நாம் தமிழர் கட்சியினர் வெளியூரில் இருந்து நபர்களை அழைத்து வந்து கள்ள போட முயன்றதாக புகார் எழுந்துள்ளது.
காங்கிரஸ் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் மறைவை அடுத்து ஈரோடு கிழக்குத் தொகுதிக்கு இன்று இரண்டாவது முறையாக தேர்தல் நடைபெற்றது. இன்று காலை 7 மணி முதலே அமைதியான நிலையில் வாக்குப்பதிவு நடைபெற்று வந்தது. அப்போது வளையக்காரன் வீதியில் ஈரோடு மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் 168 -பூத்தில் பரிதாபேகம் என்பவர் கணவர் ஜாபருலாவுடன் வாக்கு செலுத்த வந்தார்.

கணவன் வாக்களித்த நிலையில் பரிதாபேகம் வாக்கு செலுத்த சென்றபோது, ஏற்கனவே அவரது வாக்கு செலுத்தி விட்டதாக வாக்குச்சாவடியில் உள்ள அலுவலர் மற்றும் முகவர்கள் தெரிவித்ததால் அதிர்ச்சி அடைந்தார்.
இதையும் படிங்க: ஈரோடு கிழக்கில் தொடங்கியது இடைத்தேர்தல்.... அதிகாலை பனியால் மந்தமான வாக்குப்பதிவு...
தான் தற்போது தான் வாக்களிக்க வந்துள்ளதாகவும், எனது வாக்கை மற்றவர்கள் எப்படி வாக்களிக்கலாம் என்றும் வாக்குச்சாவடி அலுவலரிடம் முறையிட்டார். இருப்பினும், வாக்களிக்காமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றார்.

இந்த சம்பவத்தை அடுத்து அனைத்து வாக்குச்சாவடிகளிலும் அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடைபெற்று வந்தது. கிட்டத்தட்ட வாக்குப்பதிவு நிறைவடைய இருந்த தருணத்தில், வீரப்பன் சத்திரம் மாநகராட்சி தொடக்கப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் நாம் தமிழர் கட்சியினர் வெளியூரைச் சேர்ந்தவர்களை அழைத்து வந்து கள்ள ஓட்டு போட முயல்வதாக குற்றச்சாட்டு எழுந்தது. உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த திமுகவினர் நாம் தமிழர் கட்சியினரை தடுத்து நிறுத்த முயன்றனர். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

நாம் தமிழர் கட்சியினர் 40க்கும் மேற்பட்ட குண்டர்களை அழைத்து வந்ததாகவும், கரை வேட்டி கட்டிக்கொண்டு வாக்குச்சாவடிக்குள் வலம் வருவதாகவும் திமுகவினர் குற்றச்சாட்டினர். வாக்காளர் அடையாள அட்டைக்குப் பதிலாக வாக்குச்சீட்டுக்களை காண்பித்து நாம் தமிழர் கட்சியினர் கள்ள ஓட்டு போடுவதாகவும், ஒரு நபர் பலமுறை ஓட்டு போடுவதை தாங்கள் பார்த்ததாகவும் கூறி திமுகவினர் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அசம்பாவிதங்களைத் தவிர்க்க உடனடியாக வீரப்பன் சத்திரம் வாக்குப்பதிவு மையத்தில் போலீசார் குவிக்கப்பட்டனர்.
இதையும் படிங்க: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலின் வெற்றி 2026 தேர்தலின் வெற்றி.. திமுகவினருக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் பூஸ்ட்.!