தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே உள்ள மேல நம்பிபுரத்தைச் சேர்ந்தவர் பூவன். அவரது மனைவி சீதாலட்சுமி. வயது 70. இவர்களுடைய மகள் ராமஜெயந்தி. வயது 48. ராமஜெயந்திக்கும் அவரது கணவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து பெற்றோருடன் வசித்து வந்தார். பூவன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். அதனால் தாயும், மகளுமாக வீட்டில் தனியாக வசித்து வந்தனர். இந்த நிலையில் கடந்த 3-ம் தேதி தாய் சீதாலட்சுமி, மகள் ராமஜெயந்தி இருவரும் வீட்டில் இறந்து கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் போலீசார் நேரில் சென்று விசாரித்தனர். அப்போது தாய், மகள் இருவரும் கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டதும், அவர்கள் அணிந்து இருந்த 13 சவரன் தங்க நகை கொள்ளையடிக்கப் பட்டிருந்ததும் தெரிந்தது.

இதன் அடைப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார், குற்றவாளிகளை தேடி வந்தனர். சந்தேகத்தின் பேரில் எட்டயபுரம் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த 10க்கும் மேற்பட்ட நபர்களை தனிப்படை போலீசார் பிடித்து ரகசிய இடத்தில் வைத்து இரண்டு நாள்களாக விசாரணை நடத்தினர். இதில் தாப்பாத்தி கிராமத்தை சேர்ந்த வேல்முருகன் ( வயது 18). மேல நம்பிபுரத்தைச் சேர்ந்த
சேர்ந்த முகேஷ் கண்ணன் ( வயது 25) ஆகிய இருவருக்கும் கொலை சம்பவத்தில் தொடர்பு இருப்பது தெரிந்தது. இருவரும் கஞ்சா போதையில் கொலை, கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றி இருப்பதும் தெரிய வந்தது. இதில் வேல்முருகன், முகேஷ் கண்ணன் ஆகியோரை போலீசார் சுற்றி வளைத்து பிடித்த போது தப்பியோடி உள்ளனர். இதில் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு இருவரும் மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதையும் படிங்க: சாமி கும்பிட வந்த பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை... காமுகன்களை சுட்டுப்பிடித்த காவல்துறை...!

மேலும் இந்த சம்பவத்தில் முக்கிய புள்ளியான மேல நம்பிபுரத்தைச் சேர்ந்த முனீஸ்வரன் (வயது 25) என்பவர், அயன் வடமலாபுரம் காட்டுப்பகுதியில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலையடுத்து தென் மண்டல ஐ.ஜி. பிரேம் ஆனந்த் சின்ஹா உத்தரவின் பேரில் நெல்லை சரக டிஐஜி (பொறுப்பு) சந்தோஷ் ஹதி மணி, தூத்துக்குடி எஸ்.பி. ஆல்பர்ட் ஜான் ஆகியோர் தலைமையில் 5 டிஎஸ்பிக்கள் 20 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் அடங்கிய 9 தனிப்படைக்கள் அமைக்கப்பட்டு 100க்கும் மேற்பட்ட போலீசார் காட்டுப்பகுதியில் தேடுதல் வேட்டை நடத்தினர். 6 ட்ரோன் கேமராக்களை பறக்கவிட்டு தீவிரமாக தேடினர். அயன் வடமலாபுரம், முத்தலாபுரம், தாப்பாத்தி, கீழக்கரந்தை, புதுப்பட்டி, ரகுராமபுரம் உள்ளிட்ட 20 க்கும் மேற்பட்ட கிராமங்களிலும் வைப்பாறு படுகையோர காட்டு பகுதியிலும் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். 12 மணி நேரமாக ட்ரோன் கேமராக்களை பறக்க விட்டு தேடிவந்த நிலையில் முனீஸ்வரன் சிக்காமல் போலீசாருக்கு தண்ணீர் காட்டி வந்துள்ளார்.

இந்த நிலையில், புதன்கிழமை இரவு அயன் வடமலாபுரத்தில் உள்ள அவரது சகோதரி செல்வராணி வீட்டிற்கு முனீஸ்வரன் வந்ததாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து போலீசார் விரைந்து சென்று கைது செய்ய முயன்றனர். அப்போது முனீஸ்வரன் மீண்டும் தப்பி ஓட முயற்சி செய்துள்ளான். உடனே போலீசார் முனீஸ்வரனை சுற்றி வளைத்து பிடித்து தனி இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த இரண்டு நாட்களாக போலீசாருக்கு போக்கு காட்டி வந்த முனீஸ்வரன் , பசி ஏற்பட்டு சாப்பிடுவதற்காக சகோதரி வீட்டுக்கு வந்துள்ளார். அவரும் முனீஸ்வரனுக்கு சாப்பாடு போட்டுவிட்டு கதவை அடைத்துவிட்டு போலீசாருக்கு தகவல் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. போலீசார் வரும் சத்தம் கேட்டதும் முனீஸ்வரன் கதவை உடைத்துக் கொண்டு தப்பி தெருக்களில் ஓடியுள்ளார். அப்போது போலீசார் சுற்றி வளைத்து காரில் ஏற்றிச் சென்றதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

இந்நிலையில் முக்கிய குற்றவாளி முனீஸ்வரன் குளத்தூர் காவல் உதவி ஆய்வாளர் முத்துராஜ் மற்றும் மூன்று போலீசாரை வெட்டி விட்டு தப்ப முயன்ற போது மதுரை தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் பாலாஜி எடைமேடை அருகே போலீசார் அவனை சுட்டுப் பிடித்தனர். சுடப்பட்ட முனீஸ்வரன், காயம் பட்ட எஸ்.ஐ. முத்துராஜா மற்றும் போலீசார் தூத்துக்குடி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். தாய், மகள் என இரட்டை கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளியை போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தி கைது செய்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: மீண்டும் ஒரு வேங்கைவயல்? அங்கன்வாடி மையத்தின் முன் மனிதகழிவு.. மதுபாட்டில்களை உடைத்து போட்டு அராஜகம்..