திருவள்ளூர் அடுத்த ஈக்காடு பகுதியை சேர்ந்தவர் முகமது இர்ஃபான் (வயது 35). இவர் திருவள்ளூர் பெருமாள் செட்டி தெருவில் சாய்பாபா கோவில் அருகே துணிக்கடை நடத்தி வருகிறார். இவரது உறவு முறையில் அக்காவான சரண்யா என்பவர் திருவள்ளூர் அடுத்த மேல்நல்லாத்தூரில் உள்ள பேருந்து நிலையம் அருகே சஃபையர் பியூட்டி லான்ச் என்ற பெயரில் பியூட்டி பார்லர் நடத்தி வருகிறார்.
இந்த நிலையில் கடந்த மார்ச் மாதம் 20ஆம் தேதி இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு நபர்கள், நாங்கள் ஆந்திராவை சேர்ந்தவர்கள் என்றும் தனது பெயர் லட்சுமி மற்றும் தம்பி ரவிக்குமார் என்றும் அறிமுகம் செய்து கொண்டனர். பின்னர் பியூட்டி பார்லரில் ஃபேசியல் செய்து சென்றுள்ளனர். அதனைத் தொடர்ந்து வாரத்திற்கு ஒரு நாள் என சரண்யாவிடம் வந்து ஃபேசியல் செய்து நைசாக பேசி நட்பாக பழகி உள்ளனர். பின்னர் சில நாட்கள் கழித்து பியூட்டி பார்லருக்கு வந்த அந்த பெண், நைசாக பேசி பழகி தங்களிடம் தங்கப் புதையல் இருப்பதாகவும் 10 லட்சம் கொடுத்தால் அரை கிலோ தங்கத்தை கொடுப்பதாகவும் கூறி ஆசையை தூண்டியுள்ளார்.

இது குறித்து சரண்யா தனது அண்ணன் முகமது இர்ஃபான் இடம் சொன்னதற்கு நாளை என்னிடம் பேச சொல் நான் பார்த்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார். ஆனால் இவர்கள் ஏமாற்று கும்பல் என்பதை அறிந்து கொண்ட பியூட்டி பார்லர் உரிமையாளர் தனது தம்பியிடம் தகவல் தெரிவித்ததை அடுத்து தம்பி இர்பான் நூதன மோசடி குறித்து திருவள்ளூர் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் தமிழரசிக்கு ரகசிய தகவல் அளித்துள்ளார். இதனை அடுத்து கும்பலை கையும் களவுமாக வளைத்து பிடிப்பதற்காக திட்டம் தீட்டிய போலீசார் இன்று காலை திருவள்ளூர் அடுத்த கேட்டர்பில்லர் தனியார் நிறுவனம் அருகே உள்ள சிவன் கோயிலுக்கு மோசடி கும்பலை வரவழைக்க திட்டம் தீட்டினர்.
இதையும் படிங்க: பழிக்கு பழிவாங்க காத்திருந்த ரவுடிகள்.. பட்டா கத்தி, வெடிகுண்டுகள் தயார்.. கடைசியில் நடந்த ட்விஸ்ட்..!

நாங்கள் பணத்துடன் காத்திருப்பதாகவும் தங்கத்தை கொடுத்து செல்லும்படி கூறியதை அடுத்து சிவன் கோவில் அருகே இருசக்கர வாகனத்தில் வந்த பெண் உட்பட இருவரை மறைந்திருந்த திருவள்ளூர் உட்கோட்ட காவல்துணை கண்காணிப்பாளர் தமிழரசி தலைமையிலான உதவி ஆய்வாளர்கள் சுரேஷ் கோபிகிருஷ்ணன் கோவிந்தசாமி மற்றும் தலைமை காவலர் உள்ளிட்ட காவலர்கள் கொண்ட குழுவினர் அவர்களை கைது செய்தனர். மேலும் கைது செய்த இருவரையும் டிஎஸ்பி அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர். அதன் பின்னர் அவர்களிடமிருந்து 1/2 கிலோ தங்க மூலம் பூசப்பட்ட பித்தளையை கைப்பற்றிய போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் அவர்கள் இருவரும் நூதன மோசடியில் ஈடுபட்டது தெரிந்தது. இருவரும் ஆந்திர மாநிலம் குண்டூர் பகுதியைச் சேர்ந்த லட்சுமி மற்றும் அவரது தம்பி ரவி என்பதும் தெரியவந்துள்ளது. மேலும் இவர்களுக்கு மூளையாக மதுரை பகுதியைச் சேர்ந்த மணி என்பவர் செயல்பட்டு வருவதாகவும் இவர் கொடுத்த தகவலின் அடிப்படையிலேயே இது போன்ற நூதன மோசடியில் இவர்கள் ஈடுபட்டதும் தெரிய வந்துள்ளது.
தொடர்ந்து விசாரணை மேற்கொண்ட போலீசார் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். திருவள்ளூர் அருகே நடைபெறவிருந்த மோசடியை தடுத்து நிறுத்தி மோசடி கும்பலை போலீசார் அவர்களை கைது செய்துள்ள சம்பவத்திற்கு போலீசாருக்கு பெரும் பாராட்டுதல் குவிந்து வருகிறது.
இதையும் படிங்க: பெற்ற மகளுக்கே பாலியல் தொல்லை.. உடல் முழுவதும் கடித்து வைத்த காமுக தந்தை.. வாய் பேச முடியாத பெண்ணுக்கு துயரம்..!