வக்பு திருத்த மசோதா விவாதத்துக்குப்பின் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது. இச்சட்டத் திருத்தத்துக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளார். இந்நிலையில் இச்சட்டத் திருத்தம் குறித்து பாட்னாவில் ரவி சங்கர் பிரசாத் செய்தியாளர்களிடம் கூறுகையில், "வக்பு சட்ட திருத்த மசோதா நிறைவேறியுள்ளதால் இஸ்லாமிய பெண்கள் பயனடைவார்கள். இந்த மசோதா சொத்துக்களைக் கணக்கு காட்டும் பொறுப்பு, வெளிப்படைத்தன்மையைக் கொண்டு வரும். எந்த மசூதிக்கும், நினைவிடத்துக்கும் பாதிப்பு வராது. வக்பு வாரியத்துக்கு சொத்துகளைத் தானமாக அளித்தவரின் எண்ணம் நிறைவேறுகிறதா என்பதுதான் இதில் கேள்வி.

வக்பு வாரியம் என்பது மத அமைப்பு அல்ல. அது ஒரு சட்ட ரீதியான அமைப்பு. இதில் மேலாளராகவும் கண்காணிப்பாளராகவும் பணியாற்றும் நபருக்கு சொத்துகள் மீது எந்த உரிமையும் இல்லை. வக்பு வாரிய சொத்துகள் அனைத்தும் அல்லாவுக்கு உரியது. வக்பு வாரிய சட்ட திருத்த மசோதா இஸ்லாமிய மதத்தில் உள்ள பின்தங்கியவர்கள், விதவைகளுக்குப் பயனுள்ளதாக இருக்கும். பாட்னாவில் தக் பங்களாவுக்கு அருகே உள்ள பகுதியில், வக்பு வாரியத்துக்கு சொந்தமான இடத்தில் 5 நட்சத்திர விடுதிகள், ஷோரூம்கள் உள்ளன. இந்தியாவில் உள்ள வக்பு வாரிய சொத்துகள் உலகிலேயே மிக அதிகம்.
ஆனால் இங்கு மருத்துவமனைகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் பயிற்சி மையங்கள் எத்தனை கட்டப்பட்டுள்ளன? வக்பு வாரிய சொத்துகளை தானம் அளித்தவர்களின் நோக்கம் நிறைவேறும் வகையில் அதன் மேலாளர் செயல்படுகிறாரா அல்லது அவருடைய பாக்கெட்டை நிரப்பிக் கொள்கிறாரா என்பதுதான் இதில் கேள்வி. இந்த மசோதா குறித்து நாடகம் நடத்துகிறார்கள்.

மக்கள் இந்த மசோதாவைப் பாராட்டப்போகின்றனர். வக்பு சட்ட திருத்த மசோதாவுக்குப் பிறகு அதன் சொத்துகள் எல்லாம் கணக்கு காட்டப்படும். அனைத்து விவரங்களும் ஆன்லைனில் பதிவேற்றம் செய்யப்படும்.சொத்து ஆவணங்கள் டிஜிட்டல் மயமாக்கப்படும். வக்பு வாரியத்துக்கு சொந்தமாக எங்கு, என்ன சொத்துக்கள் உள்ளது என்பதை அனைவரும் விவரமாக அறிய முடியும். இந்த மசோதா நிறைவேற்றப்பட்டதால், பீகார் சட்டப்பேரவை தேர்தலில் பாஜக- ஐக்கிய ஜனதா தள கூட்டணிக்கு பாதிப்பு ஏற்படாது" என்று ரவிசங்கர் பிரசாத் கூறினார்.
இதையும் படிங்க: நீட் எதிர்ப்பை முழுமனதோடு கடைபிடிக்கிறது திமுக அரசு.. திருமா பாராட்டு பத்திரம்!!
இதையும் படிங்க: உதயநிதி, விஜய் இந்து விரோத தீயசக்திகள்.. ஆ.ராசா இந்து விரோத கோமாளி.. பொளந்துக்கட்டிய ஹெச்.ராஜா.!