தீபாவளி, பொங்கல் பண்டிகை வந்தாலே தென்மாவட்டங்களுக்கு செல்லும் பயணிகள் சற்று கலக்கத்துடன் தான் காணப்படுவார்கள். காரணம், ரயிலில் முன்பதிவு செய்து இருக்கையை உறுதி செய்வது என்பது குதிரைக்கொம்பு போல. ஒருவேளை முன்பதிவு செய்ய முடியாவிட்டால், பேருந்திலோ மாற்று வாகனங்களிலோ வரவேண்டும் என்ற சிந்தனையே பெரும் அயர்ச்சியை ஏற்படுத்தி விடும்.
அப்படிப்பட்ட பயணிகளுக்காக தெற்கு ரயில்வே மாற்று ஏற்பாடு ஒன்றை தந்துள்ளது. சென்னை எழும்பூர் - மதுரை மார்க்கத்தில் மெமு சிறப்பு முன்பதிவில்லா ரயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

அதாவது வருகிற 18-ந் தேதி சனிக்கிழமை காலை 10.45 மணியளவில் சென்னை எழும்பூரில் இருந்து புறப்படும். (வண்டி எண் 06061) அன்று இரவு 7.15 மணிக்கு மதுரையை சென்றடையும். கடைசிநேரத்தில் ஊர் செல்ல விரும்புபவர்கள் இந்த ரயிலை பயன்படுத்திக் கொள்ள முடியும். அதேபோன்று மறுமார்க்கத்தில்
ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணிக்கு புறப்பட்டு நள்ளிரவு 12.45 மணிக்கு சென்னை எழும்பூரை வந்தடையும். அதாவது திங்கட்கிழமை காலை நீங்கள் தாராளமாக உங்கள் பணிக்கு செல்வதற்கு ஏதுவாக இந்த நேரத்தை தெற்கு ரயில்வே திட்டமிட்டுள்ளது.
இதையும் படிங்க: அனைவருக்கும் பொங்கல் மற்றும் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள்.. திமுக வழியில் விஜய்!

இந்த மெமு சிறப்பு முன்பதிவில்லா ரயில், தாம்பரம், செங்கல்பட்டு, மேல்மருத்தூர், திண்டிவனம், விருத்தாச்சலம், அரியலூர், ஸ்ரீரங்கம், திருச்சி, மணப்பாறை, திண்டுக்கல், கொடைரோடு ஆகிய இடங்களில் நின்று செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
எனவே தென்மாவட்ட பயணிகளே ஒருவேளை இதுவரை நீங்கள் சென்னை திரும்புவதற்கு முன்பதிவு செய்யவில்லை என்றால் தெற்கு ரயில்வே அறிவித்துள்ள இந்த சிறப்பு மெமு ரயிலை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்..
இதையும் படிங்க: பொங்கல் பரிசா? தேர்தல் திட்டமா? கருணாநிதி முதல் ஸ்டாலின் வரை ஒரு ரிவைண்டிங்...