தவெகவை விஜய் ஆரம்பித்து மாநாட்டில் அனல் பறக்க பேசிய பின் எவ்வித அசைவும் இல்லாமல் கட்சி இருக்கிறது. கட்சியே அறிக்கை மூலம் மட்டுமே இயங்குகிற நிலையில் உள்ளது. இந்நிலையில் கட்சி புஸ்ஸி ஆனந்த் செயல்பாட்டால் முடங்குகிறது என தவெகவின் வியூக வகுப்பாளர் ஜான் ஆரோக்கியசாமி பேசியதாக வெளியான ஆடியோ புயலை கிளப்பி உள்ளது.
நடிகர் விஜய் அரசியலுக்கு வருகிறேன் என்று அறிவித்த பின், மிகப்பெரிய எதிர்பார்ப்பு தமிழக அரசியலில் ஏற்பட்டது. காரணம் விஜய் அரசியலுக்கு வருவேன் என்று அறிவித்த பின்னர் உடனடியாக வராமல், கட்சியின் அணிகளை ஒவ்வொன்றாக அமைத்து, வியூக வகுப்பாளரை கட்சிகள் கொண்டு வந்து, படிப்படியாக கட்சியின் கட்டமைப்பை உறுதிப்படுத்தினார். இது ரஜினிகாந்த் சொன்ன அரசியலுக்கும், கமலஹாசன் சொன்ன அரசியலுக்கும் வேறுபட்டு வித்தியாசமாக இருந்தது. விஜய் விஜயகாந்தைவிட மக்கள் செல்வாக்கு உள்ளவர் லட்சக்கணக்கான இளைஞர்களை ரசிகர்களைக் கொண்டவர் என்கிற முறையில் அவரது வருகை பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது.
இந்த நிலையில் விஜய் வரும் நேரமும் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த பொது தேர்தல் வருகின்ற நேரம், அதற்கு முன்னரே தன் படபிடிப்புகளை முடித்துக் கொண்டு திரை வாழ்க்கைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு முழுநேர அரசியல்வாதியாக வருவேன் என்று அவர் அறிவித்தது மற்ற அரசியல் கட்சிகளிடையே கலக்கத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில் விஜய் கட்சியின் கொடி, பெயர் எல்லாம் அறிமுகப்படுத்தி, மாநாட்டிலும் கிட்டத்தட்ட 45 நிமிடம் தன்னுடைய அரசியல் பற்றி விஜய் பேசிய பேச்சு அடுத்து இரண்டு மாத காலத்துக்கு தமிழகம் முழுவதும் பேசு பொருளாக இருந்தது.
இதையும் படிங்க: சட்டப்பேரவை நேரலை ஒளிபரப்பை நிறுத்தியது ஏன்? தவெக தலைவர் விஜய் கேள்வி...

தன்னுடைய எதிரி யார் என்பதை மிகத் தெளிவாக விஜய் அறிவித்ததும், அம்பேத்கருடைய படத்தை பயன்படுத்தியதும் தன்னுடைய அரசியல் செயல்பாடு எப்படி எல்லாம் இருக்கும் என்று தெரிவித்ததும், நேரடியாக திமுகவுக்கு சவால் விட்டு பேசியதும் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. விஜய் அடுத்த மூவ் மிக வெற்றிகரமாக இருக்கும் என்று பலரும் பேசி வந்தனர். அதன்பின்னர் இதே வேகம் இருக்கும் என பலரும் எதிர்பார்த்த நிலையில் எவ்வித வேகமும் இல்லாமல் விஜய் தன்னுடைய சினிமா சூட்டிங்குக்கு நடிக்க சென்று விட்டார்.
விஜய் சினிமாவில் நடிக்கிறார் அதில் கவனம் செலுத்திவிட்டு வந்துவிடுவார், அதுவரை கட்சி மற்றவர்கள் இயக்கப்படும் என்று நிர்வாகிகள் முதல் ரசிகர்கள், அரசியல் விமர்சகர்கள் அனைவரும் நம்பி இருந்த வேலையில் எவ்வித இயக்கமும் இல்லாமல் வெறுமனே அறிக்கையை மட்டுமே விட்டுக் கொண்டு கட்சி இயங்குகிற நிலை தொண்டர்களிடையே சோர்வை ஏற்படுத்தியது. கட்சி மாநாடு நடத்தி அறிவிப்பு வெளியிட்டு தேர்தலுக்கு ஓராண்டு உள்ள நிலையில் கட்சியின் நிர்வாகிகள் நியமனம் முக்கியம் என்பதை பலரும் வலியுறுத்தி வந்த வேளையில் நிர்வாகிகள் நியமனத்தில் ஏகப்பட்ட குளறுபடிகளை கட்சி சந்தித்து வந்தது.
எந்த ஒரு விவகாரத்திலும், கட்சியின் எந்த ஒரு தலைவரும் பொதுமக்களை சந்திப்பதோ, பேட்டி அளிப்பதோ பத்திரிகையாளர்களை சந்திப்பதோ இல்லை என்கிற நிலை, இது மக்கள் நீதி மையத்தின் இன்னொரு அவதாரமா? என்கிற சந்தேகமும் அனைவருக்கும் ஏற்பட்டது. காரணம் ஒரு கட்சி ஆரம்பித்த நாளிலிருந்து அதற்கு உயிர் வந்து விடுகிறது. ஒரு காட்டில் உள்ள மிருகத்தின் குட்டி தாயின் கருப்பையில் இருந்து விழுந்தவுடன் எழுந்து ஓட துவங்கவேண்டும் இல்லாவிட்டால் வேட்டையாடப்பட்டுவிடும் என்பதால் இயற்கை அந்த சக்தியை கொடுத்துள்ளது, அது போன்றது தான் அரசியல் கட்சியும் விழுந்தவுடன் எழுந்து ஓட வேண்டும்.

ஆனால் தாவெக விழுந்த இடத்திலேயே அசைவற்று கிடைக்கும் நிலையில் தொண்டர்களை இது மிகவும் சோர்வுபடுத்தியது. கட்சியின் நிலையை யாரிடம் சொல்வது? எப்படி சொல்வது? என்ன செய்வது? என்று அறியாமல் கையை பிசைந்து கொண்டு தொண்டர்கள் இருந்ததை காண முடிந்தது. வெறுமனே கட்சியின் செய்தி தொடர்பாளர்கள் தொலைக்காட்சி வாதங்களில் களமாடி வந்த நிலையில் அவர்கள் மத்தியிலும் கட்சியினுடைய நிலைப்பாடு, செயல்பாடு குறித்த கேள்விகளுக்கு எதிர்கொள்ள முடியாமல் சோர்வு கிளம்பியதை காண முடிந்தது.
விஜய் கட்சி மிகப் பரபரப்பாக இயங்கும் தமிழக அரசியலில் ஒரு முக்கிய கட்சியாக தலையெடுக்கும் என்று அரசியல் விமர்சகர்கள் கருதி, விஜய்யின் அரசியலை தமிழகத்தில் ஒரு மாற்று அரசியல் ஆக பேசி வந்த நிலையில் தவெகவில் எந்தவித முன்னேற்றமும் இல்லாமல் மயான அமைதியாக இருப்பதைக் கண்டு எந்த வகையிலும் நிர்வாகிகளை தொடர்பு கொள்வதோ, விஜய்யை தொடர்பு கொள்வதோ அல்லது எந்த விவகாரத்திலும் அவர்களுக்கு எவ்வித ஆலோசனையின் சொல்ல முடியாத நிலைமையில் தவெக ஒரு இரும்புக்கோட்டையாக இருப்பதைக் கண்டு தவெகவின் வளர்ச்சி குறித்து மிகுந்த சந்தேகத்தை அரசியல் விமர்சகர்கள் வைத்து வந்தனர்.
ஒரு கட்சியின் முக்கிய பணி என்னவென்றால் தினசரி நிகழ்வுகளில் வேகமாக இயங்க வேண்டும். கட்சியின் நிர்வாகிகள் Day today activity-ல் வேகமாக செயல்பட வேண்டும். அடுத்தடுத்த செயல்பாடுகள், அடுத்தடுத்து வருகின்ற பிரச்சனைகளில் தலையிட்டு மக்கள் பிரச்சனைகளை கையில் எடுத்து போராட வேண்டும். அதே நேரம் கட்சிக்குள் நிர்வாகிகள் நியமனம், கட்சிக்குள் வரும் பிரச்சினைகளையும் அவ்வப்போது களை எடுத்து இயங்க வேண்டும். எல்லாவற்றிற்கும் மேலாக பத்திரிகையாளர் சந்திப்பு அல்லது அறிக்கைகள் என்று ஏதோ ஒரு வகையில் கட்சி உயிர்ப்புடன் வைக்கப்பட வேண்டும்.
ஆனால் தவெகவில் எப்போதோ ஒருமுறை நடக்கும் நிகழ்வுக்கு அறிக்கை மட்டும் வருவதும், அதைத் தாண்டி முக்கியமான மக்கள் பிரச்சினைகளில் போராட்டம், ஆர்ப்பாட்டம், பேட்டி எதுவுமின்றி செயலற்று இருப்பதையும் காண முடிந்தது. அண்ணா பல்கலைக்கழக விவகாரம் லட்டு மாதிரி மற்ற கட்சிகள் கையில் எடுத்து அரசியல் செய்யும்போது வழக்கமான அறிக்கையுடன் தவெக கடந்து போனது அதன் தொண்டர்களை சோர்வாக்கியுள்ளது.

அரசியல் தலைவராக அவதாரம் எடுக்கும் விஜய் படப்பிடிப்பை முடித்துவிட்டு வருகிறேன் என்று சொல்லி படபிடிப்பில் இருக்கும் நிலையில், அடுத்த கட்ட முக்கிய தலைவராக இருக்கின்ற புஸ்ஸி ஆனந்த், வெங்கட்ராமன், ராஜசேகர் உள்ளிட்ட நிர்வாகிகள் மக்களை சந்திக்காமல் பனையூர் அலுவலகத்திலேயே முடங்கி கிடப்பதும், எவ்வித செயல்பாடும் இல்லாமல் இருப்பதும், கட்சியினர் இடையே பெரும் ஏமாற்றத்தையும் சோர்வையும் ஏற்படுத்தியுள்ளது. விஜயால் மக்களை, செய்தியாளர்களை சந்திக்க முடியவில்லை, சந்திப்பதில் பிரச்சினை உள்ளது என்றால் அடுத்த கட்டத்தில் இருக்கும் தலைவர்கள் பத்திரிகையாளர்களை, மக்களை சந்திப்பது முக்கியம்.
பேட்டி அளிப்பது, முக்கிய பிரச்சினைகளில் போராட்டம் நடத்துவது என்று இப்பொழுதே களமாட தொடங்கி இருக்க வேண்டும். ஆனால் எவ்வித அசைவும் இன்றி தவெக இருப்பது தொண்டர்களுடைய மிகுந்த சோர்வை ஏற்படுத்திருப்பதை காணலாம். கட்சியின் நிர்வாகிகள் யார்? மாவட்ட செயலாளர் யார்? மாவட்ட தலைவர் யார்? மற்ற அணிகளின் நிர்வாகிகள் யார்? இவர்களுக்கு கட்டளையிடுவது யார்? முக்கிய பிரச்சினைகளில் என்ன செய்ய வேண்டும்? போராட்டம் நடத்த வேண்டுமா? ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டுமா? எப்படி முடிவு எடுப்பது? இப்படி எந்தவித நடவடிக்கையும் இல்லாமல் கிணற்றில் போட்ட கல்லாக கட்சி இருந்ததை கண்டு கட்சியின் அடுத்த கட்ட தலைவர்கள், கீழ்மட்ட அணியினர் குழப்பத்தில் ஆழ்ந்து சோர்ந்து போயிருக்கின்ற நிலை உள்ளது.
ஒரு மிகப் பெரிய இயக்கம் கண்ணெதிரில் இவ்வாறு இயங்காமல் துருப்பிடித்து நிற்பதை பார்க்கும் பொழுது, யார் இதை அசைத்து விடுவது என்கிற கேள்வியும் பலரிடம் வைக்கப்பட்டது. ஒரு கட்சி என்பது வெறுமனே சினிமா ரசிகர்களால் மட்டும் இயங்க முடியாது என்பது முக்கியமான ஒன்று. இதற்கு எம்.ஜி.ஆரின் அதிமுக உதாரணம். அவர் கட்சி ஆரம்பித்த பொழுது தன்னுடைய ரசிகர்களை மட்டுமே கட்சிக்குள் நிர்வாகிகளாக நியமிக்கவில்லை. திமுகவில் இருந்தும் மற்ற கட்சியில் இருந்தும் வந்த தலைவர்களை கட்சியில் நிர்வாகிகளாக நியமித்து ஒரு ஒருங்கிணைப்புடன் அதிமுகவை வழிநடத்தி சென்றார்,
இது அதிமுக அடுத்தடுத்த நிகழ்வுகளுக்கு நகருவதற்கு வாய்ப்பாக அமைந்தது. ஆனால் தவெகவில் புஸ்ஸி ஆனந்த் தன்னுடைய இஷ்டப்படி செயல்படுவதும், அவர் சொல்வதை மட்டுமே விஜய் கேட்கிறார் என்கிற நிலையும், வெளியிலிருந்து ஒருவரை கூட உள்ளே விட மாட்டோம் என்கின்ற போக்கும், தவெகவை முடக்கி போட்டிருக்கிறது என்று சொல்லலாம். மற்ற கட்சிகளில் இருந்து வருகின்ற மூத்த அரசியல்வாதிகள் அனுபவமிக்கவர்களுடைய வழிகாட்டுதல் தவெகவுக்கு மிகவும் முக்கியம் என்பது அனைவரும் அறிந்தது.
அந்த வகையில் பழ.கருப்பையா, கே.எஸ்.ராதாகிருஷ்ணன், ஜெயந்தி நடராஜன் போன்றோர் கட்சிக்கு வழிகாட்ட ஆலோசர்களாக கட்சிக்குள் இணைவார்கள் என்று கூறப்பட்டது. ஆனால் புஸ்ஸி ஆனந்தை மீறி யாரும் விஜய்யை கூட அணுக முடியாது, ஏதாவது ஆலோசனை சொன்னால் புஸ்ஸி ஆனந்த் தான் அதைப்பற்றி முடிவெடுப்பார், அவர் சொல்வது மட்டுமே விஜய் கேட்பார் என்கிற நிலையால் பலரும் ஒதுங்கி விட்டனர். இதனால் கட்சியில் இணைவதற்கு முடிவெடுத்த பழ.கருப்பையா, கே.எஸ். ராதாகிருஷ்ணன், ஜெயந்தி நடராஜன் ஆகியோர் தங்களுடைய முடிவை ஒத்திவைத்துவிட்டு ஒதுங்கி நிற்பதாக கூறப்படுகிறது.
இதில் வியூக வகுப்பாளராக களம் இறங்கிய ஜான் ஆரோக்கிய சாமி ஆரம்பத்தில் வேகமாக இயங்கினார். ஆனால் என்ன வேகம் எடுத்தாலும் அடுத்த கட்டத்திற்கு நகர முடியாத அளவிற்கு புஸ்ஸி ஆனந்த் தடைகல்லாக இருப்பதையும், அவரை மீறி எந்த ஒரு விஷயத்தையும் விஜய்யை நோக்கி நகர்த்த முடியவில்லை என்பதும், ஏதாவது புதிய விஷயங்களை சொன்னால் புஸ்ஸி ஆனந்த் அதை தடுத்து விடுவதாகவும் ஒரு கருத்து கட்சிக்குள்ளேயே உலாவி வந்தது. திடீரென ஜான் ஆரோக்கிய சாமியும், புஸ்ஸு ஆனந்தும் நெருக்கமான நிகழ்வு நடந்தது. ஜான் ஆரோக்கியசாமி, புஸ்ஸி ஆனந்த் இருவரும் ஒரு பக்கமும், வெங்கட்ராமன் ராஜசேகர் உள்ளிட்ட நிர்வாகிகள் இன்னொரு புறமும் கோஷ்டியாக செயல்பட ஆரம்பித்தனர்.
நிர்வாகிகள் நியமனத்தில் எனக்கென்னவென்று புஸ்ஸி ஆனந்த் செயல்பட ஆரம்பித்தது கட்சிக்குள் புகைச்சலை கிளப்பியது. கட்சியின் மாவட்ட செயலாளர், மாவட்ட தலைவர், மாவட்ட நிர்வாகிகளை அந்தந்த மாவட்ட சூழ்நிலைக்கேற்ப, பல்வேறு விஷயங்களை அலசி ஆராய்ந்து நியமிக்க வேண்டும். ஆனால் எடுத்தேன் கவிழ்த்தேன் என்று புஸ்ஸி ஆனந்த் சூழ்நிலை புரியாமல், தமிழக அரசியல் நிலைமை தெரியாமல் நியமனம் செய்தது கட்சிக்குள் பலருக்கும் மனசோர்வை உண்டு பண்ணியது. ஒரு நீண்ட நெடும் பயணம் செய்ய வேண்டிய கட்சி, அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குள் ஆட்சியைப் பிடிக்கும் நிலையில் உள்ள ஒரு கட்சி நிர்வாகிகள் நியமனம் உள்ளிட்ட விவகாரங்களில் இப்படியா செயல்படுவது என்ற கோபமும், விரத்தியும் கட்சியின் மற்ற தலைவர்களுக்கு ஏற்பட்டது.
வெளியே சொன்னால் கட்சியின் மானம் போய்விடும், கட்சிக்கு அவப்பெயர் ஏற்படும் என்று பலரும் அமைதி காத்து வந்தனர், ஜான் ஆரோக்கியசாமி அடுத்த கட்டத்திற்கு நகர முடியாத அளவிற்கு முடக்கப்பட்டது அவருக்கு பெரும் சோர்வை தந்தது என்று சொல்லலாம். இதனால் அவர் வெளிப்படையாக பேசிவிட்டதாக பேச்சு அடிபடுகிறது. மறுபுறம் கட்சிக்கு ஆலோசர்களாக அழைத்து வரப்பட்ட பழ.கருப்பையா, கே.எஸ்.ராதாகிருஷ்ணன், ஜெயந்தி நடராஜன் ஆகியோர் தங்களுடைய எந்த கோரிக்கையும், எந்த நடைமுறை அரசியலும், யோசனைகளும் புஸ்ஸி ஆனந்தை மீறி விஜய்யை எட்டவில்லை என்பதும், ஒருவேளை விஜய்யிடமே நேரடியாக சொன்னால் கூட புஸ்ஸி ஆனந்தால் அது தடுக்கப்படுகிறது என்று உணர்ந்து அவர்களும் ஒதுங்கும் மனநிலைக்கு வந்து விட்டனர்.
இன்னும் சில பத்திரிகையாளர்களும் தவெகவிற்கு ஆதரவாளர்களாக, ஆலோசர்களாக பல கருத்துக்களை கூறி அவையும் எடுபடாமல் போனதால் விலகி வெளியில் நிற்கும் நிலை உள்ளது. இவ்வாறு ஒரு இரும்புக்கோட்டையை தன்னைச் சுற்றியும், விஜய்யை சுற்றியும் புஸ்ஸி ஆனந்த் உருவாக்கி வைத்து கட்சியை தனது கட்டுப்பாட்டில் ரசிகர் மன்றம் போல் நடத்துவதாக பெரும் குற்றச்சாட்டு கட்சியில் பலராலும் மௌனமாக வைக்கப்படுகிறது. தங்களுக்குள்ளேயே இந்த விவகாரத்தை பேசிக்கொண்டு வெளியில் தெரிந்தால் இது கட்சிக்கு அவப்பெயர் என்று புழுங்கி வருவதையும் காண முடிகிறது.
இந்த விவகாரத்தில் தற்போது ஜான் ஆரோக்கியசாமி பேசியதாக ஒரு ஆடியோ வெளியாகி உள்ளது இந்த ஆடியோ குறித்து, நாம் ஜான் ஆரோக்கியசாமிக்கு நெருக்கமாக பழகிய சிலரிடம் கேட்ட பொழுது அது அவருடைய குரல் தான் என்று உறுதிப்படுத்தினர். ஆனாலும் ஒருவருடைய குரல் போன்று பேசி ஒரு ஆடியோவை உருவாக்குவதற்கு இந்த கால அரசியலில் யாராலும் செய்ய முடியும். அதற்கான பல டெக்னாலஜி உள்ளது என்பதால் அந்த ஆடியோ உண்மை என்று நாம் இங்கே குறிப்பிட வரவில்லை. ஆனாலும் ஒருவேளை இந்த ஆடியோ உண்மையாக இருந்தால் நாம் மேற் சொன்ன விஷயங்களுக்கு ஜான் ஆரோக்கிய சாமியின் இந்த ஆடியோ வெகு அழகாக பொருந்தி வருகிறது.

இந்த ஆடியோ உண்மை என்றால் ஜான் ஆரோக்கியசாமி வெகு விரைவில் தன்னுடைய வியூக வகுப்பாளர் பணியில் இருந்து விலகும் நிலை ஏற்படலாம். ஜான் ஆரோக்கியசாமி மட்டுமல்ல விசிகாவில் இருந்து விலகிய, திமுகவின் படைத்தளபதிகளில் வியூக வகுப்பாளராக இருந்த ஆதவ் அர்ஜுன் தவெகவில் இணையும் சூழல் இருந்தது. விஜய்யே அவரை கட்சியிலே இணையும் படி கேட்டுக் கொண்டதாக ஒரு தகவல். ஆனாலும் இதுவரை ஆதவ் அர்ஜுன் தவெகவில் இணையவில்லை. காரணம் ஆதவ் அர்ஜுன் போன்றோர் தவெகவில் இணைந்தால் அவருடைய ஆதிக்கம் மேலோங்கும் என்பதால் அவரை உள்ளே விடாமல் புஸ்ஸி ஆனந்த தடுத்து வருவதாக கட்சிக்குள் பேச்சு உள்ளது.

ஆதவ் அர்ஜுன் போன்றோர் விஜய்யுடன் இணைந்தால் அது கட்சியின் மிகப்பெரிய சொத்தாக அமையும். அவருடைய அரசியல் வியூகம் கட்சிக்கு மிகப்பெரிய பலமாக அமையும். விஜய்யுடன் எளிதாக நெருங்குவதால் அரசியல் சூழலில் தவெகவை அழகாக அவர் நகர்த்தி செல்ல முடியும் என்கிற கருத்தும் கட்சியில் உள்ளவர்களால். ஆனால் ஆதவ் அர்ஜூன் கட்சிக்குள் வருவதை தடுக்கும் சக்தியாக புஸ்ஸி ஆனந்த் இருக்கிறார் என்கிற இந்த தகவல் உறுதியாக இருந்தால் அது தவெகவிற்கு ஒரு தடை கல் என்று சொல்லலாம். ஆதவ் அர்ஜுன் இது பற்றி வெளிப்படையாக பேசாமல், எந்த கட்சியிலும் இணையாமல் மௌனம் காத்து வருவது இதை உறுதிப்படுத்துகிறது.
கட்சிக்குள் இதுபோன்ற நிலைமைகள் இருக்கும் நிலையில், படப்பிடிப்பில் இருக்கும் விஜய் தன்னுடைய நிலையை, கட்சியின் நிலையை உணர்ந்து உடனடியாக ஒரு முடிவு எடுக்க வேண்டும் என்று கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கருதுகின்றனர். காரணம் என்னதான் புஸ்ஸி ஆனந்த் விசுவாசியாக இருந்தாலும் கட்சியை அடுத்த கட்டத்திற்கு நகர்த்துவதற்கு அவர் தடையாக இருந்தால் இந்த நேரத்தில் விஜய் ஒரு கடினமான முடிவை எடுத்து தான் தீர வேண்டும்.

அதை எடுப்பதற்கு விஜய் தயங்கினால் தவெகவின் அரசியல் செயல்பாடு தடைபடும் என்பதில் எந்தவித மாற்று கருத்தும் இல்லை. கட்சிக்கு தடையாக யார் இருந்தாலும், கட்சியை அடுத்த கட்டத்திற்கு நகர்த்துவதற்கான பணிகளை விஜய் எடுப்பதற்கு தடையாக யார் இருந்தாலும் அவர் அதை முறியடித்து தொண்டர்களின் மனநிலையை அறிந்து கட்சியை வேகமாக முன்னெடுத்துச் செல்ல வேண்டும். அரசியல் கட்சிக்கு வெறுமனே ரசிகர்கள் மட்டுமே போதாது, ஆலோசனை கூறும் அளவிற்கு மூத்த அனுபவமிக்க அரசியல்வாதிகளும் இணைத்து அவர்கள் ஆலோசனை பெற்று கட்சியை நடத்த வேண்டும்.
கட்சியை இதுபோன்ற தடைகளில் இருந்து மீட்டு நடத்திச் சென்றால் தேர்தலுக்கு இன்னும் ஓராண்டே உள்ள நிலையில், தவெக வெற்றி நடை போட வாய்ப்புள்ளது. அதெல்லாம் இல்லை நான் வழக்கமாக பாணியில் மட்டுமே செயல்படுவேன் என்றால், தவெக இன்னொரு மக்கள் நீதி மைய்யமாக மாறும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. இதை சொல்வதால் விஜய் ரசிகர்கள் கோபித்துக் கொண்டால் அதற்கு முழு பொறுப்பும் புஸ்ஸி ஆனந்தையும், விஜய்யையுமே சாரும்.
இதையும் படிங்க: த.வெ.க தலைவர் விஜய் ஏன் ஆளுநரை சந்தித்தார்..?புயலை கிளப்பிய எஸ்.ஏ.சந்திரசேகர்..!