மகாராஷ்டிரா சட்டசபை பட்ஜெட் கூட்டத் தொடரில், சமாஜ்வாதி எம்எல்ஏ அபு ஆஸ்மி, முகலாய மன்னர் அவுரங்க சீப்பை புகழ்ந்து பேசியதால் சர்ச்சை வெடித்தது. இந்துக்களுக்கு எதிராக கொடுங்கோல் ஆட்சி செய்த முகலாய மன்னர் அவுரங்க சீப்பின் கல்லறை மகாராஷ்டிராவில் இருக்கக் கூடாது என, இந்துத்வா அமைப்புகள் குரல் எழுப்பின. மகாராஷ்டிராவின் குல்தாபாத்தில் அமைந்துள்ள அவுரங்க சீப் நினைவிடத்தை அரசு உடனே அகற்ற வேண்டும் என, 17ம் தேதி பஜ்ரங்கதள் உள்ளிட்ட இந்துத்வா அமைப்புகள் நாக்பூரில் போராட்டத்தில் ஈடுபட்டன. அப்போது குரான் வாசகங்கள் எழுதிய துணி எரிக்கப்பட்டதாக வதந்தி கிளம்பியதால் இரு தரப்பினர் இடையே கலவரம் வெடித்தது.

இது குறித்து விசாரித்த போலீசார், கலவரத்துக்கு மூல காரணமாக இருந்ததாக சிறுபான்மையினர் ஜனநாயக கட்சியை சேர்ந்த பாஹிம் கான் என்பவரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். தொடர்ந்து தாமாக முன் வந்து சரண் அடைந்தோர், போலீசாரால் அடையாளம் காணப்பட்டோர் என கலவரத்தில் தொடர்புடைய 104 பேர் கைது செய்யப்பட்டனர்.
சிறுபான்மையினர் ஜனநாயக கட்சியின் செயல் தலைவர் ஹாமித் இன்ஜினியர் கைது செய்யப்பட்டார்.இந்த நிலையில், நாக்பூர் கலவர விசாரணை நிலவரம் குறித்து முதலமைச்சர் தேவேந்திர பட்னவிஸ் விளக்கம் அளித்துள்ளார். கலவரம் வெடித்த 5 மணி நேரத்துக்குள் போலீசார் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இதையும் படிங்க: நாக்பூர் கலவரம்: ‘புனித குர்ஆன் வசனம் உள்ள எந்த துணியும் எரிக்கப்படவில்லை’.. மகாராஷ்டிரா முதல்வர் பட்நாவிஸ் விளக்கம்..!

இன்னும் விசாரணை தொடர்கிறது. கடைசி குற்றவாளி பிடிபடும் வரை நடவடிக்கை ஓயாது. சேதம் அடைந்த பொதுச் சொத்துக்களை ஈடுகட்ட, கலவரத்துக்கு காரணமானவர்களிடம் இருந்து பணம் வசூலிக்கப்படும். சமூக வலைதலங்கள் மூலம் வதந்தி பரப்பி கலவரத்தை பெரிது படுத்த முயன்றவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும். இதில் வெளிநாட்டு சக்திகளுக்கு தொடர்பு உள்ளதா என்பதை இப்போது சொல்ல முடியாது. இன்னும் விசாரணை பல கட்டங்களுக்கு நகர வேண்டி உள்ளது. மகாராஷ்டிரா அரசு அதன் பாணியில் செயல்படும்.

வதந்திகளை பரப்பியோரும் இணை குற்றவாளிகளாகவே கருதப்படுவர். அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை பாயும். நாக்பூருக்கென தனி கலாசாரம் உள்ளது. நாக்பூரில் இத்தனை பெரிய கலவரம் வெடித்ததில்லை. போலீசார், பொதுமக்கள் மீது கல்வீச்சு, வாகனங்களை உடைத்தல் போன்றவற்றை பொறுத்துக்கொள்ள முடியாது. போலீசார் மீது தாக்குதல் நடத்தியவர்கள் அதற்கான தண்டனையை அனுபவித்தே தீர வேண்டும். தேவைப்பட்டால் புல்டோசர் பயன்படுத்தவும் தயங்காது என முதலமைச்சர் பட்னாவிஸ் கூறினார்.

இந்நிலையில் வன்முறை சம்பவம் தொடர்பாக கைதாகி சிறையில் உள்ள பாஹிம் கானின் வீட்டை இடிக்க மாநகராட்சி முடிவு செய்து அதனை செயல்படுத்தி உள்ளது. சஞ்சய் பாக் காலனியில் உள்ள பாஹிம் கானின் இரட்டை மாடி வீடு நகராட்சிக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டப்பட்டது.
இதைத் தொடர்ந்து இன்று காலை மாநகராட்சி சார்பில் வீட்டை இடிக்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பாஜக ஆட்சியில் உள்ள உத்தரபிரதேசத்தில் குற்றவாளிகள் என கருத்தப்படுவோரின் வீடுகள் புல்டோசர் கொண்டு இடிக்கப்படுவது வழக்கம். அதே நடைமுறையை புதிதாக பாஜ அரசு பொறுப்பேற்றுள்ள மகாராஷ்டிராவிலும் தொடர்வது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: மணிப்பூராக மாறும் நாக்பூர்.. எதிர்க்கட்சிகள் சாடல்..! வன்முறைக்கு காரணமே திரைப்படம்.. மகாராஷ்டிரா முதல்வர் புதிய விளக்கம்..!