தமிழக ஆளுநர் ஆர்.என். ரவிக்கும் ஆளும் திமுக அரசுக்கும் ஏழாம் பொருத்தம்தான். வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் அரசை விமர்சிப்பது, திராவிட கொள்கைகளை எதிர்ப்பது, அரசின் முக்கிய மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்காமல் இருப்பது என ஆளுநருக்கு எதிராக நிறைய விமர்சனங்கள் உண்டு. அண்மையில்கூட சட்டப்பேரவையிலிருந்து ஆளுநர் வெளிநடப்பு செய்தது சர்ச்சையானது. ஆளுநர் - அரசு மோதல் தொடர்பாக ஏற்கனவே உச்ச நீதிமன்றத்தில் வழக்கு இருக்கிறது. இந்நிலையில் தற்போது துணைவேந்தர் நியமனம் தொடர்பாகவும் ஆளுநருக்கு எதிராக தமிழக அரசு இடையூட்டு மனுவை தாக்கல் செய்துள்ளது.

இரு தரப்புக்கும் மோதல் நீடித்து வரும் நிலையில் தமிழ்நாட்டைப் பாராட்டி ஆளுநர் ஆர்.என். ரவி பேசியிருப்பது கவனம் பெற்றுள்ளது. சென்னை ராஜ்பவனில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, “வடகிழக்கு மாநிலங்களில் உள்ள பெற்றோர் தங்கள் மகள்களை தமிழ்நாட்டுக்கு படிக்க அனுப்புகின்றனர். தமிழ்நாட்டை அவர்கள் பாதுகாப்பாக உணர்கின்றனர். பெண்களுக்கு டெல்லியைப் பாதுகாப்பற்றதாக நினைக்கும் வடகிழக்கு மாநிலத்தவர்கள், தமிழ்நாட்டை பாதுகாப்பானதாக கருதுகின்றனர்.

இதன் காரணமாக தமிழ்நாட்டுக்கு அதிகமான பெண்கள் படிக்க வருகின்றனர். இதுபோன்ற பாதுகாப்பான சூழல் டெல்லியில் இல்லை. தேர்தல் அரசியல் காரணமாக வடகிழக்கு மாநிலங்களில் சாதிய சண்டைகள் நடைபெற்று வருவது எனக்கு வருத்தமளிக்கிறது” என ஆளுநர் ஆர்.என். ரவி தெரிவித்தார். இவர் இதற்கு முன்பு வடகிழக்கு மாநிலமான நாகாலாந்தில் ஆளுநராக இருந்தவர். தமிழ்நாட்டை ஆளுநர் பாராட்டிய நிலையில் இங்கு ஆட்சியில் இருந்த, இருக்கும் திராவிட கட்சிகளின் ஆட்சிகள் இதற்கு முக்கிய காரணம் என்று நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: காவிரி, வைகை, குண்டாறு நதிகள் இணைப்பு: தமிழக அரசுக்கு தடை இல்லை; கர்நாடகத்தின் கோரிக்கையை ஏற்க உச்ச நீதிமன்றம் மறுப்பு
இதையும் படிங்க: தமிழகத்தில் டாஸ்மாக் மட்டும்தான் சக்சஸ்.. திமுக அரசின் தோல்விகளைப் பட்டியலிட்ட அண்ணாமலை!