ஜெர்மனியின் டசல்டார்ப் நகரத்தில் இருந்து ஸ்பெயின் நாட்டின் மட்ரிட் நகருக்கு ஐபீரியா ஏர்பஸ் ஏ320 என்கிற விமானம் புறப்பட்டு சென்றது. விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்த போது விமானியை அராக்னிடா வகுப்பைச் சேர்ந்த சிலந்தி ஒன்று கடித்தது. சிலந்திகளில் விஷம் கொண்ட வகைகளில் ஒன்றான அராக்னிட் என்பது சிலந்தி கடித்ததில் விமானிக்கு கடுமையான வலியுடன் கூடிய அலர்ஜி ஏற்பட்டது. இதையடுத்து விமானிக்கு, விமான பணிப்பெண்கள் முதலுதவி பெட்டியில் இருந்த மருந்துகள் எடுத்து முதலுதவி சிகிச்சை அளித்துள்ளனர்.

விமானி கடுமையான வலி மற்றும் அலர்ஜியால் பாதிக்கப்பட்டதால், பயணிகள் அனைவரும் கலக்கமடைந்தனர். தங்களையும் அதேபோன்ற சிலந்தி கடித்துவிடுமோ என அச்சமுற்றனர். தங்களின் இருக்கை, கையோடு கொண்டு வந்திருந்த பைகள் என அனைத்தையும் சோதனை செய்தனர். சிலந்தி கடியால் வலியால் துடிக்கும் விமானி ஒருவேளை மயக்கமடைந்துவிட்டால் தங்களது நிலை என்னாவது என கலக்கமடைந்தனர். இதற்கிடையே, விமானம் திட்டமிட்டபடி மட்ரிட் விமான நிலையத்தில் தரையிறங்கியது. விமானத்தில் இருந்த அனைவரும் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர்.
இதையும் படிங்க: தலைக்குப்புற கவிழ்ந்த விமானம்.. தலைகீழாக தொங்கிய பயணிகள்.. நிவாரணம் அறிவித்த விமான நிறுவனம்..!

அதன் பின்னர், விமானம் முழுவதும் பூச்சிக்கொல்லி மருந்து தெளிக்கப்பட்டு சுத்தம் செய்யப்பட்டது. அலர்ஜியால் பாதிக்கப்பட்ட் விமானியின் உடல்நிலை தற்போது சீராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விமானம் முழுவதும் பூச்சிக்கொல்லி மருந்து தெளிக்கப்பட்டு சுத்தம் செய்யப்பட்ட காரணத்தால் ஐபீரியா ஏர்பஸ் ஏ320 விமானம் மேட்ரிட் விமான நிலையத்தில் சுமார் 3 மணி நேரம் நிறுத்தி வைக்கப்பட்டது. இதனால் அந்த விமானத்தில் மீண்டும் புறப்பட்டு செல்ல இருந்த பயணிகள் விமான நிலையத்தில் காத்திருக்கும் படி பணிக்கப்பட்டனர். இதனால் ஏர்போர்ட்டில் விமான பயணிகளுக்கு அசவுகரியம் ஏற்பட்டது.

இந்நிலையில் மாட்ரிட் மற்றும் மொராக்கோவின் காசாபிளாங்கா இடையே முந்தைய விமானத்தில் இருந்து வந்த பொருட்கள் வழியாக விமானத்திற்குள் சிலந்தி நுழைந்திருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகம் எழுப்பி உள்ளனர். இதுகுறித்து தீவிர விசாரணை நடைபெறும் எனவும் அறிவித்துள்ளனர். பயணிகளுக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு வருந்துவதாகவும், இனி இவ்வாறு நடக்காமல் இருக்க முயற்சிப்பதாகவும் உறுதி அளித்தனர்.
விமானத்தில் இதுபோன்ற விஷ ஜந்துக்கள் தென்படுவது முதன்முறையல்ல. இதற்கு முன் ஒருமுறை ஏர் ஆசியா விமானத்தில் ஒரு பாம்பு நுழைந்தது பயணிகளிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியது. இருப்பினும், விமான பணியாளர்கள அமைதியாக அந்த சூழ்நிலையை கையாண்டனர். விமானப் பணிப்பெண்கள் பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில் மற்றும் ஒரு பையைப் பயன்படுத்தி அந்தப் பாம்பை வெற்றிகரமாகப் பிடித்தனர்.

இதற்கு பதிலளித்த ஏர் ஆசியா செய்தித் தொடர்பாளர், இது மிகவும் அரிதான நிகழ்வு என்றும் இது எப்போதாவது எந்த விமானத்திலும் நிகழலாம் எனவும் விளக்கம் அளித்தார். பயணிகள் மற்றும் பணியாளர்களின் பாதுகாப்பு எந்த நேரத்திலும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகவில்லை என்றும் அந்நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிக்கையை வெளியிட்டது. அதற்கு முன் மலேசியாவில் பிப்ரவரி 2022ல் உள்நாட்டு விமானத்தில் ஒரு மலைப்பாம்பு கண்டுபிடிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: விமான சேவை நிறுத்தம்.. 2 வழித்தடங்களுக்கு தடை.. ஏர் இந்தியா அதிர்ச்சி அறிவிப்பு