தமிழகம் முழுவதும் போதைப்பொருளுக்கு எதிரான நடவடிக்கைகளில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். போதைபொருள் விற்பனையாளர்கள், கடத்தல்காரர்கள் என போதைக்கு துணையாக உள்ள அனைவரையும் கைது செய்து வருகின்றனர். சமீப காலமாக குற்றசம்பவங்கள் அதிகம் கவனம் பெற துவங்கி உள்ளது.
போதைப் பொருள் நுகர்வு கலாச்சாரமே இதற்கு காரணம் என எதிர்க்கட்சிகள் அரசு மீது பழி சுமத்தி வருகின்றன. இந்நிலையில் போலீசாருக்கு குற்றவாளிகளை பிடிப்பதற்கும், போதைப்பொருள் விற்பனையை தடுப்பது குறித்தும் அழுத்தம் அதிகமாகி உள்ளது. இதன் காரணமாகவே தமிழகம் முழுவதும் போலீசார் அலார்ட் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் கஞ்சா புழக்கத்தை கட்டுப்படுத்தவும், கஞ்சா பயிறிடுவதை தடுக்கவும் போலீசார் அதி தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டனர். கஞ்சா ஆப்ரேஷன் 1.0 வில் ஆரம்பித்து கஞ்சா ஆப்ரேஷன் 2.0, கஞ்சா ஆப்ரேஷன் 3.0, கஞ்சா ஆப்ரேஷன் 4.0 என அது நீண்டது. இதில் ஏராளமான கஞ்சா வியாபாரிகள் மற்றும் கடத்தல்காரர்கள் கைது செய்யப்பட்டு அவர்களின் சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டது. இதனை அடுத்து தமிழகத்தில் பெரும்பாலும் கஞ்சா விற்பனை தடுக்கப்பட்டது. அதே சமயம் வட மாநிலங்கள் உட்பட பிற மாநிலங்களில் இருந்து கஞ்சாவை கடத்தி வந்து சென்னையில் விற்பனை செய்வது அதிகரித்துள்ளது.
இதையும் படிங்க: சொத்தை எழுதி தராத பாட்டி.. கல்லால் அடித்து கொன்ற பேரன்.. பூர்வீக வீட்டால் வந்த பிரச்னை..!

ரயில் மூலம் சென்னைக்கு கடத்தி வரப்படும் கஞ்சா, அதன்பின் சாலை மார்க்கமாக தமிழகம் முழுவதும் கொண்டு செல்லப்படுவதாக போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது. அவ்வாறாக ராணிப்பேட்டைக்குள் சொகுசு காரில் கஞ்சா கடத்தி வரப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனடிப்படையில் ராணிப்பேட்டை மாவட்டம் முழுவதும் போலீசார் தயார் நிலையில் வைக்கப்பட்டனர். இதன் ஒருபகுதியாக ஆற்காட்டில் வாகன சோதனையில் போலீசார் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அந்த வழியாக வந்த சொகுசு காரை நிறுத்தி சோதனை செய்ததில் அதில் 120 கிலோ கஞ்சா இருந்தது தெரிந்தது. விசாரணையில் அவர்கள் பெயர் குப்தாசரண் சாகு, கதிர் அல்பேரியா, தேபப்ரதாதாஸ் என்பது தெரிந்தது. அவர்கள் 3 பேரும் ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர்கள். அவர்களை பின் தொடர்ந்து வந்த அடுத்த காரை போலீசார் நிறுத்தி சோதனை செய்ததில் அதில் 60 கிலோ கஞ்சா இருந்தது தெரிந்தது.
அந்த காரை ஓட்டிவந்த ஒடிசா மாநிலத்தை சேர்ந்த ரெலிமஜி, கவுரவ்திபிடிகா ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்களின் பின்னால் மற்றோரு காரில் வந்த ராணிப்பேட்டையை சேர்ந்த குமரேசனை கைது செய்த போலீசார் அவர் காரில் இருந்து 30 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

இதேபோல் ஜோலார்பேட்டையில் 32 கிலோ பறிமுதல் செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். 24 மணிநேரத்தில் ஜோலார்பேட்டையில் 32 கிலோ கஞ்சாவும் ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காட்டில் 210 கிலோவும் மொத்தம் 242 கிலோ ஒரே நாளில் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: நள்ளிரவில் வீடு புகுந்த கொள்ளையன்.. தாய், மகனுக்கு கத்திக்குத்து.. குலைநடுங்கும் சம்பவம்..!