சிவகாசி மாமன்ற கூட்ட அரங்கில் பாஜக- காங்கிரஸ் உறுப்பினர்கள் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்ள முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
சிவகாசி மாநகராட்சியின் மாமன்ற அவசரக் கூட்டம் மேயர் சங்கீதா இன்பம் தலைமையில், துணை மேயர் விக்னேஷ்பிரியா, ஆணையாளர் கிருஷ்ணமூர்த்தி முன்னிலையில், அனைத்து கட்சிகளின் மாமன்ற உறுப்பினர்களும், மாநகராட்சி அலுவலர்களும் கலந்து கொள்ள நடைபெற்றது. கூட்டத்தில் கடந்த 11-ம் தேதி நடத்தப்பட்ட சாதாரண கூட்டத்தின் 98 - தீர்மானங்களும் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

கூட்டம் தொடங்கிய வுடன், கடந்த மாமன்ற கூட்டத்தில் தேசிய கீதம் பாடப்படாமல் அவமதிக்கப்பட்டதாக பாஜக உறுப்பினர் பாஸ்கரன் பதாகையை கையிலேந்தி பேச முற்பட்டபோது, அருகிலிருந்த காங்கிரஸ் உறுப்பினர் ரவிசங்கர் கடந்த கூட்டத்தில் தேசிய கீதம் பாடப்படாமல் அவமதிக்கப்படவில்லை அப்போது நடந்த பிரச்சினையே வேறு என்று சொல்லியபடி பாஸ்கரன் கையிலேந்தியிருந்த பதாகையை பிடுங்கினார்.

இதையும் படிங்க: பட்டப்பகலில் அரங்கேறிய திருட்டு.. கொள்ளை முடிந்ததும் திருச்செந்தூர் முருகனை தரிசிக்க புறப்பட்ட திருடன்.. மடக்கிபிடித்த போலீஸ்..!
இதனால் ஆத்திரமடைந்த பாஜக உறுப்பினர் பாஸ்கரன்,காங்கிரஸ் உறுப்பினர் ரவிசங்கரை அடிக்க பாய்ந்ததால் காங்கிரஸ் மாமன்ற உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து பாஜக உறுப்பினரின் செயல்பாடுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் கூட்டத்தில் பரபரப்பு நிலவியது. உறுப்பினர்களை மேயர், ஆணையாளர் சமாதானப்படுத்திய பின்பாக கூட்டம் தொடர்ந்து நடந்த நிலையில், அதிமுகவில் வெற்றி பெற்று திமுகவில் இணைந்த மாமன்ற உறுப்பினர் ஸ்ரீநிகா பேச முற்பட்டபோது திமுக உறுப்பினர் ஜெயின்லாபுதீன் குறுக்கிட்டு பேசியதால், மேயர் ஆதரவு தரப்பு உறுப்பினர்களுக்கும், மேயருக்கு எதிர்ப்பு தரப்பிலுள்ள உறுப்பினர்களுக்குமிடையே ஒருவருக்கொருவர் ஒருமையில் மரியாதையின்றி பேசி வாக்குவாதம் நடந்து.

கூச்சல் குழப்பம் ஏற்பட்டதால் திமுக உறுப்பினர் ஜெயினுலாபுதீன் ஆவேசமாக நாற்காலியை தள்ளி விட்டதில் கூட்டத்தில் மீண்டும் பரபரப்பு தொற்றிக் கொண்டது. அதனைத் தொடர்ந்து மீண்டும் அனைவரையும் சமாதானப்படுத்தி கூட்டம் நடத்தியதை யடுத்து கூட்டத்தின் பாதியிலேயே 98- தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டதாக மேயர் அறிவித்ததால், காரசாரமாக பேசி, ஒருவருக்கொருவர் அடிக்க பாய்ந்து, கூச்சலும்- குழப்ப முமாக நடந்த மாமன்ற கூட்டம் தேசிய கீதத்துடன் நிறைவு பெற்றது.

மாமன்ற கூட்ட அரங்கினுள் பாஜக மற்றும் காங்கிரஸ் உறுப்பினர்களிடையே ஒருவருக்கொருவர் அடிக்க பாய்ந்த செயல்பாடு, கூட்டம் நடந்து முடிந்தவுடன் அரங்கின் வெளியிலும் பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சியினர்களிடையே வாய் வார்த்தை ஜாலத்துடன் சண்டையிட்டு மோதலுடன் கலவரம் ஏற்படும் சூழல் உருவானது. அனைத்து தரப்பினர்களையும் மாநகராட்சி அலுவலர்களும் காவல்துறையினரும் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்த போதிலும் மாநகராட்சி அலுவலக வளாகத்தில் காவல்துறை கண்காணிப்பாளர் பாஸ்கரன் தலைமையிலான போலீசார்கள் பாதுகாப்பிற்காக குவிக்கப்பட்டிருந்தனர்.

இதற்கிடையே பாஜக உறுப்பினரும், அதிமுக மாமன்ற உறுப்பினராக வெற்றி பெற்று திமுகவில் இணைந்துள்ள மாமன்ற உறுப்பினர்களும், மற்றுமுள்ள ஒரு சில உறுப்பினர்களும் மாநகராட்சி கூட்டத்தின் மரபுகளை மீறி செயல்பட்டு வருவதாக குற்றம் சாட்டிய காங்கிரஸ் உறுப்பினர், சிவகாசி மாநகராட்சியில் ஏற்பட்டுள்ள பிரச்சனையை தமிழக முதல்வர் ஸ்டாலின் தீர்த்து வைக்க முன் வர வேண்டுமென்று கோரிக்கை விடுத்து தனக்கு கொலை மிரட்டல் விடுத்த பாஜக உறுப்பினர் பாஸ்கரன் மீது சிவகாசி நகர் காவல் நிலைய போலீசாரிடம் புகார் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: அரசியல் அநாகரீகம் அண்ணாமலை.. செல்வப்பெருந்தகை கடும் தாக்கு.. செந்தில் பாலாஜி, விஜய்க்கு சப்போர்ட்..!