தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தெருநாய்கள் மற்றும் மாடுகள் போன்ற கால்நடைகளின் தொல்லை அதிகரித்து வருகிறது. குறிப்பாக சென்னை, கோவை போன்ற பெருநகரங்களில் வாகன நெரிசலுக்கு மத்தியில் இதுபோன்ற கால்நடைகள் அடிக்கடி சாலையின் குறுக்கே ஓடுவதால் விபத்து ஏற்படுகிறது. ஒருசில சமயங்களில் 5 முதல் 6 தெருநாய்கள் வரை ஒன்றிணைந்து குழந்தைகளை கடித்து குதறுவது போன்ற காட்சிகளும் வெளியாகி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. தெருநாய்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த வேண்டும் என்கிற கோரிக்கை சமீபகாலமாக மக்களிடையே அதிகரித்தும் வருகிறது.

அதிலும் குறிப்பாக கோவையில் அனைத்து இடங்களிலும் தெருநாய்கள் சுற்றித் திரிவதை காண முடிவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். குறிப்பாக, சுங்கம் ரவுண்டானா, வாலாங்குளம்-உக்கடம் பைபாஸ் சாலை, வின்சென்ட் சாலை, உக்கடம் சாலை, பேரூர் பைபாஸ் சாலை, உக்கடம்-ஆத்துப்பாலம் சாலை, ஒப்பணக்கார வீதி, ஆர்.எஸ்.புரம், காந்திபார்க், ரெட்பீல்ட்ஸ் சாலை, துடியலூர் சாலை உள்ளிட்ட முக்கிய சாலைகளில் நாய், மாடு, குதிரை, ஆடு போன்ற கால்நடைகள் சர்வ சாதாரணமாக கட்டுப்பாடின்றி சுற்றித்திரிகின்றன. வாகனங்கள் வரும் போது திடீரென குறுக்கே புகும் கால்நடைகளால் வாகன ஓட்டிகள் நிலைதடுமாறி கீழே விழுந்து விபத்துக்குள்ளாகும் அவலம் அடுக்கடி நடக்கின்றது.
இதையும் படிங்க: கோவையில் மத்திய அரசு வேலைக்கான தேர்வில் ஆள்மாறாட்டம்.. உ.பி இளைஞர்கள் 8 பேர் கைது..!

கோவையில் ஆண்டுக்கு சராசரியாக 500-க்கும் மேற்பட்டோர் நாய்க்கடி காரணமாக மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுகின்றனர். கோவையில் கடந்த 2006-ம் ஆண்டு 70 ஆயிரம் என்ற எண்ணிக்கையில் இருந்த தெருநாய்களின் எண்ணிக்கை, தற்போது லட்சங்களை தாண்டும் என கணிக்கப்பட்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளாக தெருநாய் கருத்தடை அறுவைசிகிச்சை முறையாக செய்யப்படவில்லை எனவும் மக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். இவை இரவு நேரங்களில் நடந்து செல்வோரையும், வாகனங்களில் செல்வோரையும் விரட்டி கடிக்கின்றன. இவ்வாறாக கோவையில் நாய்கடிக்கு ஆளான வடமாநில இளைஞர் மருத்துவமனையில் கழுத்தை அறுத்துக் கொண்டு உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர் ராம் சந்தர் ( வயது 35). இவர் கோவையில் தங்கி தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்தார். அண்மையில் இவரை தெருநாய் கடித்தது. இதனால், உடல் நலம் பாதிக்கப்பட்ட ராம் சந்தர் நேற்று (மார்ச் 11) காலை 11 மணியளவில் கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்தார். அவருக்கு நோயின் பாதிப்பு அதிகமாக இருந்ததால், மருத்துவர்கள் அவரை வெறிநாய்க்கடி தனி சிகிச்சைப் பிரிவில் அனுமதித்தனர். பிற்பகல் 2:30 மணியளவில் திடீரென ராம்சந்தருக்கு நோயின் பாதிப்பு அதிகமானது.

நாய் போல் குறைத்துக்கொண்டு அறை முழுவதும் அவர் சுற்றித் திரிந்தார். இதனால் ஏற்பட்ட மன உளைச்சலால், அங்கு நோட்டீஸ் போர்டில் இருந்த கண்ணாடியை உடைத்து அதன் மூலம் கழுத்தை அறுத்துக்கொண்டு உயிரை மாய்த்துக்கொண்டார். அறை முழுவதும் அவரது ரத்தம் சிதறிக்கிடந்தது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கவச உடை அணிந்த மருத்துவ பணியாளர்கள் உள்ளே சென்று பார்த்து ராம் சந்தர் உயிரிழந்ததை உறுதி செய்தனர். இச்சம்பவம் குறித்து பந்தய சாலை போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த பந்தய சாலை போலீசார், உயிரிழந்த ராம் சந்தர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, வழக்குப்பதிவு செய்து விசரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தற்கொலை எதற்கும் தீர்வல்ல. சொந்தக் காரணங்களாலோ அல்லது மனஅழுத்தத்தின் காரணமாகவோ தற்கொலை எண்ணம் தோன்றினால் 104 அல்லது சிநேகா உதவி எண்களை அழையுங்கள். சிநேகா தற்கொலைத் தடுப்பு உதவி எண் - 044-24640050, மாநிலத் தற்கொலைத் தடுப்பு உதவி எண் - 104, தொடர்புக்கு - 022-25521111, மின்னஞ்சல் help@snehaindia.org அல்லது நேரில் தொடர்புகொள்ள, சிநேகா பவுண்டேஷன் ட்ரஸ்ட், 11, பூங்கா சாலை (பார்க் வியூ ரோடு), ஆர்.ஏ.புரம், சென்னை - 600028.
இதையும் படிங்க: மனைவியின் இதயத்தை துளைத்த 29 குண்டுகள்.. இதயம் என்ற பகுதியே இல்லாமல் போன சோகம்.. கோவை ஆசிரியை கொலையில் நடந்தது என்ன..?