சென்னையில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், “ஒரு காலத்தில் அனைத்து தேர்தல்களிலும் வெற்றி பெற்ற அதிமுகவை இன்று இடைத்தேர்தலில் கூட போட்டியிட முடியாத கட்சியாக எடப்பாடி பழனிசாமி மாற்றிவிட்டார். அதிமுக வெற்றி பெறக்கூடிய ரகசியம் என்னிடம் உள்ளது” என்று கூறியிருந்தார். இதற்கு பதிலளித்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், “ஓபிஎஸ் ஒரு கொசு. கொசுக்களைப் பற்றி பேசாதீர்கள். அவர் தனக்கு ரகசியம் தெரியும் என்கிறார். ரகசியம் என்ற வார்த்தை யாரோடு தொடர்புடையது என்பது தெரியும். திமுகவோடு அவருக்கு தொடர்பு இருந்து, அந்த நோய் தொற்றிவிட்டது. அதனால்தான், அந்த ரகசியம் எனக்குத் தெரியும் என்று கூறுகிறார்" எனக் கிண்டலடித்திருந்தார்.

இந்நிலையில் இன்று கோவையில் ஓ. பன்னீர்செல்வம் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது ஜெயக்குமார் கொசு என்று விமர்சனம் செய்தது பற்றி பன்னீர்செல்வத்திடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த பன்னீர்செல்வம், “சிரிப்பு போலீஸ் மாதிரி ஜெயக்குமார் ஒரு சிரிப்பு அரசியல்வாதி” என்று பதிலடி கொடுத்தார். மேலும் அவர் கூறுகையில், “உதயகுமாருக்கு எல்லாம் நான் பதில் சொல்ல தேவையில்லை, அவர் பேசுகிற மொழி எந்த மாதிரியான மொழி என்பது மக்களுக்குத் தெரியும். அதையெல்லாம் மக்கள் பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள்.
இதையும் படிங்க: சர்வாதிகார மனப்பான்மை... மத்திய அரசை சாடிய அதிமுக துணைப் பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி..!

கொங்குநாட்டில் இருப்பவர்கள் எல்லாம் கொங்கு நாட்டின் தங்கங்கள். நீண்ட காலமாக நானும் செங்கோட்டையனும் இணைந்து பணியாற்றி இருக்கிறோம். கட்சிக்காக எதையும் எதிர்பார்க்காமல் உழைக்கக்கூடியவர். உன்னதமானவர் செங்கோட்டையன். கட்சி இணைய வேண்டும் என்பது அனைவரின் கருத்துதான். அதிமுக விசுவாசிகள் அனைவரும் இணைய வேண்டும் என நினைக்கின்றனர். அதிமுக ஒன்றினைய வேண்டும் என்பது எங்களது கருத்து” என்று ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
இதையும் படிங்க: தொடர்பில் இருக்கும் முக்கிய நிர்வாகிகள்… அதிமுக இணைப்பு..? பரம ரகசியத்தை போட்டுடைத்த ஓ.பி.எஸ்..!