1943 ஆம் ஆண்டு தேனி மாவட்டம் பண்ணைபுரம் என்ற குக் கிராமத்தில் பிறந்த இளையராஜா, தனது அண்ணன் பாவலர் வரதராஜனால் இசை உலகிற்கு வந்தார். ஹார்மோனியம் மூலம் இசைக்க கத்துக் கொண்ட அவர், பின்னர் 21வது வயதில் பாடலுக்கு இசையமைக்க வேண்டும் என்ற ஆசையுடன் சென்னை வந்தார்.
சென்னையில் தன்ராஜ் மாஸ்டர் அளித்த ஊக்கத்தால் மேற்கத்திய இசையை கற்ற இவர், இதுவரை சுமார் 1000 திரைப்படங்களுக்கு மேல் இசையமைத்துள்ளார். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என கிட்டதட்ட 15 ஆயிரம் பாடல்களுக்கு இசையமைத்துள்ளார். 700 படங்களில் பாடல்களையும் எழுதியுள்ளார். இந்த நிலையில் இளையராஜா சிம்பொனியை உருவாக்கியுள்ளார்.

கர்நாடக இசையையும், மேற்கத்திய இசையையும் ஒன்றாக கலந்து ரசிகர்களை கிரங்கடிப்பதில் இளையராஜாவுக்கு நிகர் வேறு யாரும் இல்லை என்றே சொல்லலாம். 60 ஆண்டுகளாக அன்னகிளி முதல் சமீபத்தில் வெளியான விடுதலை 2 திரைப்படம் வரை ரசிகர்களை தன் இசையால் ஈர்த்து வருகிறார். தனது 81 வயதிலும் இசையில் அசாத்தியத்தை நிகழ்த்தி வரும் இளையராஜா, சிம்பொனி இசை மூலம் மற்றொரு மணிமகுடத்தை அடைந்துள்ளார்.
இதையும் படிங்க: லண்டனை அதிரவிட்ட தமிழன் இளையராஜா..! அரங்கேறியது ‘வேலியன்ட்’ சிம்ஃபோனி
லண்டனில் தனது முதல் சிம்பொனியை அரங்கேற்றம் செய்திருக்கிறார். உலகின் தலைசிறந்த இசைக்குழுவான ராயல் பிலார்மோனிக் ஆர்கெஸ்ட்ராவுடன் இணைந்து கடந்த மார்ச் 8 ஆம் தேதி இந்திய நேரப்படி 12.30 மணிக்கு இந்த சிம்பொனி நடைபெற்றது. வேலியன்ட் என பெயரிடப்பட்டுள்ள இந்த இசை நிகழ்ச்சிக்கு ஆயிரக்கணக்கானோர் வருகை தந்தனர்.

இந்த இசை நிகழ்ச்சியை உலகின் மிகச்சிறந்த இசை குழுக்களில் ஒன்றான ராயல்பிலார்மாலிக் ஆர்கெஸ்ட்ரா இசை கலைஞர்கள் தான் இசையமைத்தனர். இளையராஜாவின் இசைக் குறிப்புகளுக்கு நூற்றுக்கணக்கான இசைக் கலைஞர்கள் ஒரே நேரத்தில் இசைத்தது பார்வையாளர்களை பரவசத்தில் ஆழ்த்தியது. இதன் மூலம் மொசாட், பீத்தோவன், சாய்கோவ்ஸ்கி ஆகியோர் வரிசையில் இளையராஜாவும் சிம்பொனி இசை கலைஞர்கள் வரிசையில் இணைந்திருக்கிறார்.

இந்த நிலையில் இன்று இசையமைப்பாளர் இளையராஜா பிரதமர் மோடியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளார். மேலும் அவருடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார். அதில் 'பிரதமர் மோடி உடனான சந்திப்பு, எனக்கு மறக்க முடியாத நிகழ்வாக அமைந்துள்ளது. எனது சிம்பொனி வேலியண்ட் உட்பட பல விஷயங்களைப் பற்றி நாங்கள் பேசினோம். அவரது பாராட்டு மற்றும் ஆதரவால் பணிவுகொள்கிறேன்' எனப் பதிவிட்டுள்ளார்.

இதேபோல் இளையராஜாவை சந்தித்தது குறித்து பிரதமர் மோடியும் தனது எக்ஸ் தளத்தில் கருத்துகளை பகிர்ந்துள்ளார். அதில், நமது இசை மற்றும் கலாச்சாரத்தில் மகத்தான தாக்கத்தை ஏற்படுத்திய இசை ஜாம்பவான் ராஜ்யசபா உறுப்பினர் திரு இளையராஜா ஜியை சந்தித்ததில் மகிழ்ச்சி.
அவர் எல்லா வகையிலும் ஒரு முன்னோடி, சில நாட்களுக்கு முன்பு லண்டனில் தனது முதல் மேற்கத்திய பாரம்பரிய சிம்பொனியான வேலியண்டை வழங்குவதன் மூலம் மீண்டும் ஒரு வரலாற்றை உருவாக்கினார். இந்த நிகழ்ச்சி உலகப் புகழ்பெற்ற ராயல் பில்ஹார்மோனிக் இசைக்குழுவுடன் இணைந்து நிகழ்த்தப்பட்டது. இந்த மகத்தான சாதனை அவரது இணையற்ற இசைப் பயணத்தில் மற்றொரு அத்தியாயத்தைக் குறிக்கிறது - இது உலக அளவில் சிறப்பை மறுவரையறை செய்து கொண்டே இருக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: இளையராஜா இந்தியாவுக்கே பெருமை... புகழாரம் சூட்டும் பாமக தலைவர் அன்புமணி..!