அறுபடை வீடுகளில் 2ஆம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் மாசி திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. கொடியேற்றத்தை ஒட்டி அதிகாலை ஒரு மணிக்கு நடை திறக்கப்பட்டு, விஸ்வரூப தீபாராதனை, உதயமார்த்தாண்ட அபிஷேகம் மற்றும் உதயமார்த்தாண்ட தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

தொடர்ந்து அதிகாலை 4 மணியளவில் கொடி பட்டையானது வெள்ளி பல்லக்கில் வைத்து 9 சந்ததிகள் வழியாக கொண்டு செல்லப்பட்டது. பின்னர் 5.30 மணியளவில் கோவில் பிரகாரத்தில் உள்ள செப்புக் கொடி மரத்தில் மாசி திருவிழாவிற்கான கொடி ஏற்றப்பட்டது. பின்னர் கொடி மரத்திற்கு 16 வகை அபிஷேகங்கள் மற்றும் அலங்காரங்கள் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
இதையும் படிங்க: கோயிலில் கைவரிசை காட்டிய ஆசாமி.. கட்டி வைத்து வெளுத்து வாங்கிய மக்கள்..!

இந்த நிகழ்ச்சியில், திருவாவடுதுறை ஆதீனம் ஸ்ரீமத் சங்கர லிங்க தம்பிரான் சுவாமிகள், திருச்செந்தூர் சார்பு நீதிபதி செல்வ பாண்டியன், திருக்கோவில் தக்கார் அருள்முருகன் உட்பட பலர் கலந்து கொண்டனர். இந்த கொடியேற்றத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். இந்த திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 12-ஆம் தேதி நடைபெற உள்ளது.

தொடர்ந்து 13-ஆம் தேதி தெப்பத் திருவிழா நடைபெற உள்ளது. அன்று இரவு சுவாமியும் அம்பாளும் 11 முறை தெப்பத்தில் உலா வருவர். மாசி திருவிழா தொடங்கியதை ஒட்டி நாள்தோறும் சுவாமி பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்து அருள் பாலிக்க உள்ளார்.
இதையும் படிங்க: நாட்டிலேயே மிக உயரமான தங்க கோபுரம்... கோலாகலமாக நடந்த கும்பாபிஷேகம்..!