சிந்து நதி நீர் ஒப்பந்தம் ரத்தால் பாகிஸ்தானியர்கள் நீரின்றி செத்து மடிவார்கள் என்று பாஜக எம்.பி. நிஷிகாந்த் துபே தெரிவித்துள்ளார்.
காஷ்மீரில் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் சுற்றுலாப் பயணிகள் 26 பேர் கொல்லப்பட்டனர். இந்தத் தாக்குதலுக்குப் பதில் நடவடிக்கையை இந்தியா தொடங்கியுள்ளது. அதன்படி பாகிஸ்தானுடனான சிந்து நதி நீர் ஒப்பந்தம் நிறுத்தம், அட்டாரி-வாகா எல்லை மூடல், பாகிஸ்தான் நாட்டினர் விசா இல்லாமல் இந்தியா வர முடியாது. தூதரக செயல்பாடுகள் முடக்கம் என பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற பாதுகாப்பு கேபினட் கவுன்சில் கூட்டத்தில் எடுக்கப்பட்ட அதிரடி முடிவுகளை வெளியுறவுத் துறை அறிக்கையாக வெளியிட்டது.

இதில் சிந்து நதி ஒப்பந்தம் என்பது 1960ஆம் ஆண்டு இந்தியா - பாகிஸ்தான் இடையே மேற்கொள்ளப்பட்டது. சிந்து நதி அமைப்பில் ஆறு முக்கிய நதிகள் உள்ளன. சிந்து, ஜீலம், செனாப், ரவி, பியாஸ் மற்றும் சட்லஜ் இதில் இடம்பெற்றுள்ளது. இந்த நீரை பாகிஸ்தானுடன் இந்தியா பகிர்ந்துகொள்கிறது. இந்த சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை தான் மத்திய அரசு தற்போது ரத்து செய்துள்ளது. 2008 மும்பை தீவிரவாத தாக்குதல் உள்பட பல தாக்குதலுக்குப் பிறகு கூட இந்த ஒப்பந்தத்தை இந்தியா நிறுத்தியது இல்லை.
மத்திய அரசின் இந்த நடவடிக்கையை பாஜக எம்.பி. நிஷிகாந்த் துபே பாராட்டி உள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், “நோபல் பரிசு பெறுவதற்காக 1960இல் பாம்புக்கு நீர் கொடுத்தார் ஜவஹர்லால் நேரு. சிந்து நதிநீர் ஒப்பந்தத்தின் ஹீரோ அவர். பல்வேறு ஆறுகளின் நீரை அவர் பாகிஸ்தானுக்கு வழங்கினார்.

பிரதமர் மோடி, இன்று அவர்களுக்கான நீர் மற்றும் உணவை நிறுத்தி உள்ளார். பாகிஸ்தானியர்கள் நீரின்றி செத்து மடிவார்கள். இது 56 இன்ச் மார்பு. நாங்கள் பாஜக தொண்டர்கள். அவர்களை சித்திரவதை செய்து கொல்வோம்” என எக்ஸ் பக்கத்தில் நிஷிகாந்த் துபே பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: மிகப் பெரிய பதிலடிக்குத் தயாராகும் இந்தியா.? இன்று பிரதமர் மோடி தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம்!
பாஜக உறுப்பினர்கள் ‘56 இன்ச் மார்பு’ என பிரதமர் மோடியைக் குறிப்பிடுவார்கள். மோடி வலிமையான தலைவர் என்பதை உணர்த்தும் வகையில் பாஜகவினர் இதைச் சொல்வது வழக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: சிந்து நதி நீர் ஒப்பந்தம் ரத்து, வாகா எல்லை மூடல்..பாகிஸ்தானுக்கு இந்தியா தரமான பதிலடி!!