தமிழக பாஜக தலைவரின் பதவிக்காலம் நிறைவடைந்ததால் தற்போது தமிழக பாஜக தலைவராக இருக்கும் அண்ணாமலை மாற்றப்பட்டு புதிய தலைவர் நியமிக்கப்பட உள்ளதாக கடந்த மார்ச் மாதத் தொடக்கம் முதல் பேசப்பட்டு வந்தது. அதனை உறுதி செய்யும் வகையில் பாஜக தேசிய நிர்வாகிகள் கிஷன் ரெட்டி, தருண் சுக் ஆகியோர், மாநில தலைவர் பெயரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவிருக்கிறார்கள் என்று தகவல்கள் வெளியாகின. மேலும் சென்னை ஸ்ரீவாரு திருமண மண்டபத்தில் பாஜக புதிய தலைவர் பதவியேற்பு விழா மிக பிரமாண்டமாக நடைபெறவிருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனிடையே நயினார் நாகேந்திரன் டெல்லி சென்று நட்டா, அமித்ஷா ஆகியோருடன் ஆர்.எஸ்.எஸ். தலைவர்கள் சிலரையும் சந்தித்தார்.

இதற்கிடையே, தேர்தலில் தமிழக பாஜக தலைவர் பதவிக்கு தான் போட்டியிடவில்லை என்றும் அண்ணாமலை கூறியிருந்தார். இந்த பரபரப்புக்கு இடையில் இன்று தமிழக பாஜக தலைவருக்கான வேட்பு மனு தாக்கல் நடைபெற்றது. இந்நிலையில், மத்திய அமைச்சர் எல்.முருகன், அண்ணாமலை முன்னிலையில் நயினார் நாகேந்திரன் மனு தாக்கல் செய்தார். முன்னதாக நேற்று திடீரென, பாஜக தலைவர் பதவிக்கான விதிமுறை ஒன்று வெளியானது. அதில், தமிழக பாஜக தலைவர் மற்றும் தேசிய பொதுக்குழு உறுப்பினர் பதவிகளுக்கு போட்டியிடவிரும்புவோர் 10 ஆண்டுகள் கட்சி உறுப்பினராக இருந்திருக்க வேண்டும் என்ற நிபந்தனை இருப்பதாக அதில் தெரிவிக்கப்பட்டது. இதனால், அண்ணாமலை, நயினார் நாகேந்திரன் ஆகியோர் போட்டியிட தகுதியை இழந்ததாகக் கூறப்பட்டது.
இதையும் படிங்க: 10 வருஷம் உறுப்பினர்.. எழுத்துப்பூர்வ பரிந்துரை! தமிழக பாஜக தலைவர் பதவிக்கான வேட்பு மனுத்தாக்கல் தொடக்கம்..!

இப்படியொரு விதி இருக்கும்போது அண்ணாமலை எப்படி தலைவரானார்? புதிய தலைவர் யார்தான்? என பல்வேறு கேள்விகள் எழுந்தன. ஆனால், விதிகள் மாற்றப்பட்டுவிட்டதாக இன்று பாஜக தேர்தல் பொறுப்பாளர் சக்கரவர்த்தி அறிவித்துவிட்டார். இதை அடுத்து தேர்தல் நடத்தும் அதிகாரியும் மாநில துணை தலைவருமான சக்கரவர்த்தியிடம் நயினார் நாகேந்திரன் விருப்பமனுவை வழங்கினார். நயினார் நாகேந்திரன் தவிர வேறு யாரும் வேட்பு மனுவை தாக்கல் செயயப்படவில்லை. இதனால், நயினார் நாகேந்திரன் பாஜக மாநில தலைவராக போட்டியின்றி தேர்வு செய்யப்படுவார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், தமிழக பாஜகவின் புதிய தலைவர் குறித்து நாளை மாலை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஸ்ரீவாரு மண்டபத்தில் நாளை மாலை 4 மணிக்கு அறிவிப்பு வெளியாகிறது. இதனிடையே நயினார் நாகேந்திரனை தொடர்ந்து மேலும் ஒருவர் மனுவுடன் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. மனுவுடன் வந்தவரை எல்.முருகன் கோபத்துடன் பார்த்தாக கூறப்படுகிறது. இதை அடுத்து அண்ணாமலை அவரை சமாதானம் செய்தார். பின்னர் மனுவுடன் வந்தவரை அங்கிருந்தவர்கள் அனைவரும் தடுத்து சமாதானம் செய்து அழைத்து சென்றனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.
இதையும் படிங்க: தலைவர் பதவி: அண்ணாமலை அவுட்... நயினாருக்கு ஆப்பு... விதியை மாற்றிய பாஜக..!