சென்னை போன்ற பெருநகரங்களில் மக்களின் முக்கிய பொழுதுபோக்காக திரையரங்கங்களே செயல்பட்டு வருகின்றன. கலை, இலக்கியத்தோடு தொடர்புடைய நாகரீகம் என்பதால் பெரும்பாலும் அனைவராலும் திரைப்படங்கள் விரும்பி பார்க்கப்பட்டு வருகிறது. அதன்படி சென்னையில் ஏராளமான திரையரங்குகள், மால்கள் செயல்பட்டு வருகின்றன. அனைத்து இடங்களிலும் வார இறுதியில் மக்கள் கூட்டம் அலைமோதும். அப்படிப்பட்ட இடங்களில் மக்கள் வாங்கி உண்ணும் உணவு பொருட்களின் விலைபட்டியல் விண்ணை தொடும் அளவிற்கு அதிகமாகி உள்ளது. கொடுக்கும் பணத்திற்கு ஏற்ப தரமான உணவுப்பொருள் கிடைக்குமா? என்பதும் பல நேரங்களில் கேள்விக்குறியாகி உள்ளது.

சென்னையில் உள்ள புகழ்பெற்ற மற்றும் பழமையான திரையரங்குகளில் எக்மோரில் உள்ள ஆல்பர்ட் திரையரங்கமும் ஒன்று. இங்கு சமீபத்தில் திரைப்படம் பார்க்க வந்திருந்த ஒரு குடும்பத்தினர் திரைப்பட இடைவேளையின் போது கேண்டீனில் திண்பண்டங்கள் வாங்கி உள்ளனர். அப்போது லிச்சி பழச்சுவை உடைய ஜூஸ் ஒன்றையும் வாங்கி குடித்துள்ளனர். அந்த ஜூஸின் சுவை புளித்தது போல இருந்ததாகவும், அதில் சாராய வாடை அடித்ததாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து கேண்டீனில் புகார் தெரிவித்துள்ளனர். ஜூஸ் பாட்டிலின் மூடியிலும் அழுக்கு படிந்து சுகாதாரமற்ற முறையில் இருந்துள்ளதையும் சுட்டிக் காட்டினர். இது தொடர்பாக கேண்டீன் பணியாளர்கள் மற்றும் அந்த குடும்பத்தினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதையும் படிங்க: திருமணத்திற்கு மறுத்த காதலன்.. டீயில் எலிமருந்து கலந்து கொடுத்த காதலி.. முடிந்தால் உன்னை காப்பாற்றிக்கொள் எனவும் சவால்..

இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வேகமாக பரவியது. சென்னை ஆல்பர்ட் திரையரங்கில் காலாவதியான பொருட்கள் விற்பதாகவும், தரமற்ற பொருட்களின் விற்பனை நடைபெறுவதாகவும் எழுந்த புகாரை அடுத்து அங்கு உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்த சென்றனர்.
அப்போது உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகளே மலைத்து போகும் அளவிற்கு 100க்கும் மேற்பட்ட பாப்கார்ன் டப்பாக்கள், காலாவதி தேதியை தாண்டியும் விற்பனை செய்யப்பட்டு வருவது தெரியவந்தது. இதையடுத்து கேண்டீனில் உள்ள அனைத்து பொருட்களையும் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை செய்தனர்.

உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி சதீஷ் தலைமையிலான குழுவினர், ஆல்பர்ட் திரையரங்க கேண்டீனை சோதனை செய்தபோது 100க்கும் மேற்பட்ட காலாவதியான பாப்கார்ன் டப்பாக்கள், குளிர்பானங்கள், உணவுப்பொருட்களை கைப்பற்றப்பட்டது. அனைத்தையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் கேண்டீன் உரிமையாளரின் லைசென்ஸும் ரத்து செய்யப்பட்டது. இந்த சம்பவத்தின் எதிரொலியாக சென்னை முழுவதும் உள்ள ஷாப்பிங் மால்கள், திரையரங்க கேண்டீன்களில் சோதனை நடத்த உள்ளதாக உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி சதீஷ் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: #BREAKING நடிகர் சிவாஜி கணேசன் வீடு ஜப்தி... சென்னை உயர்நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு...!