கர்நாடக இசையையும், மேற்கத்திய இசையையும் ஒன்றாக கலந்து ரசிகர்களை கிரங்கடிப்பதில் இளையராஜாவுக்கு நிகர் வேறு யாரும் இல்லை என்றே சொல்லலாம். 60 ஆண்டுகளாக அன்னகிளி முதல் சமீபத்தில் வெளியான விடுதலை 2 திரைப்படம் வரை ரசிகர்களை தன் இசையால் ஈர்த்து வருகிறார். தனது 81 வயதிலும் இசையில் அசாத்தியத்தை நிகழ்த்தி வரும் இளையராஜா, சிம்பொனி இசை மூலம் மற்றொரு மணிமகுடத்தை அடைந்துள்ளார். லண்டனில் தனது முதல் சிம்பொனியை அரங்கேற்றம் செய்திருக்கிறார்.

உலகின் தலைசிறந்த இசைக்குழுவான ராயல் பிலார்மோனிக் ஆர்கெஸ்ட்ராவுடன் இணைந்து கடந்த மார்ச் 8 ஆம் தேதி இந்திய நேரப்படி 12.30 மணிக்கு இந்த சிம்பொனி நடைபெற்றது. வேலியன்ட் என பெயரிடப்பட்டுள்ள இந்த இசை நிகழ்ச்சிக்கு ஆயிரக்கணக்கானோர் வருகை தந்தனர். இந்த இசை நிகழ்ச்சியை உலகின் மிகச்சிறந்த இசை குழுக்களில் ஒன்றான ராயல்பிலார்மாலிக் ஆர்கெஸ்ட்ரா இசை கலைஞர்கள் தான் இசையமைத்தனர்.
இதையும் படிங்க: பிரதமர் மோடியுடன் இளையராஜா திடீர் சந்திப்பு… என்ன விஷயமா இருக்கும்?

இளையராஜாவின் இசைக் குறிப்புகளுக்கு நூற்றுக்கணக்கான இசைக் கலைஞர்கள் ஒரே நேரத்தில் இசைத்தது பார்வையாளர்களை பரவசத்தில் ஆழ்த்தியது. இதன் மூலம் மொசாட், பீத்தோவன், சாய்கோவ்ஸ்கி ஆகியோர் வரிசையில் இளையராஜாவும் சிம்பொனி இசை கலைஞர்கள் வரிசையில் இணைந்திருக்கிறார். இந்நிலையில் இளையராஜாவுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் பாராட்டு விழா நடத்தப்படும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சட்டப்பேரவையில் தெரிவித்தார்.

அதாவது இளையராஜாவின் பிறந்தநாளான ஜூன் இரண்டாம் தேதி அந்த விழா நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இளையராஜாவின் உண்மையான பிறந்தநாள் ஜூன் 3ஆம் தேதிதான். ஆனால் அன்றைய தினம் மறைந்த முதலமைச்சரும், திமுகவின் முன்னாள் தலைவருமான கருணாநிதியின் பிறந்தநாள் என்பதால் அவருக்கு மரியாதை கொடுக்கும் விதமாக தனது பிறந்தநாளை ஒரு நாள் முன்னரே இளையராஜா கொண்டாடுகிறார் என்பதும்; அவருக்கு இசைஞானி என்ற பட்டம் கொடுத்தது கருணாநிதிதான் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: லண்டனை அதிரவிட்ட தமிழன் இளையராஜா..! அரங்கேறியது ‘வேலியன்ட்’ சிம்ஃபோனி