அதிமுக நிறுவனரும் மறைந்தவ்முன்னாள் முதல்வருமான எம்ஜிஆரின் 108-ஆவது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் சென்னை சோழிங்கநல்லூர் தொகுதிக்கு உட்பட்ட கண்ணகி நகரில் நடைபெற்றது. இதில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்று பேசினார்.
“நாட்டு மக்களுக்காகவே வாழ்ந்தவர் எம்ஜிஆர். மற்றவர்கள் தங்களுடைய வீட்டுக்காக வாழ்கிறார்கள். எம்ஜிஆரை புகழ்ந்தால்தான் மற்றவர்கள் கட்சியே நடத்த முடியும். அந்தளவுக்கு மக்கள் மத்தியில் செல்வாக்குமிக்க தலைவர் எம்ஜிஆர். 1962இல் எம்எல்சியாக வந்தார்; பிறகு மக்களோடு மக்களாக இருந்து மக்கள் சேவை செய்து முதல்வரானார்.

தற்போது பாருங்கள். தமிழகத்தில் மகன் ஆட்சியில் அமர வேண்டும், கொள்ளு பேரனும் ஆட்சிக்கு வர வேண்டும் என நினைக்கும் கட்சிதான் தமிழகத்தில் ஆட்சியில் உள்ளது. எம்ஜிஆர் விட்டு சென்ற பணியை ஜெயலலிதா நிறைவேற்றினார். இந்த இரு பெரும் தலைவர்களுக்கு வாரிசு இல்லை. நாம்தான் அவர்களுக்கு வாரிசு. தமிழகம் முதன்மை மாநிலமாக இருப்பதற்கு காரணம் நம்முடைய தலைவர்கள்தான். தொண்டர்கள் நிறைந்த கட்சி அதிமுக. அதிமுகவில் வாரிசு இல்லை திமுகவில்தான் வாரிசு உள்ளது. அதைத்தான் ஜல்லிக்கட்டில் நீங்கள் பார்த்திருப்பீர்கள்.
அதிமுகவை அழிக்க, உடைக்க பலரும் முயற்சி செய்கிறார்கள். ஆனால், கட்சியை யாராலும் அழிக்கவும் முடியாது, முடக்கவும் முடியாது, ஒழிக்கவும் முடியாது. அடுத்த ஆண்டு கண்டிப்பாக அதிமுக ஆட்சியைக் கொண்டு வருவோம். திமுக ஆட்சி முடிவுக்கு வர இன்னும் 13 அமாவாசைதான் இருக்கிறது. இந்த ஆட்சியில் 4 ஆண்டு காலம் முதல்வர் ஸ்டாலின் என்ன செய்தார்? தன்னுடைய மகனை துணை முதல்வர் ஆக்கியதுதான் ஸ்டாலின் செய்த ஒரே சாதனை. பிறகு போட்டோ ஷூட் செய்வார், வெறும் விளம்பரம் மட்டுமே. தினம் ஒரு விளம்பரம், தினம் ஒரு அறிவிப்பு, ஒரு குழு அமைப்பார், இந்த அரசாங்கம் குழு அரசாங்கம், குழு போட்டவுடன் முடித்து விடுகின்றனர். புதிய அறிவிப்பு வராத நாளே இல்லை.

அதிமுக திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டி கொண்டது திமுக. திமுக அரசு செய்யும் தவறுகளை பத்திரிகைகள், தொலைக்காட்சிகள் சரியாக சொன்னாலோ திமுக அரசு காணாமல் போய்விடும். அனைத்து தரப்பு மக்களுக்கும் அதிமுக அரசு பல்வேறு திட்டங்களை கொண்டு வந்தது. திமுக தேர்தல் அறிக்கையில் 522 அறிவிப்புகளை வெளியிட்டது. அதில் 20 சதவீதம் அறிவிப்புகளைகூட நிறைவேற்றவில்லை" என்று எடப்பாடி பழனிச்சாமி பேசினார்
இதையும் படிங்க: அட.. அந்த செந்தில் முருகனாப்பா இவரு..? ஈரோட்டில் சுயேட்சையாக களமிறங்கி கிச்சுக் கிச்சு மூட்டும் அதிமுக பிரமுகர்..!
இதையும் படிங்க: விஜயின் தவெகவில் இணையும் அதிமுக முன்னாள் அமைச்சர்..! அப்படியே வருவாரா..? அறுத்து விட்டு வருவாரா..?