புவிசார் குறியீடு ( ஜியோகிராப்பிக்கல் இண்டிகேஷன்) என்பது ஒரு பொருள் அல்லது சின்னம் அதன் இடத்தின் தனித்துவமான பண்புகள் மற்றும் தரத்தால் குறிக்கப்படுவது. புவிசார் குறியீடு என்பது பாரம்பரிய முறைகளின் படி தயாரிக்கப்படும் சிறப்பு பண்புகளை அடையாளம் காட்டும் நற்பெயர். புவிசார் குறியீடு பெற்ற தயாரிப்புகள், உற்பத்தி செய்யும் உற்பத்தியாளர்கள் பொருளாதார செழிப்பை ஊக்குவிக்கிறது.

இந்த புவிசார் குறியீடு என்பது அறிவுசார் சொத்துரிமை சட்டத்தின் கீழ் வகைப்படுகிறது. இவ்வாறு புவிசார் குறியீடு பெற்றிருக்கும் ஒரு பொருளை சம்பந்தப்பட்ட ஊரைத் தவிர மற்ற இடங்களில் தயாரித்து சந்தைப்படுத்த முயல்பவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க முடியும்.
இதையும் படிங்க: அடுத்தடுத்து செயின் பறிப்பு.. என்கவுன்டரில் மாஸ் காட்டிய போலீஸ்.. காவல் ஆணையர் விளக்கம்..!

காஞ்சிபுரம் பட்டு, தஞ்சாவூர் கலைத்தட்டு, திருப்பதி லட்டு, மதுரை மல்லி , மதுரை சுங்குடி சேலை, சேலம் மாம்பழம்,சேலம் மாவட்டம் தம்மம்பட்டி மரச்சிற்பம் தஞ்சாவூர் ஓவியப் பாணி, தஞ்சை பாணி ஓவியங்கள், பத்தமடை பாய், திருவண்ணாமலை ஆரணி பட்டு, பழனி பஞ்சாமிர்தம், கோவில்பட்டி கடலை மிட்டாய், திருநெல்வேலி அல்வா, ஆத்தங்குடி டைல்ஸ், திண்டுக்கல் பூட்டு, ஆம்பூர் பிரியாணி, சிவகாசி பட்டாசு, மார்த்தாண்டம் தேன் என எண்ணற்ற பொருட்கள் புவிசார் குறியீடு பெற்றுள்ளன.

இதன் வரிசையில், தற்போது, மதுரை மரிக்கொழுந்து மற்றும் விளாச்சேரி களிமண் பொம்மைகளுக்கு மத்திய அரசின் தொழில்துறை மற்றும் உற்பத்தி மேம்பாட்டு துறை புவிசார் குறியீடு வழங்கியுள்ளது.

மதுரை, திண்டுக்கல், தேனி மாவட்டங்களின் பல பகுதிகளில், மரிக்கொழுந்து அதிகம் விளைகின்றது. இறைவழிபாட்டில் முக்கிய இடத்தை பெற்றுள்ள மரிக்கொழுந்து, 16ம் நூற்றாண்டில் நடந்த மதுரை மீனாட்சி அம்மன் கோவில் திருக்கல்யாண விழாவில் பயன்படுத்தப்பட்டதற்கான பதிவுகள் உள்ளன.

அதேபோல், மதுரை அருகே விளாச்சேரியில் தொழிலாளர்கள் தயாரிக்கும் களிமண் பொம்மைகள் மிகவும் பிரபலமானவை. விளாச்சேரி கீழக்குயில்குடி கருப்பசாமி கோவிலின் மூலவர் சிலை நூறு ஆண்டுகளுக்கும் முன்பு களிமண்ணால் உருவாக்கப்பட்டது என்பது வரலாற்றுச் சிறப்பு. தற்போது, இவை அழிவின் விளிம்பில் இருப்பதால், புவிசார் குறியீடு பெற, கடந்த 2021ம் ஆண்டு முயற்சி மேற்கொள்ளப்பட்டது இந்நிலையில், மதுரை மரிக்கொழுந்து , விளாச்சேரி களிமண் பொம்மைகளுக்கு இந்திய தொழில்துறை சார்பில் புவிசார் குறியீடுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: முதல்வரின் தேர்தல் வாக்குறுதி! கோவை கிரிக்கெட் மைதானத்திற்கு கிடைத்த தடையில்லாச் சான்று!!!