தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத இயக்குநர்களில் ஒருவர் வெற்றிமாறன். அவர் இயக்கும் ஒவ்வொரு படமும் வணிக ரீதியாகவும், கலைரீதியாகவும் அவ்வளவு நேர்த்தியுடன் வெளியாகிறது. ஏதேனும் ஒரு தேசிய விருதை எட்டிப் பிடிக்கும் தகுதி வாய்ந்த படங்களை எடுத்து வரும் வெற்றிமாறன் அடுத்த என்ன நாவலை மையப்படுத்தி படமெடுக்கப் போகிறார் என்பதே இளம் இயக்குநர்களின் புதிர்போட்டியாக இருந்து வருகிறது.

அதற்கு காரணமும் இருக்கிறது. லாக்கப் என்ற சிறுகதையை தழுவி விசாரணை என்ற படத்தையும், வெக்கை என்ற நாவலைத் தழுவி அசுரன் என்ற படமாகவும், துணைவன் என்ற சிறுகதையைத் தழுவி விடுதலை என்ற படமாகவும் எடுத்திருந்தார் வெற்றிமாறன். அந்த வகையில் சி.சு.செல்லப்பா எழுதிய வாடிவாசல் நாவலை திரைப்படமாக எடுக்கப் போவதாக அவர் அறிவித்த போது எதிர்பார்ப்பு பன்மடங்காகியது. ஏனெனில் தமிழ் இலக்கிய உலகில் வாடிவாசல் ஒரு கல்ட் கிளாசிக்.
இதையும் படிங்க: கொடிய நோயால் பாதிக்கப்பட்ட பிரபல நடிகர்... காப்பாற்றும்படி உருக்கமான வீடியோ!!

அத்தகைய ஒரு நாவலை அதுவும் சூர்யாவை வைத்து எடுக்கும்போது எதிர்பார்ப்பு எகிறத்தானே செய்யும். கடந்த ஆண்டு வாடிவாசல் படத்தின் சூர்யாவின் அறிமுகத் தோற்ற வீடியோ வெளியாகி அட போட வைத்தது. இதற்காக ஜல்லிக்கட்டு காளை ஒன்றை வாங்கி சூர்யா பழக்குவதாகவும் செய்திகள் வெளிவந்தன. ஆனால் திடீரென்று சூர்யா, அடுத்தடுத்த படங்களில் பிஸியாகி விட்டார். வெற்றிமாறனும் அமைதியாகி விட்டார். ஐயகோ, வாடிவாசல் அவ்வளவு தானா என்று ரசிகர்கள் சோர்ந்து போய் இருந்தனர்.

அவர்களுக்கு க்ளுக்கோஸ் ஏற்றுவது போல் ஜில்லென்ற ஒரு அப்டேட்டை தந்துள்ளார் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ். அதாவது வெற்றிமாறனுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்த அவர், வாடிவாசல் படத்திற்கான பாடல் கம்போசிங் தொடங்கி விட்டதாக கூறி வயிற்றில் வாட்டர்மெலன் ஜுசை வார்த்துள்ளார். சூர்யா தற்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரெட்ரோ படத்தில் நடித்து முடித்துள்ளார். அடுத்து ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் தனது 45-வது படத்தில் நடிக்க உள்ளார். அதனை முடித்தபிறகு வாடிவாசலுக்கு வந்துவிடுவார் என்று கோடம்பாக்கம் பட்சிகள் கூவுகின்றன.
தனது படங்களுக்கு குறைந்தது ஒரு வருடம், இரண்டு வருடம் படப்பிடிப்பு நடத்துவதுதான் வெற்றிமாறனின் பாணி. அப்படிப்பார்த்தால் வாடிவாசல் 2027-ம் ஆண்டு தான் வெளியாகும் என அவரது ரசிகர்கள் கூறுகின்றனர். எப்படியாயினும் வெற்றிமாறன் படத்தின் வேலைகள் தொடங்கி விட்டன என்பதே இப்போதைக்கு இனிப்பான செய்தியாக இருக்கிறது.
இதையும் படிங்க: ஓடிடிக்கு வரும் பாலியல் தொழிலாளியின் கதை... ஆஸ்கர் விருதால் அதிக எதிர்பார்ப்பு!!