ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா குறித்து ஆலோசிக்க நாடாளுமன்ற கூட்டுக் குழு நேற்று கூடிய நிலையில் பாஜக கூட்டணியில் உள்ள ஐக்கிய ஜனதா தளம், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சிகள் சராமாரியாக கேள்விகளை எழுப்பியுள்ளன, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எம்.பி.க்களும் கேள்வி எழுப்பியுள்ளனர். நாடு முழுவதும் அனைத்து மாநில சட்டப்பேரவைகளுக்கும், நாடாளுமன்றத்துக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் நோக்கில் ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா கடந்த குளிர்காலக்கூட்டத்தொடரில் நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்யப்பட்டது.

இந்த மசோதாவுக்கு மக்களவையில் கடும் எதிர்ப்புக் கிளம்பியதையடுத்து இந்த மசோதா நாடாளுமன்ற கூட்டுக்குழுவுக்கு அனுப்பிவைக்கப்பட்டது.
பாஜக எம்.பி. பிபி சவுத்திரி தலைமையில் நாடாளுமன்றக் கூட்டுக் குழுக் கூட்டம் அமைக்கப்பட்டது. இதில் காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி, தேசியவாதக் காங்கிரஸ் எம்.பி. சுப்ரியா சுலே, மணிஷ் திவாரி,திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. கல்யாண் பானர்ஜி, பன்சூரி சுவராஜ், அனுராக் சிங் தாக்கூர், சஞ்சய் ஜா(ஐக்கிய ஜனதா தளம்), ஸ்ரீகாந்த் ஷிண்டே உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர். இது தவிர மாநிலங்களவை எம்பிக்களும் உள்ளனர்.
இந்த நாடாளுமன்றக் கூட்டுக்குழுவில் மக்களவை எம்.பிக்கள் 27 பேரும், மாநிலங்களவையில் இருந்து 12 பேரும் இடம் பெற்றுள்ளனர். இந்த நாடாளுமன்ற கூட்டுக்குழு நேற்று முதல் முறையாகக் கூடி இந்த மசோதா குறித்து ஆலோசனை நடத்தியது.

இந்தக் கூட்டத்தில் கூட்டுக்குழுவில் உள்ள எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த எம்.பி.க்கள், இந்த மசோதாவின் அரசியலமைப்பு தன்மை, கூட்டாட்சிக்கு ஏற்படும் சிக்கல்கள் ஆகியவை குறித்து கேள்வி எழுப்பினர்.
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம் பெற்றுள்ள ஐக்கிய ஜனதா தளம் கட்சியும் இந்த மசோதாவால் எவ்வாறு தேர்தல் செலவு குறையும், எவ்வாறு நாடுமுழுவதும் ஒரே தேர்தல் நடத்த முடியும் சாத்தியங்கள் என்று கேள்வி எழுப்பியது. பாஜக கூட்டணியில் இடம் பெற்ற முக்கியக் கட்சி இந்த மசோதா குறித்து எதிர்ப்புத் தெரிவித்து கேள்வி எழுப்பியது சலசலப்பை ஏற்படுத்தியது.
ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி எம்.பி.க்கள், தேர்தலில் பயன்படுத்தப்படும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பயன்பாடு குறித்து சந்தேகம் எழுப்பியது, மீண்டும் வாக்குச் சீட்டு முறையை கொண்டுவருவது குறித்தும் கேள்வி எழுப்பினர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. நாட்டின் கூட்டாட்சி தத்துவத்தையே இந்த மசோதா சிதைத்துவிடும், அரசியலமைப்புக்கே விரோதமானது என்று காங்கிரஸ் கட்சி எம்.பி.க்கள் கேள்வி எழுப்பினர். இந்த கூட்டுக்குழுவின் காலத்தை ஓர் ஆண்டு நீட்டிக்க வேண்டும் அப்போதுதான் மசோதா குறித்து விரிவான ஆலோசனை, விவாதம் நடத்த முடியும் என்று திரிணமூல் காங்கிஸ் கட்சி எம்.பி.க்கள் கோரியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிங்க: விடை பெறும் காங்கிரஸ்! 50 ஆண்டுகளுக்குப்பின் அக்பர் சாலையிலிருந்து கோட்லா சாலைக்கு மாற்றம்..
இதையும் படிங்க: நீதிமன்றமா-மத்திய அரசா?: தேர்தல் ஆணையர் நியமன வழக்கு: பிப்ரவரி 4ம் தேதிக்கு ஒத்திவைத்தது உச்ச நீதிமன்றம்