தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள இளையரசனேந்தலில் திமுகவின் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் பொதுச்செயலாளரும் நீர்வளத்துறை அமைச்சருமான துறைமுருகன் கலந்து கொண்டு பேசினார். அப்போது, தமிழகத்தில் திமுகவும் அதிமுகவும் தான் கட்சிகள் மற்றவை எல்லாம் கட்சிகள் இல்லை என்றும் அதிமுகவும் பாஜகவும் ஒரே அணியில் சேரும் என்றும் கூறினார். அது மட்டுமல்லாது, நொண்டி, கூன், குருடு போன்றவர்களை சேர்த்துக் கொண்டு, தி.மு.க.,வை எதிர்க்கப் பார்க்கின்றனர். அவற்றை எல்லாம் சமாளிக்க நாங்கள் தயாராக இருக்கிறோம் என்று அமைச்சர் துரைமுருகன் பேசி இருந்தார்.

மாற்றுத்திறனாளிகளை இழிவுபடுத்தும் வகையில் பேசி இருப்பதாக அமைச்சர் துரைமுருகனுக்கு கண்டனம் வலுத்தது. ஊனமுற்றவர்கள் அனைவரும் மாற்றுத்திறன் படைத்தவர்கள் என்பதால் அவர்களை மாற்றுத்திறனாளிகள் என்று அழைக்க வேண்டுமென அன்றைய முதல்வராக இருந்த கருணாநிதி உத்தரவிட்டிருந்தார்.ஆனால் அந்தக் கட்சியின் பொதுச்செயலாளரே மாற்றுத்திறனாளிகளை இழிவுபடுத்தும் வகையில் பேசி இருப்பதாக கூறி கண்டனங்கள் எழுந்தது.
இதையும் படிங்க: நொண்டி, கூன், குருடு.. ஒரு அமைச்சர் இப்படியா பேசுறது..? வலுக்கும் கண்டனம்..!

இந்த நிலையில் தனது பேச்சுக்கு அமைச்சர் துரைமுருகன் வருத்தம் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், இயற்கையிலேயே உடலில் ஏற்பட்ட குறைபாடு உடையவர்களை அருவருக்கும் பெயர் கொண்டு, அவர்களை அழைத்து வந்ததை முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் கருணை உள்ளத்தோடு மாற்றுத் திறனாளிகள் என்று பெயரிட்டு அழைத்தார், அதையே நாங்களும் பின்பற்றி வருகிறோம் என கூறியுள்ளார்.

அப்படிப்பட்ட நானே, ஒரு பொதுக்கூட்டத்தில் பேச்சின் வேகத்தில் மாற்றுத் திறனாளிகளை பழைய பெயரையே கொண்டு உச்சரித்து விட்டேன் என்று கழகத் தலைவர் தளபதி தன் கவனத்திற்கு கொண்டு வந்தபோது, அதிர்ச்சியும் வருத்தமும் அடைந்ததாக தெரிவித்துள்ளார். கலைஞரால் வளர்க்கப்பட்ட நானே இப்படிப்பட்ட தவறை செய்தது மிகப் பெரிய தவறு என்றும் மாற்றுத் திறனாளிகள் உள்ளம் புண்பட்டிருக்கும், அதற்காக என் நிபந்தனையற்ற வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன் எனவும் கூறியுள்ளார். தலைவர் தளபதி அவர்கள், எந்தளவிற்கு வருந்தியிருப்பார் என்பது எனக்குத் தெரியும் என்றும் அவருக்கும் என் வருத்தத்தை தெரிவித்து, இனி இத்தகைய நிகழ்வு நிகழாது என்று உறுதி அளிப்பதாகவும் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: பொசுக்குன்னு கடம்பூர் ராஜு இப்படி சொல்லிட்டாரே... அப்செட்டில் அதிமுக; கொண்டாடும் திமுக!