சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே உள்ள கிருஷ்ணாபுரத்தை சேர்ந்தவர் அசோக் குமார். இவர் நெய்வேலியில் ஆட்டோ டிரைவராக பணிபுருந்து வருகிறார். இவரது மனைவி தவமணி. வயது 38. இந்த தம்பதிக்கு கடந்த 14 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்ற நிலையில் விஜயதாரணி வயது 13, அருள்குமாரி வயது 10, அருள் பிரகாஷ் வயது 5 என 2 மகள், ஒரு மகன் உள்ளனர். இந்நிலையில் அசோக் குமார், தவமணி இடையே உள்ளூரில் உள்ள சொத்து தொடர்பாக அடிக்கடி தகராறு நடந்ததாக கூறப்படுகிறது. இதனால் இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர். அசோக்குமார் நெய்வேலிக்கு ஆட்டோ ஓட்ட சென்றுவிட்டார். தவமணி தன்னுடைய 3 குழந்தைகளையும் தன்னுடனே வைத்து பராமரித்து வந்துள்ளார். குழந்தைகளிடம் பேசுவதற்காக அவ்வப்போது அசோக்குமார் செல்போனில் மட்டும் பேசுவாராம். அப்போதும் கூட இருவரும் சண்டை போட்டுவந்ததாக கூறப்படுகிறது. ஒருகட்டத்தில் மனம் திருந்திய அசோக்குமார், கடந்த 2 தினங்களுக்கு முன்பு வீட்டிற்கு திரும்பியுள்ளார். மனைவி மற்றும் தனது குழந்தைகளுடன் சகஜமாக பேசி வந்தார்.


இந்நிலையில் இன்று விடிந்து வெகுநேரமாகியும், அவர்களது வீட்டின் கதவு திறக்கப்படாமலே இருப்பதை கண்டு அக்கம்பக்கத்தினர் வீட்டின் கதவை திறந்து பார்த்துள்ளனர். தவமணியும், குழந்தைகளும் ரத்த வெள்ளத்தில் கிடந்த நிலையில், குழந்தைகள் விஜயதாரணி, அருள் பிரகாஷ் ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்தனர். தாய் தவமணி, மற்றொரு மகள் அருள் குமாரி உடலில் அசைவு இருந்தது. உடனே போலீசாருக்கு தகவல் கொடுக்க, சம்பவ இடத்திற்கு வந்த அவர்கள் உயிரிழந்த 2 குழந்தைகள் சடலத்தையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் உயிருக்கு போராடி கொண்டிருந்த இருவரையும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இதையும் படிங்க: கூலிப்படையை ஏவி மனைவியை தீர்த்துக்கட்டிய கணவன்.. கள்ளக்காதலை கண்டித்ததால் வெறிச்செயல்..

இதனைத்தொடர்ந்து போலீசார், அருகில் இருந்த தோட்டத்தில் தலையில் காயத்துடன் இருந்த அசோக்குமாரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் நள்ளிரவில் தனது வீட்டிற்கு மர்ம கும்பல் வந்ததாகவும், தன்னையும் தனது குடும்பத்தையும் வெட்டி கொலை செய்ய பார்த்ததாகவும் சொல்லியுள்ளார். தான் தப்பித்து இங்கு ஒளிந்து கொண்டதாகவும் கூறி உள்ளார். அவரது பேச்சில் சந்தேகம் அடைந்த போலீசார், தங்களது பாணியில் விசாரிக்க துவங்கினர். அப்போது தான் அசோக்குமார் உண்மைகளை கக்க துவங்கினார்.

மனம் திருந்தி வாழ வந்த அசோக்குமாருக்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு இருந்துள்ளது. இதனை கண்டுபிடித்த தவமணி, கணவன் அசோக்குமாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதன் காரணமாக ஆத்திரமடைந்த அசோக்குமார், தனது கள்ளக்காதலுக்கு இடையூறாக இருப்பதாக நினைத்து மனைவி தவமணியையும், தனது மூன்று குழந்தைகளையும் கொடூரமாக வெட்டி சாய்த்துள்ளான். போலீசார் விசாரணையின் போது முதலில் மர்ம கும்பல் தங்களை வெட்டியதாக நாடகமாடிய அசோக்குமார் பின்னர் தனது மனைவியின் நடத்தையில் சந்தேகம் வந்ததால் கொன்றதாக சொல்லி உள்ளான். போலீசார் தங்களது பாணியில் விசாரித்ததும் கடைசியாக அசோக் குமார் மீது தான் தவறு என்ற உண்மை வெளிச்சத்திற்கு வந்தது. ஒரே குடும்பத்தை சேர்ந்த தாய் குழந்தைகள் கொடூரமாக வெட்டப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: அம்மாவை.. அப்பா இப்படி தான் கொன்னாரு! பிஞ்சு குழந்தை வரைந்த ஓவியத்தால் சிக்கிய தந்தை.. தற்கொலை வழக்கில் திடீர் திருப்பம்..