விசைத்தறி உரிமையாளர்களின் வேலை நிறுத்த அறிவிப்பு தொடர்பாக எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், கோவை, திருப்பூர் மாவட்டங்களில் சுமார் ஒன்றரை லட்சத்திற்கும் மேற்பட்ட விசைத்தறிகள் இயங்கி வருகின்றன.
இந்த விசைத்தறி உரிமையாளர்கள் கூலிக்கு நெசவு செய்பவர்கள் ஆவார்கள். இவர்களை நம்பி மறைமுகமாக பல லட்சம் தொழிலாளர் குடும்பங்கள் உள்ளன என கூறியுள்ளார்.

இந்நிலையில், மூன்று முறை உயர்த்தப்பட்ட மின்கட்டண உயர்வு, தொழில் வரி உயர்வு, சொத்து வரி உயர்வு, தங்களது விசைத்தறியில் வேலை செய்யும் கூலி ஆட்களின் சம்பள உயர்வு போன்ற பல்வேறு காரணங்களால், தற்போது வழங்கப்படும் கூலி மிகமிகக் குறைவு என்றும், எனவே, தங்களுக்கு கூலி உயர்வு வழங்க வேண்டி காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தை நடத்தி வருவதை சுட்டிக்காட்டியுள்ளார்.
இதையும் படிங்க: ஆளுநருக்கு எதிரான தீர்ப்பு.. திகைத்து போய் சைலண்ட் மோடில் அதிமுக.. விளாசும் திமுக கூட்டணி கட்சி!

இது தொடர்பான பேச்சுவார்த்தையில், இதுவரை எந்தவித உடன்பாடும் ஏற்படாததால் லட்சக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது என்றும் விசைத்தறி உரிமையாளர்களின் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவர எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை., சட்டப் பேரவையில் இதுகுறித்துப் பேச வாய்ப்பும் வழங்கப்படவில்லை என குற்றம்சாட்டினார்.

இந்தக் கூலி உயர்வு பிரச்சனையால், இத்தொழிலை நம்பியுள்ள லட்சக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரமும், அதன் சார்பு தொழில்களை நம்பி உள்ளவர்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளது என்று கூறிய எடப்பாடி பழனிச்சாமி, திமுக அரசால் உயர்த்தப்பட்ட வரிகள், கட்டணங்கள் மற்றும் கடும் விலைவாசி உயர்வு உள்ளிட்ட அனைத்துக் காரணிகளின் விலைகளும் கடுமையாக உயர்ந்துள்ள நிலையில், விசைத்தறித் தொழிலாளர்கள் மற்றும் அதன் சார்புத் தொழிலாளர்கள் என்று லட்சக்கணக்கானவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க, போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார்.
இதையும் படிங்க: சென்னை வரும் உள் துறை அமைச்சர் அமித் ஷா.. முக்கிய நபர்களுடன் சந்திப்பு.. பரபரக்கும் பாஜக!