சென்னை சேப்பாக்கத்தில் நேற்று சென்னை அணி மற்றும் பெங்களூர் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. இதனால் சென்னையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில் நாளையும் சென்னையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த முறை போக்குவரத்து மாற்றத்திற்கு கிரிக்கெட் போட்டி காரணம் இல்லை என்று கூறப்படுகிறது. அதாவது சென்னை ஜவஹர்லால் நேரு வெளிப்புற மைதானத்தில் நாளை இரவு 7 மணிக்கு பிரேசில் லெஜண்ட்ஸ் மற்றும் இந்தியா ஆல் ஸ்டார்ஸ் அணிகளுக்கு இடையே கால்பந்து போட்டி நடைபெற உள்ளது. ஃபிஃபா உலக கோப்பை வென்ற பிரேசில் முன்னாள் வீரர்களான ரொனால்டினோ, கில்பெர்டோ சில்வா, ரிவால்டோ உள்ளிட்ட பல பிரபலமான வீரர்கள் விளையாட உள்ளனர்.

இந்த போட்டியை பார்க்க 2,000 பார்வையாளர்கள் வருகை தருவார்கள் எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் சென்னையில் நாளை மாலை 3 மணி முதல் இரவு 11 வரை சென்னையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை வெளியிட்ட அறிவிப்பில், வாகன நிறுத்துமிடத்திற்கான இடம் குறைவாக இருப்பதால் பார்வையாளர்கள் பொது போக்குவரத்துகளான சென்னை சென்ட்ரல் மெட்ரோ நிலையம், புறநகர் ரயில்கள் மற்றும் மாநகர போக்குவரத்தை பயன்படுத்தி அங்கிருந்து 200 மீட்டர் தொலைவில் விளையாட்டு மைதானத்தை நடந்து அடையலாம். பார்வையாளர்கள் விபி பார்க் சாலை (விக்டோரியா ஹால் சாலை) வழியாக சென்று மைதானத்தின் பின்புற நுழைவு வழியாக மைதானத்தை அடையலாம். பார்வையாளர்கள் இராஜா முத்தையா சாலையைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவேண்டும்.
இதையும் படிங்க: சிஎஸ்கே-வால் மாறிய போக்குவரத்து... வெளியான அறிவிப்பால் வாகன ஓட்டிகள் அவதி!!

சென்ட்ரல் ரயில் நிலைய மார்க்கமாக கார்களில், பைக்குகளில் வரும் பார்வையாளர்கள் பார்க் சாலையில் (விக்டோரியா ஹால் சாலை) வலதுபுறம் திரும்பி, மைதானத்தின் பின்புறம் வழியாக வாகன நிறுத்துமிடமான "பி"மைதானம் மற்றும் "சி" மைதானத்தில் வாகனங்களை நிறுத்தி அங்கிருந்து விளையாட்டு மைதானத்தை அடையலாம். ராஜா முத்தையா சாலையில் மாநகர பேருந்துகள் இயங்க தடை விதிக்கப்படும். அதற்கு பதிலாக அந்த வாகனங்கள் ஈவிஆர் சாலை ஈவிகே சம்பத் சாலை டவுட்டன், நாராயண குரு சாலை, சூளை நெடுஞ்சாலை மற்றும் டெமெல்லஸ் சாலை வழியாக சென்று தங்கள் இலக்கை அடையலாம். எழும்பூர் இரயில் நிலைய மார்க்கமாக வாகனங்களில் வரும் பார்வையாளர்கள் நேராக சென்ட்ரல் ரயில் நிலையத்தை நோக்கிச் சென்று பார்க் (விக்டோரியா ஹால் சாலை) இடதுபுறம் திரும்பி மைதானத்தின் பின்புற வழியாக நிறுத்துமிடமான "பி" மைதானம் மற்றும் "சி" மைதானத்தில் வாகனங்களை நிறுத்தி அங்கிருந்து விளையட்டு மைதானத்தை அடையலாம்.

அதிக போக்குவரத்து நெரிசல் ஏற்படும் போது சூளை ரவுண்டானாவில் இருந்து நேரு விளையாட்டு மைதானம் நோக்கி வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்படும். அதற்கு பதிலாக அவர்கள் தங்கள் இலக்கை அடைய சூளை நெடுஞ்சாலை, ஈவிகே சம்பத் சாலை, ஈ.வி.ஆர் சாலை வழியாக திருப்பி விடப்படுவார்கள். மேலும் அதிக போக்குவரத்து நெரிசலின் போது ஜெர்மியா சாலை, வேப்பேரி நெடுஞ்சாலை (வேப்பேரி காவல் நிலையம்) சந்திப்பிலிருந்து நேரு ஸ்டேடியம் நோக்கி செல்ல வாகனங்களுக்கு அனுமதி இல்லை. சொந்த வாகனங்கள் மற்றும் வாடகை வாகனங்களில் போட்டியை பார்வையிட வரும் பார்வையாளர் B-Ground Stadium Park Road (Victoria Hall Road), C-Ground Stadium Park Road (Victoria Hall Road), Kannappar Thidal (New Elephant Gate Bridge), KP Corporation Ground (Basin Bridge Road), Ripon Building (EVR Salai), Vetenary Hospital (Vepery High Road), Corporation Ground(Hunters Road) ஆகிய இடங்களில் தங்கள் வாகனங்களை நிறுத்துமாறு அறிவுறுத்தப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: சிறப்பு.. மிகச் சிறப்பு.. மு.க. ஸ்டாலின் அரசுக்கு பிரேமலதா விஜயகாந்த் மீண்டும் பாராட்டு பத்திரம்.!!