மலையாள சூப்பர்ஸ்டார் மோகன்லால் நடித்து, ப்ருத்விராஜ் இயக்கிய எம்புரான் திரைப்படம் தொடர்பான சர்ச்சை தமிழக சட்டப்பேரவையிலும் வெடித்தது. சர்ச்சைக்குரிய காட்சிகள் அதில் நீக்கப்பட்டு விட்டதாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.

எம்புரான் திரைப்படம் ஒரே சமயத்தில் இந்துத்துவாதிகளாலும், தமிழக விவசாயிகளாலும் எதிர்க்கப்பட்டு வருகிறது. குஜராத் கலவரத்தில் தொடர்புடைய பாபு பஜ்ரங்கி கதாபாத்திரத்தை படத்தின் வில்லன் கதாபாத்திரற்கு பெயர் சூட்டியதாக ஆர்எஸ்எஸ், பஜ்ரங்தள் போன்ற அமைப்புகள் எம்புரான் படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தன. இஸ்லாமியர்களுக்கு எதிராக திட்டமிட்டு கலவரத்தை உண்டாக்கியதாக படத்தில் காட்சிகள் இடம்பெற்றதும் சர்ச்சைக்கு காரணம். இதையடுத்து 17 இடங்களில் காட்சிகள் வெட்டப்பட்டன. தனக்குத் தெரியாமல் ஒருசில காட்சிகள் எடுக்கப்பட்டு விட்டதாக கதாநாயகன் மோகன்லால், படுத்தே விட்டானய்யா மொமெண்டில் பாஜகவிடம் சரண்டர் ஆனார். இயக்குநரான ப்ருத்விராஜ் இதுபற்றி கருத்து தெரிவிக்காமல் மௌனம் காத்து வருகிறார்.
இதையும் படிங்க: தமிழின வெறுப்போடுதான் இருப்பீங்களா.? 'எம்புரான்' படக் குழுவை வெளுத்து வாங்கிய வேல்முருகன்.!!

அதேபோன்று முல்லைப்பெரியாறு அணை இடிந்து விழுந்து கேரளாவே மூழ்கக் கூடும் என்ற வசனங்களும், காட்சிகளும் படத்தில் இடம்பெற்றுள்ளன. இதற்கு தமிழக விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். காலம்காலமாக திட்டமிட்ட வதந்திகளை கேரள அரசியல்வாதிகளும், மலையாள நடிகர்களும் பரப்பி வருவதாக குற்றஞ்சாட்டுகின்றனர். அதேபோன்றதொரு காட்சிகள் எம்புரான் படத்திலும் இடம்பெற்றது கண்டிக்கத்தக்கது என்பது தமிழக விவசாயிகளின் நிலைப்பாடு.

இந்த விஷயம் இன்று தமிழக சட்டப்பேரவையில் எதிரொலித்தது. தமிழக வாழ்வுரிமைக் கட்சி உறுப்பினரான வேல்முருகன், இந்த விஷயத்தை பேசினார். முல்லைப்பெரியாறு அணை உடைந்தால் கேரளாவே அழிந்துவிடும் என்ற வசனம் இடம்பெற்றுள்ளது. ஆனால் அந்த படம் இன்னும் தமிழ்நாட்டில் ஓடிக் கொண்டிருப்பதாக குற்றஞ்சாட்டினார்.
இதற்கு பதிலளித்து பேசிய அவை முன்னவரும், திமுகவின் பொதுச்செயலாளருமான துரைமுருகன், நான் அந்த படத்தைப் பார்க்கவில்லை. படத்தைப் பார்த்தவர்கள் கூறியதைக் கேட்டதும் பயமும், கோவமும் வருகிறது. தேவையற்ற செயல் அது. அந்த படத்தால் பிற மாநிலங்களில் கூட பிரச்னை வரலாம் என்றார்.

அப்போது குறுக்கிட்டுப் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அந்த காட்சி சென்சாரில் கட் செய்யப்படவில்லை என்றார். படம் வெளியான பிறகு இந்த செய்தி வெளியே வந்து அதன்பிறகு எழுந்த எதிர்ப்பால் தற்போது அந்தக் காட்சி நீக்கப்பட்டுள்ளது என்றார்.
ஆனால், முல்லைப் பெரியாறு அணை தொடர்பான காட்சிகள் இன்னமும் படத்தில் இடம்பெற்றுள்ளதாக தமிழக விவசாயிகள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
இதையும் படிங்க: மீண்டும் சர்ச்சையில் சிக்கிய எஸ்.வி.சேகர்... வலுக்கும் கண்டனம்!!