இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர் 21 வயதே ஆன ஹர்சிம்ரத் ரந்தாவா (Harsimrat Randhawa). இவர் கனடாவில் உள்ள ஆண்டாரியோ மாகாணம் ஹமில்டன் நகரில் உள்ள மொஹ்வாக் கல்லூரியில் கல்வி பயின்று வந்தார். இரவு பார்ட்டைம் வேலைக்கும் சென்று வந்துள்ளார். தனது அன்றாட தேவைகளை தானே பார்த்த்துகொள்ளும் அளவிற்கு பார்ட் டைம் வேலை மூலம் சம்பாதித்து வந்தார்.
இந்த நிலையில் கடந்த புதன்கிழமை இரவு 07.30 மணி அளவில் பார்ட் டைம் வேலைக்கு செல்வதற்காக சவுத் பெண்ட் சாலையில் பேருந்துக்காக ஹர்சிம்ரத் ரந்தாவா காத்திருந்தார். அப்போது அந்த பகுதியில் இரு தரப்பினர் இடையே நடந்த சண்டை துப்பாக்கிசூடாக மாறி உள்ளது. இரு கார்களில் வந்த நபர்களுக்கு இடையே துப்பாக்கி சண்டை நடைபெற்றது. இரு தரப்பினரும் சரமாரியாக துப்பாக்கி சூடு நடத்தினர்.

இதில் எதிர்பாராத விதமாக பஸ்சுக்கு காத்திருந்த இந்திய மாணவி ஹர்சிம்ரத் ரந்தாவா மீது துப்பாக்கி குண்டு பாய்ந்தது. மார்பில் துப்பாக்கி குண்டு தாக்கிய காயத்துடன் அவர் அதே பேருந்து நிலையத்தில் மயங்கி விழுந்துள்ளார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலனின்றி ரந்தாவா பரிதாபமாக உயிர் இழந்தார்.
இதையும் படிங்க: Out of contact-ல் மு.க.ஸ்டாலின்... தமிழக மக்களுக்கு அச்சுறுத்தல்: அண்ணாமலை ஆத்திரம்..!

இதுகுறித்து போலீசார் தெரிவித்ததாவது; கருப்பு நிற மெர்சிடிஸ் எஸ்யூவியில் வந்த பயணி ஒருவர் வெள்ளை நிற செடானில் இருந்தவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி உள்ளார். இதில் ஹர்சிம்ரத் ரந்தாவா இடையில் சிக்கிக் கொண்டார். துப்பாக்கிச் சூட்டுக்குப் பிறகு இரண்டு கார்களும் சம்பவ இடத்திலிருந்து விரைவாக தப்பி ஓடிவிட்டனர் என்றும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
துப்பாக்கிச்சூடு நடத்தியவர்கள் இன்னும் கைது செய்யப்படவில்லை. இந்த சம்பவம் குறித்து விசாரணை நடந்து வருகிறது. அருகிலுள்ள வீட்டின் பின்புற ஜன்னலிலும் தோட்டாக்கள் தாக்கி உள்ளது. ஆனால் அதில், வீட்டில் வசிப்பவர்கள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று போலீசார் தெரிவித்தனர்.

ஹாமில்டனில் இந்திய மாணவி ஹர்சிம்ரத் ரந்தாவாவின் துயர மரணத்தால் நாங்கள் மிகவும் வருத்தமடைந்துள்ளோம். மாணவியின் குடும்பத்தினர் உடன் தொடர்பில் இருக்கிறோம். அவர்களுக்கு அனைத்து உதவிகளும் செய்யப்படும் என்று டொராண்டோவில் உள்ள இந்திய துணைத் தூதரகம் தெரிவித்துள்ளது. கனடாவில் அடிக்கடி நடைபெறும் வெறிச்செயல்கள் மற்றும் குற்ற சம்பவங்களில் இந்தியர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவது குறித்து இந்தியா கவலை தெரிவித்துள்ளது. டிசம்பர் மாதத்தில், இந்திய மாணவர்கள் குரசிஸ் சிங், ரித்திகா ராஜ்புட், ஹர்ஷந்தீப் சிங் ஆகியோர் தனித்தனிப் பரிதாபமான சூழ்நிலைகளில் உயிர் இழந்தனர்.

டிசம்பர் 1ம் தேதி 2024ம் ஆண்டு, பஞ்சாபின் லூதியானாவைச் சேர்ந்த 22 வயது முதுகலை மாணவர் குராசிஸ் சிங் கத்தியால் குத்திக் கொல்லப்பட்டார். அதேபோல் பஞ்சாபைச் சேர்ந்த 22 வயது இந்திய மாணவி ரித்திகா ராஜ்புத் மரம் விழுந்து இறந்தார். டிசம்பர் 6ம் தேதி, எட்மண்டனில் 20 வயது இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஹர்ஷன்தீப் சிங், ஒரு கும்பலால் சுட்டுக் கொல்லப்பட்டார். தற்போது இளம் இந்திய மாணவி ஹர்சிம்ரத் ரந்தாவா சுட்டுக்கொல்லப்பட்டார். இது அவர்களது குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் இடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: பதவியை தூக்கி எறிந்த துரை வைகோ..! விலகலை ஏற்க மறுக்கும் மதிமுக..!