தெலங்கானா தலைநகர் ஹைதராபாதில் உள்ள குஷைகுடா என்ற பகுதியைச் சேர்ந்தவர் கமலா தேவி. வயது 70. ராஜஸ்தானைச் சேர்ந்த இவர், 30 ஆண்டுகளுக்கு முன் கணவர் புப்ராஜு சவுத்ரி உடன் ஹைதராபாதில் குடியேறினார். 15 ஆண்டுகளுக்கு முன் கணவர் புப்ராஜு சவுத்ரி உடல்நலக் குறைவால் இறந்து விட்டார்.
இந்த நிலையில் தனது வீட்டின் முன் உள்ள, கணவருக்கு சொந்தமான கடைகளின் வருமானத்தின் வாயிலாக வாழ்க்கையை நடத்தி வந்தார். இதில் ஒரு கடையில் புலம்பெயர் தொழிலாளியான 17 வயது சிறுவன் வேலை செய்து வந்தான். அந்த சிறுவனை தான் கமலா தேவி, அனைத்து தேவைகளுக்கும் தொடர்பு கொள்வதாக கூறப்படுகிறது. ஊரில் இருக்கும் மூதாட்டியின் உறவினர்களும் அந்த சிறுவனுக்கு அழைத்தே மூதாட்டிக்கு தேவையானதை செய்து கொடுக்க வலியுறுத்தி வந்துள்ளனர்.

இந்த நிலையில் அந்த சிறுவனுக்கும், கமலா தேவிக்கும் இடையே சமீபத்தில் வாக்குவாதம் ஏற்பட்டது. கமலா தேவி தன்னை துன்புறுத்தியும், அவமதித்தும் வருவதாக அந்த சிறுவன் எண்ணி உள்ளான். தன்னை கீழ்தரமாக நடத்துவதாகவும், தனக்கு உரிய மரியாதையை மூதாட்டி கொடுப்பது இல்லை எனவும் எண்ணி உள்ளான். மூதாட்டி தன்னிடம் அட்வாண்டேஜ் எடுத்து நடந்து கொள்கிறார் என்றும் பொருமி உள்ளான்.
இந்த நிலையில் கடந்த 11ம் தேதி குஷைகுடாவில் உள்ள கமலா தேவி வீட்டிற்குள் வாடகை தருவதுபோல் சென்ற சிறுவன், மூதாட்டியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளான். மூதாட்டி வழக்கம் போல் சிறுவனிடம் பேசிய நிலையில், ஆத்திரமடைந்த சிறுவன், தான் மறைத்து வைத்திருந்த இரும்புக்கம்பியால் அவரை கொடூரமாக தாக்கி கொலை செய்தான். பின், அவர் உடல் மீது ஏறி நடனமாடினான். இதை தன் மொபைல் போனில் அந்த சிறுவன் வீடியோ எடுத்தான்.
இதையும் படிங்க: பூட்டிய காருக்குள் சிக்கிய குழந்தைகள்.. மூச்சு திணறி பலியான சோகம்.. ஆட்டோமெட்டில் லாக்கால் வந்த வினை..!

அதன் பின்னர் மூதாட்டி கமலா தேவியின் கழுத்தில் சேலையை கட்டி மின்விசிறில் துாக்கிலிட்டு, அங்கிருந்து சிறுவன் தப்பிச் சென்றான். திங்கட்கிழமை, வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசியதை அடுத்து, உள்ளூர்வாசிகள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். குஷைகுடா போலீசார் வீட்டின் பூட்டை உடைத்து திறந்தபோது, கமலா தேவி அழுகிய நிலையில் கிடப்பதைக் கண்டனர். உறவினர்கள் அளித்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வீட்டின் அருகே உள்ள சிசிடிவி கேமராக்கள் ஆய்வு செய்யப்பட்டதாகவும், மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டு, கொலைக்கான காரணத்தைக் கண்டறிய விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் தெரிவித்தனர். இந்த நிலையில் கர்நாடகாவின் பெங்களூரில் உள்ள கமலா தேவியின் உறவினரை மொபைல் போனில் அழைத்த சிறுவன், தான் கமலா தேவியை கொலை செய்து விட்டதாக கூறி உள்ளான்.

இதை உறவினர் நம்பவில்லை. உடனே, தான் கொலை செய்த வீடியோவை அவருக்கு சிறுவன் அனுப்பினான். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த உறவினர், போலீசாருக்கு தகவல் கொடுத்தார். சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார், அழுகிய நிலையில் இருந்த கமலா தேவியின் உடலை கைப்பற்றி, சிறுவனை கைது செய்தனர். சிறுவன் மனநலம் பாதிக்கப்பட்டவரா என்றும் போலீசார் விசாரிக்கின்றனர்.
17 வயது சிறுவன் 70 வயது மூதாட்டியை கொன்றது மட்டும் அல்லாமல், அவரது உடல் மீது நடனமாடி அதை வீடியோவாக எடுத்து வெளியிட்டு, தான் கொலை செய்ததை உளறி கொட்டிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: ஓடும் ரயிலில் பாலியல் வன்கொடுமை.. கழிவறையில் சிறுமிக்கு நேர்ந்த துயரம்.. வீடியோ எடுத்து வைத்த காமுகன்..!