உத்தரப்பிரதேசம், பிரயாக்ராஜ் நகரில் மகா கும்பமேளாவில் கின்னஸ் சாதனை படைக்கும் முயற்சியாக ஒரே நேரத்தில் 15 ஆயிரம் துப்புரவு தொழிலாளர்கள் சேர்ந்து கும்பமேளா நடக்கும் நகரின் 4 மண்டலங்களையும் சுத்தம் செய்து கின்னஸ் சாதனைக்கு திங்கள்கிழமை(24ம்தேதி) முயன்றனர்.
மகா கும்பமேளா நடக்கும் பிரயாக்ராஜ் நகருக்கு தினசரி லட்சக்கணக்கான மக்கள், பக்தர்கள் வந்து திரிவேணி சங்கத்தில் புனித நீராடி செல்கிறார்கள். இதனால் நகரின் 4 மண்டலங்களிலும் தினசரி குப்பைகள் அதிகளவில் சேர்ந்துவிடுகின்றன. இதை சுத்தம் செய்யும் பணியில் துப்புரவு பணியாளர்கள் இரவு பகலாக ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் கின்னஸ் சாதனை படைக்கும் முயற்சியில் ஒரே நேரத்தில் 15 ஆயிரம் துப்புரவு தொழிலாளர்கள் பிரயாக்ராஜ் நகரின் 4 மண்டலங்களிலும் கடந்த திங்கள் கிழமை முயற்சிக்கப்பட்டது. பிரயாக்ராஜ் நகர் மேயர் கணேஷ் கேசர்வாணி, மகா கும்பமேளா சிறப்பு நிர்வாக அதிகாரி அகான்ஷா ராணா, கின்னஸ் சாதனையை கண்காணிக்கும் குழுவினர் ஆகியோர் வந்திருந்து துப்புரவு தொழிலாளர்கள் சுத்தம் செய்யும் பணியை கண்காணித்தனர்.
இதையும் படிங்க: இன்று இறுதி புனித நீராடல்..! 62 கோடி பேரை தாண்டிய மகா கும்பமேளா..!

இது குறித்து பிரயாக்ராஜ் நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில் “ கின்னஸ் உலக சாதனைக் குழுவின் நீதிபதி மற்றும், கண்காணிப்பாளருமான ரிஷி நாத் லண்டனில் இருந்து அவரின் குழுக்களுடன் பிரயாக்ராஜ் நகருக்கு வந்திருந்தார். ஒரே நேரத்தில் 15 ஆயிரம் துப்புரவு பணியாளர்கள் பிரயாக்ராஜ் நகரின் 4 மண்டலங்களையும் துப்புரவு செய்யும் பணியை கண்காணித்தார். எங்களின் இந்த கின்னஸ் முயற்சி பதிவு செய்யப்பட்டு ஆய்வு செய்யப்பட்டு அடுத்த 3 அல்லது 4 நாட்களுக்குப்பின் முடிவுகள் வெளியிடப்படும்” எனத் தெரிவித்துள்ளது.
2019ம் ஆண்டில் பிரயாக்ராஜ் நகரில் கும்பமேளா நடந்தபோது, 10ஆயிரம் துப்புரவு ஊழியர்கள் சுத்தம் செய்து கின்னஸ் சாதனை படைத்தனர். அதை முறியடிக்கும் வகையில் இந்த முறை 15 ஆயிரம் துப்புரவு ஊழியர்கள் சேர்ந்து சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

நகரின் மேயர் கேசர்வாணி கூறுகையில் “ இந்த உலகிற்கு சுத்தத்தின் முக்கியத்துவம் குறித்து புனித பிரயாக்ராஜ் மண்ணில் இருந்து சக்திவாய்ந்த செய்தியை தெரிவிக்க வேண்டும்” எனத் தெரிவித்தார். உத்தரப்பிரதேச நகர மேம்பாட்டு மற்றும் எரிசக்தி அமைச்சர் ஏ.கே.சர்மா கூறுகையில் “ மகா கும்பமேளா உலகின் மிகப்பெரிய மதரீதியான, ஆன்மீக, கலாச்சார விழாவாக மாறியுள்ளது, இந்த விழாவில் துப்புரவு தொழிலாளர்கள்தான் உண்மையான ஹீரோக்கள், இந்த கும்மேளாவை வெற்றிகரமாக்கியதும் இவர்கள்தான். இரவு பகலாக பணியாற்றி கும்பமேளா நடக்கும் பகுதியை சுத்தமாக வைத்திருந்தார்கள்” எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: மகாகும்பமேளாவில் புனித நீராட நாளையே கடைசிநாள்... 45 நாள் கொண்டாட்டம் நிறைவுக்கு வருகிறது....