இந்தியா கூட்டணி ஒரு நெல்லிக்காய் மூட்டை என்பது மீண்டும் மீண்டும் நிரூபணம் ஆகிறது. தொடர்ந்து வரும் தோல்விகள், கட்சித் தலைவர்களுக்கிடையேயான ஈகோ யுத்தம் காரணமாக இந்தியா கூட்டணி ஏற்கனவே தடுமாறி வருகின்ற நிலையில் காங்கிரஸ் கட்சி அதற்கு முடிவுரை எழுதி வருகிறது. தொடர்ச்சியாக பல மாநிலங்களில் இந்தியா கூட்டணி ஒன்றும் இல்லாமல் போய்க் கொண்டிருக்கிறது. ஜம்மு, தமிழ்நாடு, மகாராஷ்டிரா உள்ளிட்ட சில மாநிலங்களில் மட்டுமே இந்தியா கூட்டணி பேருக்கு இருக்கிறது. அங்கும் இந்தியா கூட்டணி இல்லை என்கின்ற நிலையை உருவாக்க காங்கிரஸ் முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்தியா கூட்டணி அமைக்கப்பட்டதன் நோக்கமே மக்களவைத் தேர்தலில் எதிர்க்கட்சிகள் வாக்கு சிதறாமல் பாஜகவை வீழ்த்த வேண்டும் என்பதே. ஆனால் இந்தியா கூட்டணியை உருவாக்கிய நிதிஷ்குமார் கூட்டணியை விட்டு வெளியேறினார். அதேபோன்று 2019 தேர்தலில் பாஜகவை எதிர்க்க நாடு முழுவதும் அணி திரட்ட புறப்பட்ட சந்திரபாபு நாயுடுவும் பாஜகவுடன் கைகோர்த்தார். இதனால் ஆந்திராவில் இந்தியா கூட்டணி அமையவில்லை. அதேபோன்று கேரளாவிலும் இந்தியா கூட்டணி அமையவில்லை. மேற்கு வங்கத்தில் முதலில் ஒப்புக்கொண்ட மம்தா பிறகு பின் வாங்கினார்.
இதையும் படிங்க: கேஜ்ரிவால், சிசோடியா உள்ளிட்ட தலைவர்களை வீழ்த்திய காங்கிரஸ்... வாக்குகளை பிரித்ததால் தோல்வி

இந்தியா கூட்டணிக்குள் இருந்தாலும் காங்கிரஸ்க்கும், சிபிஎம்-க்கும் தொகுதிகளை ஒதுக்குவதில் பிடிவாதம் காட்டினார். இதேபோன்று மற்ற மாநிலங்களில் காங்கிரஸ் பெரியண்ணன் மனப்பான்மையுடன் நடந்து கொண்டு சிறிய கட்சிகளை ஓரங்கட்டியது. இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் 2024 மக்களவையில் அரியானாவில் ஆம் ஆத்மியுடன் ஒன்றாக நின்று ஐந்து தொகுதிகளை கைப்பற்றிய இந்தியா கூட்டணி பிறகு அடுத்து வந்த சட்டமன்ற தேர்தலில் ஆம் ஆத்மியை காங்கிரஸ் கழட்டிவிட்டது. இதனால் இரண்டு கட்சிகளுமே தோல்வியை தழுவின. அதன் பிறகும் கூட்டணியை வலுப்படுத்துவது, ஒற்றுமை பேசுவது என்கின்ற எந்தவித முனைப்பும் காங்கிரஸ் காட்டவில்லை.

காங்கிரஸ் தலைமையை ஏற்க இந்தியா கூட்டணியில் உள்ள கட்சிகள் தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வரும் நிலையில் இந்தியா கூட்டணியின் ஒற்றுமை என்பது கேள்விக்குறியாகி வந்ததை கடந்த பல தேர்தலில் பார்த்தோம். மகாராஷ்டிரா தேர்தலில் இந்தியா கூட்டணி ஒரு பக்கமாகவும் ராஷ்ட்ரிய ஜனதா தள், விசிக ஒரு பக்கமும் நின்றதை பார்த்தோம். இதனால் இந்தியா கூட்டணி என்பது பெயரளவில் மட்டுமே இருக்கிறது என்கின்ற கருத்து பரவலாக இருந்தது. இந்நிலையில் டெல்லி தேர்தலில் இந்தியா கூட்டணி ஒரு பக்கமாகவும், காங்கிரஸ் ஒரு பக்கமும் எதிரெதிர் திசையில் நின்றதும், ஆம்ஆத்மி ஆட்சிக்கு வரக்கூடாது என்று காங்கிரஸ் கங்கணம் கட்டிக்கொண்டு செயல்பட்டதும், காங்கிரஸ் எதிர்ப்பு மனநிலையில் இருந்ததும் அங்கு இந்தியா கூட்டணிக்கு சமாதி கட்டப்பட்டது.

இதனால் இரண்டு கட்சிகளும் படுதோல்வி அடைந்து, பாஜகவை அரியணையில் அமர்த்தின. தமிழகத்திலும் இந்தியா கூட்டணி என்ற ஒன்று இல்லை, அது திமுக கூட்டணியாக உள்ளது. திமுக கூட்டணிக்குள் விசிக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, காங்கிரஸ் அவ்வப்போது முரண்டு பிடிப்பதை காண்கிறோம். தமிழகத்திலும் இந்தியா கூட்டணி என்பது வரும் தேர்தலில் இருக்குமா? என்பது கேள்விக்குறியாக உள்ளது. காரணம் தொகுதி உடன்பாட்டில் மிகப்பெரும் அளவில் பிரச்சனைகள் வெடிக்கும், கூட்டணி கட்சிகளை பெரிய அண்ணன் மனோபாவத்தில் திமுக அணுகுவதால் கூட்டணியில் இருந்து கட்சிகள் குறிப்பாக காங்கிரஸ் விலக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

அவ்வாறு விலகினால் தமிழகத்திலும் இந்தியா கூட்டணி கேள்விக்குறியாகும். கேரளாவில் ஏற்கனவே மார்க்சிஸ்ட்டுகளும் காங்கிரசும் எதிரெதிர் திசையில் இருக்கின்றனர். மகாராஷ்டிராவிலும் இந்தியா கூட்டணியில் ஒரு சிலர் பாஜகவிற்கு ஆதரவாக நகர்வதை காண முடிகிறது. இந்நிலையில் இந்தியா கூட்டணி என்கின்ற கூட்டணியை உடைத்து விடுவது என்கிற முடிவுக்கு காங்கிரஸ் வந்துள்ளது. இதன் அடுத்த கட்டமாக காங்கிரஸ் கட்சிக்குள் இந்தியா கூட்டணி குறித்த புது சிந்தனையும், இந்தியா கூட்டணியில் இருக்கின்ற கட்சிகளோடு கூட்டணி தொடர வேண்டுமா? என்கிற எண்ணமும் தோன்ற ஆரம்பித்துள்ளது.

இதன் விளைவாக மாநில சட்டமன்றத் தேர்தலில் அந்தந்த மாநிலத்தில் உள்ள காங்கிரஸ் தலைமை கூட்டணி குறித்து முடிவு எடுக்கலாம், இதில் தலைமை ஓரளவுக்கு வழிகாட்டும், ஆனால் இறுதி முடிவு மாநில தலைமையின் முடிவுக்குட்பட்டே இருக்கும் என்கின்ற ஒரு முடிவை நோக்கி காங்கிரஸ் நகர்வதாக கூறப்படுகிறது. இவ்வாறு நடந்தால் தமிழகத்தில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் இருக்குமா? என்பது தெரியாது. காரணம் கடந்த தேர்தலில் 60-க்கும் மேற்பட்ட தொகுதிகளை பெற்ற காங்கிரஸ் 2021 தேர்தலில் திமுக கூட்டணியில் வெறும் 25 சீட்டுக்கு மட்டுமே நின்றது. இனிவரும் 2026 சட்டமன்றத் தேர்தலிலும் அதே அளவு எண்ணிக்கையே காங்கிரஸுக்கு கொடுக்க திமுக முயலும்.
அதே நேரம் காங்கிரஸ் 65 தொகுதிகளை எதிர்பார்க்கிறது. அதிகபட்சமாக 35 தொகுதியில் வரை காங்கிரஸுக்கு கொடுக்க திமுக முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் கண்டிப்பாக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் வெளியேறலாம். கூட்டணியில் இருந்து காங்கிரஸ் வெளியேறுவது குறித்து திமுக தலைமை கவலைப்படுவதாக தெரியவில்லை. இதனால் தமிழகத்திலும் இந்தியா கூட்டணி இல்லாமல் போகும். இருந்தும் இல்லாமல் இருக்கும் இந்தியா கூட்டணி இனி எதற்கு என்கிற முடிவுக்கு காங்கிரஸ் டெல்லி தலைமை வந்து விட்டதால் இந்தியா கூட்டணியில் இனி காங்கிரஸ் இல்லை என்கிற அறிவிப்பு வெளியாகலாம்.

whatsapp-ல் குரூப் அட்மினே குரூப் விட்டு வெளியேறினால் அடுத்து இருப்பவர் அட்மினாக மாறுவார். அதன் பிறகு அந்த whatsapp குழு ஒன்றும் இல்லாமல் போகும். அதுபோன்று குரூப் அட்மின் ஆன காங்கிரஸ் 100 தொகுதிகளை வைத்துள்ள பெரிய கட்சி, அதுவே இந்தியா கூட்டணியை புறக்கணித்தால் இந்தியா கூட்டணி என்பது வெறும் லெட்டர் பேடாக மட்டுமே இருக்கும் என்பது நிச்சயம். இந்த முடிவால் தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் பெருத்த மாற்றங்கள் வருவதற்கும் வாய்ப்பு உள்ளது.
இதையும் படிங்க: ஈரோடு கிழக்கு தொகுதி...முந்திக்கொண்ட காங்கிரஸ் முடிவுரை எழுதிய திமுக...தொகுதி கைமாறிய பின்னணி என்ன?