மதுபானங்கள் கொள்முதல் மற்றும் விற்பனையில், பெரிய அளவில் முறைகேடுகள் நடப்பதாக மத்திய அரசின் அமலாக்கத்துறைக்கு புகார்கள் சென்றன. இதை அடுத்து கடந்த 6 ஆம் தேதி டாஸ்மாக் நிறுவனம் மது கொள்முதல் செய்யும் ஆலைகள், மது விற்பனை நிறுவனங்கள், டாஸ்மாக் தலைமை அலுவலகம், டாஸ்மாக் முன்னாள் அதிகாரிகளின் வீடுகள் என, 25க்கும் மேற்பட்ட இடங்களில், அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையின் போது முக்கியமான ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக அமலாக்கத்துறை வெளியிட்ட அறிக்கையில், டாஸ்மாக் அலுவலகங்களில் நடத்தப்பட்ட சோதனையில், பணியிட மாற்றம், போக்குவரத்து டெண்டர், பார் லைசென்ஸ் டெண்டர் ஆகியன சில மதுபான நிறுவனங்களுக்குச் சாதகமாக வழங்கப்பட்டது. டாஸ்மாக் அதிகாரிகள் உதவியுடன் பாட்டிலுக்கு ரூ.10 முதல் ரூ.30 வரை கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டது தொடர்பான தரவுகள், அதில் டாஸ்மாக் அதிகாரிகள் சம்பந்தப்பட்டிருப்பதற்கு உண்டான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. டாஸ்மாக்கின் போக்குவரத்து டெண்டர் ஒதுக்கீடுகளில் முறைகேடு நடந்ததற்கான ஆதாரம் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. விண்ணப்பதாரர்களின் கேஒய்சி விவரங்கள் மற்றும் அவர்கள் அளித்த டிடி விவரங்கள் சரியாக பொருந்தவில்லை.

இதற்கான இறுதி ஏலத்தில் ஒரே ஒரு விண்ணப்பதாரர் மட்டுமே இருந்தபோதிலும் அவருக்கே டெண்டர்கள் வழங்கப்பட்டுள்ளன. போக்குவரத்திற்காக டாஸ்மாக் ஆண்டுதோறும் ரூ.100 கோடிக்கு மேல் செலவு செய்கிறது. டாஸ்மாக் பார் லைசென்ஸ் டெண்டர்கள் ஒதுக்கியதிலும் முறைகேடு நடந்ததற்கான ஆதாரம் கிடைத்து உள்ளது. ஜிஎஸ்டி, பான் எண் இல்லாதவர்களுக்கும், முறையான கேஒய்சி ஆவணங்கள் இல்லாத விண்ணப்பதாரர்களுக்கும் டெண்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளன என்று தெரிவித்திருந்தது. இந்த விவகாரம் நாளுக்கு நாள் தீவிரம் அடைந்து வருகிறது. மேலும் திமுக ஆட்சியை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அழுத்தம் கொடுக்க தொங்கி உள்ளன. அந்த வகையில் டாஸ்மாக் தலைமை அலுவலகத்தை முற்றுகையிட போவதாக பாஜகவினர் அறிவித்தனர்.
இதையும் படிங்க: பொய் சொல்வது யார் மு.க.ஸ்டாலினா..? தங்கம் தென்னரசுவா..? பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி..!
அதன்படி இன்று காலையில் பாஜகவினர் மதுக்கடைகள் மற்றும் தலைமை அலுவலகத்தை முற்றுகையிட முயன்றனா். ஆனால் அவர்களை போராட்டம் செய்ய விடாமல் போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனா். இதில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, தமிழிசை செளந்தரராஜன், பொன்.ராதாகிருஷ்ணன், நயினார் நாகேந்திரன், வானதி சீனிவாசன் உள்ளிட்ட தலைவர்கள் போலீசாரால் கைது செய்யப்பட்டு திருமண மண்டபத்தில் அடைத்து வைக்கப்பட்டனர். இந்த நிலையில் அண்ணாமலை உள்ளிட்ட பாஜக தலைவர்கள் கைது செய்யப்பட்டது கண்டிக்கத்தக்கது என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ரூ. 1000 கோடி டாஸ்மாக் ஊழலைக் கண்டித்து சென்னையில் டாஸ்மாக் தலைமை அலுவலகத்தை முற்றுமையிடும் போராட்டத்தை நடத்துவதற்கு முன்பே பாரதிய ஜனதாவின் மாநிலத் தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட தலைவர்களை காவல்துறை கைது செய்திருப்பது கண்டிக்கத்தக்கது. ஊழலுக்கு எதிரான போராட்டங்களைக் கண்டு அரசும் காவல்துறையும் அஞ்சுவது ஏன்? தமிழ்நாட்டில் ஊழலுக்கு எதிராக ஜனநாயக முறையில் போராடுவதற்கு கூட அனுமதி இல்லையா?. திமுகவினர் ஊழல் செய்யவில்லை என்றால் இத்தகைய அடக்குமுறைகளை கைவிட்டு, டாஸ்மாக் ஊழல் குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு ஆணையிட வேண்டும் என தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: கருணாநிதி நூற்றாண்டு நாணயத்தில் ரூபாய் குறியீடு.. அதையும் தூக்கி வீசி எறிந்து விடுமா திமுக அரசு? அன்புமணி அடுக்கும் கேள்விகள்..!