புதுச்சேரி தட்டாஞ்சாவடி பகுதியை சேர்ந்தவர் ஃபர்மான். இவரது குழந்தை நேற்று மாலை சிக்கன் பர்க்கர் சாப்பிட வேண்டும் என்பது போல் உள்ளதாக கூறி உள்ளார். குழந்தை ஆசையாக கேட்பதால் குழந்தைக்கு சிக்கன் பர்க்கர் வாங்கித்தர ஃப்மான் முடிவு செய்தார். இவர் டெலிவரி ஆப் மூலம் புதுச்சேரி-கடலூர் சாலையில் உள்ள தனியார் ஷாப்பிங் மாலில் இயங்கி வரும் சர்வதேச உணவகத்தில் 4 கோழி இறைச்சி பர்கர் மற்றும் கோழி நகட்ஸ் ஆர்டர் செய்தார். அது தனியார் டெலிவரி ஆப் மூலம் வீட்டிற்கு டெலிவரி செய்யப்பட்டது. அதனை தனது குழந்தைகளுக்கு ஃபர்மான் வழங்கியுள்ளார்.

அந்த உணவை ஆசை ஆசையாய் சாப்பிட்ட அவரது குழந்தைக்கு திடீரென வாந்தி ஏற்பட்டது. பின்னர் மீதமுள்ள பர்கரை எடுத்து பார்த்தபோது, அதில், வேகாத கோழி இறைச்சி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார் ஃபர்மான். உடனே அருகில் இருந்த தனியார் மருத்துவமனையில் குழந்தையை அழைத்து சென்ற ஃபர்மான், அங்கு குழந்தைக்கு முதலுதவி சிகிச்சை அளித்து வீட்டிற்கு அழைத்து வந்தார். மன வேதனையால் சம்பந்தப்பட்ட உணவகத்திற்கு தொடர்பு கொண்டு கேட்டபொழுது எதிர் தரப்பில் பேசிய ஊழியர் சரியான முறையில் பதிலளிக்கவில்லை என கூறப்படுகிறது.
இதையும் படிங்க: 1 மணி நேரம் தான் டைம்.. கலெக்டர் ஆபிசுக்கு வெடிகுண்டு மிரட்டல்.. புதுச்சேரியில் பரபரப்பு..!

இதனால் ஆத்திரமடைந்த ஃபர்மான், தன்னிடம் மீதம் இருந்த பர்க்கரை எடுத்துக் கொண்டு நேரில் அதே உணவகத்திற்கு சென்று உள்ளார். அங்குள்ள ஊழியர்களிடம் வேகாத கோழி இறைச்சி பர்கரை காண்பித்து கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அதுமட்டுமின்றி ஆரம்பத்தில் செல்போனில் பேசிய போது உணவு முறையாக சமைத்து இருப்பதாக கூறிய ஊழியர்கள் நேரில் வேகாத பச்சை கோழியை கண்டதும் அதிர்ந்து போய் அடக்கமாக பம்பி கொண்டு நின்றனர்.

குழந்தையின் தந்தையோ அடுக்கடுக்கான கேள்விகளால் ஊழியர்களை வறுத்தெடுக்க அப்பகுதியே பரபரப்பாகியது. இது குறித்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலானது. இதையடுத்து, உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அந்த உணவகத்தில் அதிரடி ஆய்வு மேற்கொண்டனர்.

ஆய்வின் போது, உணவகத்தின் நிர்வாக அதிகாரியிடம் இந்த சம்பவம் குறித்து விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்கியதுடன், அங்கிருந்த பர்கர் மற்றும் பதப்படுத்தப்பட்ட கோழி இறைச்சி உள்ளிட்ட பல்வேறு உணவுப் பொருட்களின் மாதிரிகளை சேகரித்து ஆய்வுக்காக எடுத்துச் சென்றனர். அதோடு 2 நாட்களுக்குள் விளக்கம் அளிக்கவில்லை எனில் உணவகத்திற்கு சீல் வைக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்தனர்.
இதையும் படிங்க: வஃக்பு சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு... எங்கே இஸ்லாமியர்கள்..? வீதிக்கு வரத் தயாராகும் விஜய்