விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸின் தந்தை தீபக் பாண்டியா. இந்தியாவிலுள்ள குஜராத் மாநிலத்தைச் சார்ந்தவர். தாயார் பெயர் உர்சுலின் போனி பாண்டியா. இவர் ஸ்லோவேனியன்-அமெரிக்க வம்சாவளியைச் சேர்ந்தவர். இவர்கள் இருவருக்கும் 3வதாக பிறந்த கடைக்குட்டி தான் சுனிதா வில்லியம்ஸ்.
பொறியியல் துறையில் முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்கக் கப்பல் படையில் விமான ஓட்டியாகப் பணியாற்றினார். ஆகஸ்ட் 1998இல் நாசாவால் தெரிவு செய்யப்பட்டு விண்வெளி வீராங்கனையாகப் பயிற்சியைத் தொடங்கினார். இதுவரை சுனிதா வில்லியம்ஸ் 2006, 2007 மற்றும் 2012ம் ஆண்டுகளில் விண்வெளிக்கு பயணித்து பத்திரமாக பூமி திரும்பி உள்ளார்.

4வது முறையாக 59 வயதான சுனிதா வில்லியம்ஸ், அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா சார்பில், விண்வெளிக்கு கடந்த ஆண்டு ஜூன் மாதம் 5-ந்தேதி அனுப்பப்பட்டார். 8 நாட்கள் மட்டுமே தங்கி ஆய்வு செய்யும் திட்டத்துடன் சென்ற அவர்கள், விண்கலத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக 286 நாட்கள் விண்வெளி நிலையத்தில் தங்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அங்கு 12,13,47,491 மைல் தூரம் பயணம் செய்து, 4,576 முறை பூமியை சுற்றி வந்துள்ளனர். சுனிதா 62 மணி நேரம் 6 நிமிடங்கள் விண்வெளியில் நடந்துள்ளார்.

இதன்மூலம் அதிக நேரம் நடந்த முதல் பெண் என்ற சாதனை படைத்துள்ளார். மேலும் ஒட்டு மொத்தமாக அதிக நேரம் விண்வெளியில் நடந்தவர்கள் பட்டியலில் 4-ம் இடம் பிடித்துள்ளார். விண்வெளியில் அதிக நாட்களை கழித்த 2-வது அமெரிக்க வீரர் என்ற சாதனையை சுனிதா வில்லியம்ஸ் படைத்துள்ளார்.
இதையும் படிங்க: பகவத் கீதையை மட்டுமல்ல... கணபதி சிலையையும் விண்வெளிக்கு எடுத்துச் சென்ற சுனிதா வில்லியம்ஸ்...!

எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட குரூ டிராகன் என்ற அதிநவீன விண்கலம் மூலம், கடந்த 19 ஆம் தேதி சுனிதா வில்லியம்ஸ், வில்மோர், ஏற்கனவே அங்கு பணியில் இருந்த நிக்ஹேக் (அமெரிக்கா), அலெக்சாண்டர் (ரஷியா) ஆகியோர் பூமிக்கு வந்தனர். விண்வெளி மையத்தில் இருந்து திரும்பிய பிறகு, நாசா விண்வெளி வீரர்கள் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் முதல் முறையாக ஊடகங்களுக்கு உரையாற்றினர். மீண்டும் ஸ்டார்லைனர் விண்கலத்தில் பறப்பீர்களா என்று கேட்டபோது, இரு விண்வெளி வீரர்களும் மீண்டும் பறப்போம் என தெரிவித்தனர்.

அப்போது பேசிய சுனிதா வில்லியம்ஸ், விண்வெளியில் இருந்து இந்தியாவை பார்க்கும் போது அற்புதமாக இருந்ததாக கூறினார். ஒவ்வொரு முறையும் இந்தியாவின் மேற்பரப்பில் சென்ற போது இமயமலையின் நம்பவே முடியாத புகைப்படங்கள் கிடைத்ததாகவும் கூறினார். விண்வெளியில் இருந்து இந்தியாவைப் பார்க்கும்போது ஆச்சரியமாக இருந்தது. ஒவ்வொரு முறை நாங்கள் இமயமலை மேலே பயணித்தபோதும் புட்ச் வில்மோர் சில அற்புதமான புகைப்படங்களை எடுத்தார். இமயமலை இந்தியாவுக்குள் வழிந்தோடுவதுபோல் ஒரு வியத்தகு காட்சியைத் தந்தது. இந்தியாவை விண்வெளியில் இருந்து பார்க்கும் போது மும்பையில் இருந்து குஜராத் வரை இரவில் ஒளிர்ந்த மின் விளக்குகள் பிரம்மாண்டமாகக் காட்சியளித்தன.

ஒரு நாள் நான் எனது தந்தையின் சொந்த நாட்டுக்கு வர விரும்புகிறேன். இந்தியா ஒரு சிறந்த நாடு. அற்புதமான ஜனநாயகம் கொண்ட நாடு என தெரிவித்துள்ளார். மேலும் ஆக்சியம் மிஷனுடன் இணைந்து விண்வெளிக்குச் செல்லவிருக்கும் இந்திய வீரரை நினைத்து நான் மிகவும் பெருமிதம் கொள்கிறேன். விண்வெளி ஆராய்ச்சிகளில் இந்தியா தனியார் நிறுவனங்களுடன் இணைந்து மேற்கொள்ளும் முயற்சி பாராட்டத்தக்கது. எதிர்காலத்தில் விண்வெளி ஆராய்ச்சியில் இந்தியாவுக்கு உதவ தயாராக இருக்கிறேன். எனது விண்வெளி அனுபவத்தைத் தகவல்களை இந்தியர்களுடன் பகிர்ந்து கொள்ள நான் ஆர்வமாக இருக்கிறேன்.

அது ஒரு நாள் நிச்சயம் நடக்கும் என நம்புகிறேன். இந்தியாவுக்கு நீங்கள் வரும் போது உங்கள் குழுவினரையும் அழைத்துச் செல்ல திட்டம் உள்ளதா? என பத்திரிக்கையாளர் எழுப்பிய கேள்விக்கு நகைச்சுவையாக பதிலளித்த சுனிதா வில்லியம்ஸ், நிச்சயமாக. அவர்களுக்கு இந்திய உணவு ஸ்டைலில் காரமான உணவு வழங்கப்படும் என கூறினார்.
இதையும் படிங்க: செவ்வாய் கிரக கதவை திறந்துவிட்ட சுனிதா வில்லியம்ஸ்... அவருக்கு தெரியாமல் நடந்த அற்புதம்...!