பக்கத்து வீட்டு வாலிபர் மனைவிக்கு அனுப்பிய முத்த உமோஜியால் ஆத்திரமடைந்த கணவர், தனது மனைவியையும் பக்கத்து வீட்டு வாலிபரையும் கத்தியால் வெட்டி கொலை செய்தார். அண்டை மாநிலமான கேரளாவில் இந்த விபரீத சம்பவம் நடந்துள்ளது. பந்தனம் திட்டா அருகே கலஞ்சூர் கிராமத்தில் வசித்து வந்தவர், பைஜூ. அவருடைய மனைவி, வைஷ்ணவி. அவர்களின் பக்கத்து வீட்டில் வசிப்பவர், வாலிபர் விஷ்ணு.

சம்பவத்தன்று இரவில் விஷ்ணு பைஜுவின் மனைவி வைஷ்ணவிக்கு முத்தமிடும் ஈமோஜி உடன் வாட்ஸ் அப்பில் அனுப்பிய பதிவை பைஜு பார்த்து விட்டார். இது அவருடைய கோபத்தை தூண்டியது. இது பற்றி மனைவியிடம் விசாரிக்க முயன்ற போது கணவர் தன்னை தாக்கி விடுவாரோ என்ற அச்சத்தில் வைஷ்ணவி வீட்டை விட்டு ஓடி போய் பக்கத்தில் விஷ்ணு வீட்டில் மறைந்து கொண்டார்.
இதையும் படிங்க: சந்தேகத்தால் விபரீதம்...எந்நேரமும் செல்போனில் பேச்சு...மனைவியை வெட்டிக்கொன்ற கணவர்...
இதனால் மேலும் ஆத்திரமடைந்த பைஜு அவரை விரட்டிச் சென்று விஷ்ணு வீட்டில் இருந்த மனைவி வைஷ்ணவியை வெளியே முற்றத்துக்கு இழுத்து வந்து கையில் வைத்திருந்த பெரிய கத்தியால் ஓங்கி வெட்டினார். இதை பார்த்ததும் வீட்டுக்குள் இருந்து ஓடி வந்த வாலிபர் விஷ்ணு வைஷ்ணவியை காப்பாற்ற முயன்றார். உடனே அதே கத்தியால் விஷ்ணுவையும் பைஜு வெட்டினார். பலத்த காயமடைந்த இருவரும் கீழே விழுந்து கதறி துடித்தனர்.

பின்னர் பைஜு சாவகாசமாக வீட்டுக்குள் போய் குளித்து உடை மாற்றி விட்டு தனது நண்பர்களுக்கு போன் செய்தார். போனில் தான் செய்த இரட்டை கொலை பற்றி விவரமாக அனைத்தையும் சொல்லிவிட்டார்.
இதற்கிடையில் படுகாயத்துடன் துடிதுடித்துக் கொண்டிருந்த வைஷ்ணவி விஷ்ணு இருவரையும் அக்கம் பக்கம் வீட்டுக்காரர்கள் அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்கள். ஆனால் வழியிலேயே அவர்கள் இருவரும் பரிதாபமாக இறந்து விட்டனர்.

இது பற்றிய தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் கொலை செய்யப்பட்ட இருவருடைய உடல்களையும் கைப்பற்றி பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வீட்டில் இருந்த பைஜுவைகைது செய்து நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர்.
வைஷ்ணவியும் பைஜுவும் 10 வருடங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள். அவர்களுக்கு 10 மற்றும் 5 வயதில் இரண்டு மகன்கள் உள்ளனர். பக்கத்து வீட்டுக்காரரான விஷ்ணு திருமணமாகாதவர். அவர் தனது தாயுடன் வசித்து வந்தார்.
விஷ்ணுவும் பைஜுவும் ஒரே இடத்தில் வேலை செய்து வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. போலீசார் வழக்கு பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதையும் படிங்க: வாட்சப் மூலம் தலாக் கொடுத்த கணவன்...அடுத்து மனைவி கொடுத்த அதிர்ச்சி!!