கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் பாராளுமன்ற இரு அவைகளிலும் வக்பு வாரிய சட்ட திருத்த மசோதா தொடர்பாக வாக்கெடுப்பு நடத்தப்பட்டு நிறைவேறியது. இதற்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவும் ஒப்புதல் அளித்துவிட்டார். எனவே வக்பு வாரிய சட்டத் திருத்தம் அமலாகிறது.

இந்த நிலையில் வக்பு வாரிய சட்ட திருத்த மசோதா தொடர்பாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை கருத்து தெரிவித்துள்ளார். அதில், வக்ஃபு மசோதா முஸ்லிம்களை ஓரங்கட்டுவதையும் அவர்களின் தனிப்பட்ட சட்டங்கள் மற்றும் சொத்துரிமைகளைப் பறிப்பதையும் நோக்கமாகக் கொண்ட ஒரு ஆயுதம் என்பது உறுதியாகியுள்ளது என தெரிவித்தார்.
இதையும் படிங்க: கடும் எதிர்ப்புக்கு மத்தியில் வக்பு சட்டத்திருத்த மசோதா அமல்..! கிரீன் சிக்னல் காட்டிய ஜனாதிபதி..!

ஆர்எஸ்எஸ், பாஜக மற்றும் அவர்களது கூட்டாளிகளால் அரசியலமைப்பின் மீதான இந்தத் தாக்குதல் முஸ்லிம்களை இலக்காகக் கொண்டது என்றும் ஆனால் எதிர்காலத்தில் மற்ற சமூகங்களை குறிவைப்பதற்கான ஒரு முன்னுதாரணமாக இது அமைவதாகவும் இந்தச் சட்டம் இந்தியாவின் கருத்தையே தாக்குவதாலும், மத சுதந்திர உரிமையான 25வது பிரிவை மீறுவதாலும் காங்கிரஸ் கட்சி இந்த சட்டத்தை கடுமையாக எதிர்க்கிறது என்று கூறினார்.

இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக கூறிய அவர், 1930களில், ஹிட்லர் தலைமையிலான நாஜி கட்சியினர், இதே பாணியில் முதலில் கம்யூனிஸ்டுகளையும், அடுத்ததாக தொழிற்சங்கவாதிகளையும், பின்னர் யூதர்களையும் பிடித்து அழித்தனர். அதேபோல இன்று பாஜக தலைமையிலான சங் பரிவார் குழுவினர், முதலில் முஸ்லீம்களை குறி வைத்துள்ளதாக குற்றம்சாட்டினார்.

அடுத்தது கிறிஸ்துவர்களை குறி வைக்க திட்டமிட்டுள்ளது தெளிவாகியுள்ளது என்றும் சிறுபான்மையினர் மற்றும் விளிம்பு நிலை மக்களை, மோடி அரசின் பாசிச தாக்குதல்களில் இருந்து பாதுகாக்க, ராகுல் காந்தியும், மல்லிகார்ஜுன் கார்கே தலைமையிலான காங்கிரஸ் பேரியக்கமும் உள்ளதாகவும் கூறினார். மேலும், அண்ணல் அம்பேத்கர் உருவாக்கிய இந்திய அரசியல் சாசனத்தை அழிக்க பாஜக, ஆர்.எஸ்.எஸ் முன்னெடுத்து வரும் இத்தகைய நாச வேலைகளை காங்கிரஸ் பேரியக்கம் முழு மூச்சாக எதிர்க்கும் என்றும் திட்டவட்டமாக தெரிவித்தார்.
இதையும் படிங்க: வக்பு சட்டத் திருத்தம்.. மசூதிகள், நினைவிடங்களுக்கு பாதிப்பா.? விரிவாக விளக்கிய பாஜக!