவர்கள் போலீசாரால் கைது செய்யப்பட்டு திருமண மண்டபத்தில் அடைத்து வைக்கப்பட்டனர்.

இந்த நிலையில் கைது செய்யப்பட்ட பாஜக தொண்டர்கள், பெண்கள் பலரும் மாலை 6 மணி ஆகியும் விடுவிக்கப்படாததால் தங்களை இன்னும் விடுவிக்காதது ஏன் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அண்ணாமலை - காவல் துறையினர் இடையே நீண்டநேர வாக்குவாதத்துக்குப் பிறவு இன்றிரவு 7 மணிக்கு அண்ணாமலை மற்றும் பாஜகவினரை காவல் துறையினர் விடுதலை செய்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, தேதி இனி சொல்ல மாட்டோம். காவல்துறை மீது நம்பிக்கை இழந்துவிட்டோம். எந்த ஆர்ப்பாட்டத்திற்கும் அனுமதி கேட்டு காவல்துறையிடம் அனுமதி கேட்கமாட்டோம். அடுத்த ஒரு வாரத்திற்கு நடக்கக் கூடிய போராட்டத்தில், டாஸ்மாக்கில் உள்ள எல்லா கடைகளிலும் பாஜக பெண் தொண்டர்கள் முதல்வரின் பிரேம் போட்ட புகைப்படத்தை ஒட்ட போகிறோம்.
இதையும் படிங்க: அமலாக்கத் துறை அறிக்கையால் ஆடிபோன திமுக.. தூக்கி எறியப்படும் திமுக ஆட்சி.. எல்.முருகன் ஆவேசம்!!
இன்னொரு போராட்டம் என்னவென்றால் டாஸ்மாக் கடைகளுக்கு பூட்டு போட்டு போராட்டம் நடத்துவோம். ஏப்ரல் முதல் வாரத்தில் பாஜக தலைவர்கள், தொண்டர்கள் டாஸ்மாக் கடைகளை மூடி பூட்டுப்போடுவார்கள். அடுத்த 15 நாட்களுக்குள் இந்த இரண்டு போராட்டமும் நடைபெறும். சென்னையில் 22ஆம் தேதி ஒரு போராட்டம் நடைபெறும். காவல்துறை பாஜகவுக்கு மரியாதை கொடுக்காத வரை காவல்துறைக்கு பாஜக மரியாதை கொடுக்காது. பாஜக எப்போதும் அறவழி போராட்டம்தான் நடத்துகிறது. எங்களுக்கு அனுமதி வழங்காதபோது காவல்துறை மீது வைத்திருக்கிற, நம்பிக்கையை மரியாதையை இழந்திருக்கிறோம். அடுத்த போராட்டம் கட்டாயமாக நடக்கும். முடிந்தால் காவல்துறை எங்களை தடுத்து பார்க்கட்டும்.

இனி தமிழ்நாட்டில் யூனிபார்ம் போட்ட எந்தவொரு போலீசுக்கும் தூக்கம் இருக்கக் கூடாது. விதவிதமான போராட்டம், ஆர்ப்பாட்டம் நடைபெற்றுக்கொண்டே இருக்கும். திமுகவை காக்கா பிடித்து கமிஷனராக, டிஜிபியாக கோந்து போட்டு உட்காந்திருக்கிறார்கள். இத்தனை காலமாக காவல்துறைக்கு ஆதரவாக பேசியவன் நான். ஆனால் எங்களுடைய தொண்டர்களை இழிவுப்படுத்திய பிறகு, இனி காவல்துறையை நான் தூங்கவிடமாட்டேன். டாஸ்மாக்கிற்காக முன்கூட்டியே எங்களை கைது செய்திருக்கிறார்கள். சண்டை போட்டுத்தான் நாங்கள் வெளியே வந்திருக்கிறோம். இந்தசமூதாயம் திருந்த வேண்டும் என்பதற்காகத்தான் நாங்கள் போராடிக்கொண்டிருக்கிறோம். அதற்கு மரியாதை கொடுக்கத் தெரியவில்லை. மண்டபத்தில் அடைத்து வைக்காமல் சென்னை முழுவதும் சுற்றுவது, டாய்லெட் இல்லாத மண்டபத்தில் அடைத்து வைப்பது, 6 மணிக்கு மேல் பெண் தொண்டர்களுக்கு சட்டப்படி மரியாதை கொடுப்பதில்லை.
ஆனால் இரவு வரை அடைத்து வைத்திருப்போம் என்றால் என்ன செய்வது? அந்த கிரிமினல் ரகுபதியிடம் நல்லா சொல்லிடுங்க. அளவுக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கு அமைச்சர் ரகுபதி மீது நடந்துகொண்டிருக்கிறது. இவர் சட்டத்துறை அமைச்சராக இருக்கிறார். இவர் சட்டத்தை பற்றி பேசுகிறாரா. அவருக்கு எந்த அருகதையும் இல்லை. டாஸ்மாக் ஊழலை பொறுத்தவரை தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் தான் ஏ1. தைரியம் இருந்தால் என்னை கைது செய்ய சொல்லுங்கள். செந்தில் பாலாஜிக்கு சிறையில் இருந்து வந்த பிறகு மீண்டும் அதே துறையை கொடுக்கிறார்கள் என்றால் எப்படி குற்றவாளி இல்லை என்று சொல்லுவேன். உச்ச நீதிமன்றமே செந்தில் பாலாஜியை பார்த்து நீங்கள் இன்னும் அமைச்சராக தொடர வேண்டுமா என்று கேட்கிறது என்று கடுமையாக சாடினார்.
இதையும் படிங்க: என் பொறுமையைச் சோதிக்காதீங்க... கடுப்புடன் காவல்துறையை எச்சரித்த அண்ணாமலை..!