கோவை ஈஷா அறக்கட்டளை சார்பில், காலபைரவர் தகன மண்டபம் என்ற பெயரில் மின் தகன மேடை அமைக்கப்பட்டுள்ளது. குடியிருப்பு, நீர்நிலைகள் பகுதியில் இந்த தகன மேடை சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ளதாகவும், அதை அகற்ற உத்தரவிட வேண்டும் என இக்கரை போளுவாம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த எஸ்.என்.சுப்பிரமணியன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இதே போல் அதேபகுதியைச் சேர்ந்த ஆதிவாசிகள் முருகம்மாள் உள்ளிட்டோரும் தகன மேடை அமைக்கப்படுவதை எதிர்த்து வழக்கு தொடர்ந்துள்ளனர்.

செம்மேட்டைச்சேர்ந்த சிவஞானன் என்பவர் தொடர்ந்திருந்த வழக்கில் கடந்த 2024 ம்ஆண்டு ஈஷா அறக்கட்டளை சார்பில் நடைபெற்ற சிவராத்திரி விழாவின்போது அருகில் உள்ள தனது தோட்டத்திற்குள் கழிவு நீர் வெளியேற்றப்பட்டதாகவும் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிடவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டிருந்தார்.
இதையும் படிங்க: இன்று தமிழகம் வருகிறார் அமித்ஷா..! போலீசாரின் பாதுகாப்பு வளையத்துக்குள் கோவை மாநகரம்.!
ஈஷா யோக மையத்திற்கு எதிராக தொடரப்பட்ட இந்த வழக்குகள் நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம் , மற்றும் ராஜசேகர் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தன.
அப்போது பஞ்சாயத்து உரிமம் பெற்று தகன மேடை அமைக்கப்பட்டு உள்ளதாகவும், இந்த தகன மேடை கட்டி முடிக்கப்பட்ட போதும், செயல்பாட்டில் இல்லை எனவும், செயல்பாட்டுக்கு கொண்டு வர அனுமதி கோரியுள்ளதாகவும், இதே போல் பல இடங்களில் பராமரிக்கப்பட்டு வருவதாகவும், ஈஷா அறக்கட்டளை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அப்போது மனுதாரர்கள் சார்பில், மற்ற இடங்களில் ஏற்கனவே உள்ள தகன மேடைகளை பராமரிக்கப்பட்டு வருவதாகவும் ஆனால் இங்கு அவர்களே கட்டி பராமரிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இருதரப்பு வாதங்களைக் கேட்ட நீதிபதிகள், அரசு மற்றும் தனியார் சார்பில் கட்டப்படும் தகன மேடைகளை பராமரிப்பது தொடர்பாக ஏதேனும் விதிமுறைகள் உள்ளதா என கேள்வி எழுப்பினர்.
மேலும் ஈஷா யோகா மையத்தின் சார்பில் கட்டப்பட்டுள்ள தகனமேடை தொடர்பாக அரசின் நிலைப்பாடு என்ன என்பது குறித்து தமிழக அரசு, கோவை மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட வன அதிகாரி உள்ளிட்டோர் தரப்பில் இரண்டு வாரத்திற்குள் பதில் அளிக்கும்படி இறுதி அவகாசம் வழங்கி நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
இதையும் படிங்க: மகா சிவராத்திரி விழாவில் எல்லா விதிகளும் பின்பற்றப்படுகின்றன.... நீதிமன்றத்தில் சான்றளித்த தமிழக அரசு..!!