பீகாரில் மீண்டும் ஒருமுறை, கொள்ளையர்கள் அசால்டாக தனிஷ்க் ஷோரூமை குறிவைத்து கொள்ளையடித்து அதிர்ச்சி கொடுத்துள்ளனர். இந்த முறை கொள்ளையர்கள் போஜ்பூர் மாவட்டத்தின் அரா பஜாரில் உள்ள கோபாலி சௌக்கில் அமைந்துள்ள தனிஷ்க் ஷோரூமில் ஒரு பெரிய கொள்ளைச் சம்பவத்தை அரங்கேற்றி உள்ளனர். கொள்ளையர்கள் யாரும் முகத்தைக் கூட மறைக்காத அளவுக்கு பயமின்றி இந்த சம்பவத்தில் தைரியமாக இறங்கி உள்ளனர். கோடிக்கணக்கான ரூபாயைக் கொள்ளையடித்த பிறகு, அவர்கள் எளிதாக பைக்குகளில் தப்பிச் சென்றனர்.

காவல்துறையினர் கூறிய தகவலின்படி, சுமார் 6 முதல் 7 குற்றவாளிகள் ஷோரூமுக்குள் நுழைந்து வெறும் 20 நிமிடங்களில் ரூ.25 கோடிக்கு மேல் மதிப்புள்ள நகைகளை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். இந்நிலையில், சம்பவம் குறித்த தகவல் கிடைத்தவுடன், போலீசார் நகர் முழுவதும் சுற்றி வளைத்தனர்.கொள்ளையர்கள் தப்பிச் சென்ற திசையில் தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சிசிடிவி கண்காணிப்புக்குப் பிறகு, இரண்டு தனிப்படை போலீஸார் டயாரா பகுதியில் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.
இதையும் படிங்க: சுற்றுலா வந்த 2 வெளிநாட்டு பெண்கள் சீரழிப்பு.. ஆண் நண்பர்களை வாய்க்காலில் தள்ளி விட்டு இருவர் வெறிச்செயல்..!

இந்த சம்பவம் தொடர்பாக, காலையில் தனிஷ்க் ஷோரூம் திறக்கப்பட்டவுடன், வாடிக்கையாளர்களைப் போல மாறுவேடமிட்ட இரண்டு கொள்ளையர்கள் உள்ளே நுழைந்ததாகக் கூறப்படுகிறது. உள்ளே நுழைந்தவுடன், கொள்ளையர்கள் இருவரும் காவலாளியைத் தங்கள் வசம் மிரட்டி வைத்துக் கொண்டனர். அதன் பிறகு 3 கொள்ளையர்கள் உள்ளே நுழைந்து அனைத்து விற்பனையாளர்களையும் துப்பாக்கி முனையில் மிரட்டி, அனைத்து நகைகளையும் ஒரு பையில் நிரப்பினர்.

அதே நேரத்தில், விலையுயர்ந்த நகைகளை காட்ட மறுத்ததால் ஒரு விற்பனையாளரை துப்பாக்கியின் பின்புறத்தால் தாக்கி உள்ளனர். கொள்ளைக்குப் பிறகு, இரண்டு பைக்குகளில் வெவ்வேறு திசைகளில் வசதியாகத் தப்பிச் சென்றனர். கொள்ளையர்கள் சப்ரா நோக்கி தப்பிச் சென்றுவிட்டதாகக் கூறப்படுகிறது
.
தனிஷ்க் கடை மேலாளர் குமார் மிருத்யுஞ்சய் கூறுகையில், ''ஆரா கிளை தனிஷ்க் கடையில் சுமார் ரூ.50 கோடி மதிப்புள்ள வைரங்கள், தங்க நகைகள் இருந்தது. அதில் எட்டு ஆயுதமேந்திய கொள்ளையர்கள் ரூ.25 கோடிக்கு மேல் மதிப்புள்ள வைரங்கள், விலைமதிப்பற்ற தங்க நகைகளை கொள்ளையடித்து தப்பிச் சென்றனர்.

எங்கள் கடையில் 25க்கும் மேற்பட்ட ஆண், பெண் ஊழியர்கள் உள்ளனர். காலை 10:15 மணியளவில், ஆயுதமேந்திய கொள்ளையர்கள் கடைக்குள் நுழைந்து, அனைத்து ஊழியர்களையும் பிணைக் கைதிகளாகப் பிடித்து, மேலிருந்து கீழ் வரை கடையை சூறையாடினர். ஒரு சிறிய அளவிலான வைரங்களும், ஒரு பெரிய அளவிலான தங்கமும் கொள்ளையடிக்கப்பட்டு உள்ளன. எங்கள் ஊழியர்கள் சரியான நேரத்தில் காவல்துறைக்குத் தகவல் கொடுத்தனர். ஆனால், 112 காவல்துறையினரும், லோக்கல் காவல் நிலையமும் அலட்சியம் காட்டினர்'' எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: வழிப்பறி வழக்கில் கைதான சப்-இன்ஸ்பெக்டர்.. ஜாமின் கோரி உயர்நீதிமன்றத்தில் முறையீடு...!