ஆட்சி அதிகாரத்தில் இருந்த கட்சிகள் போட்டியிடாமல் விலகியபோதும் மாற்றத்திற்காக களத்தில் போட்டியிடுவதாக சீமான் பிரசாரத்தில் தெரிவித்துள்ளார்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமியை ஆதரித்து அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று தனது பரப்புரையை தொடங்கினார். ஈரோடு RKV சாலை சந்திப்பில் கிருஷ்ணா திரையரங்கம் பகுதியில் வாகன பரப்புரையில் ஈடுபட்டார்.

அப்போது பேசிய சீமான், தமிழகத்தில் 60 ஆண்டுகாலம் ஆட்சி செய்த ஆட்சியாளர்கள், மக்களை ஆயிரம் ரூபாய்க்கு கையேந்தும் நிலைக்கு தள்ளிவிட்டனர். இந்த நிலையை மாற்றி, தமிழக மக்களை தன்மானத்தோடு வாழ வைக்க முடியாதா என்ற ஏக்கத்தில்தான் நாம் தமிழர் கட்சி தேர்தல் களத்தில் நிற்கிறது. தேர்தல்களில் தொடர்ந்து தனித்து போட்டியிட்டு, 1.1 சதவீத வாக்குகளில் தொடங்கி இன்று 8.22 சதவீத வாக்குகளைப் பெற்று, தேர்தல் ஆணைய அங்கீகாரம் பெற்றுள்ளோம். மக்கள் எங்கள் மீது வைத்த நம்பிக்கைக்கு கிடைத்த வெற்றி இதுவாகும். வெல்ல முடியாத படை என்று ஒன்று இல்லை என்று ரஷ்ய அதிபர் ஸ்டாலின் சொன்னது போல், திமுகவை வீழ்த்த முடியும் என்ற நம்பிக்கையில் ஈரோடு தேர்தல் களத்தில் தனித்து நிற்கிறோம்.
இதையும் படிங்க: வேஷம் போடுறாங்க... கட்சி ஆரம்பிச்சதுமே ஆட்சிக்கு வரத் துடிக்கிறாங்க... சீமான், விஜய்யை விமர்சித்த ஸ்டாலின்!
கடந்த மூன்றரை ஆண்டு கால ஆட்சியின் சாதனைகளை சொல்லி திமுகவினர் வாக்கு கேட்க மாட்டார்கள். பணம் கொடுத்து வாக்குகளைப் பெறவே நினைப்பார்கள். அவரகளை வாக்கு என்ற ஆயுதம் கொண்டு வீழ்த்த வேண்டும். உலகெங்கும் மாற்றங்கள் இபப்டித்தான் நடந்து கொண்டு இருக்கிறது. மாறுதலுக்கான தேர்தலாக இந்த தேர்தல் இருக்கும்.
தேர்தலின்போது வாக்கினை விற்கும் அரசியலை மக்கள் ஏற்க கூடாது. அவர்கள் நமது வாக்கை விலைக்கு வாங்கி நாட்டை விற்கும் நிலையை அனுமதிக்கக் கூடாது. திமுக ஆட்சியில் ஆசிரியர், போக்குவரத்து ஊழியர், மாணவர், உழவர், செவிலியர், மருத்துவர் என எல்லோரும் போராட்டக்களத்திற்கு வந்துள்ளார்கள். ஆனால், எந்த கொம்பனாலும் குறை சொல்ல முடியாத ஆட்சி நடப்பதாக ஆட்சியாளர்கள் சொல்லி வருகின்றனர்.

அதிமுக ஆட்சியின் போது பொங்கல் பரிசாக 5000 ரூபாய் கொடுக்க வேண்டும் என்ற சொன்ன முதல்வர் ஸ்டாலின், தனது ஆட்சியில் பொங்கல் பரிசு என 103 ரூபாய் மட்டுமே கொடுத்துள்ளார். மது விற்பனையை 45 ஆயிரம் கோடி ரூபாயில் இருந்து, 50 ஆயிரம் கோடி ரூபாயாக உயர்த்த அரசு இலக்கு நிர்ணயம் செய்கிறது. படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கையை பெருக்குவதற்கு பதிலாக, குடிப்பவர்களின் எண்ணிக்கையை பெருக்க அரசு இலக்கு நிர்ணயம் செய்கிறது.இந்த நிலையை மாற்ற, மக்கள் நலனை முக்கியமாக கருதும் எங்களை வெற்றி பெற வையுங்கள். எங்கள் வெற்றி தமிழக மக்களின் வெற்றி.
ஆட்சி அதிகாரத்தில் இருந்த கட்சிகள் கூட ஈரோடு தேர்தல் களத்தில் போட்டியிடாமல் விலகிய நிலையில், துணிச்சலுடன் போட்டியிடும் நாம் தமிழர் கட்சியை வாக்காளர்கள் கைவிட மாட்டார்கள் என்று நம்புகிறோம். எது சரியான அரசியல் என ஈரோடு கிழக்கு வாக்காளர்கள் அறிவார்கள். ஜனநாயக முறையில் இந்த தேர்தல் நடக்காது என்றாலும், இந்த கொடுமையை யார் தடுப்பது என்று நாங்கள் போட்டியிடுகிறோம்.
-
இந்த தேர்தல் மூலம் ஈரோடு கிழக்கில் பிறக்கும் தூய அரசியல், அடுத்த ஆண்டு நட்க்கும் பொதுத்தேர்தலில் 234 தொகுதிகளிலும் எதிரொலிக்கும். ஈரோடு கிழக்கில் சூரியன் மறைந்தால்தான் தமிழகத்திற்கு விடிவு ஏற்படும் என்றார்.
இதையும் படிங்க: அடுத்து எங்கள் ஆட்சி, நான்தான் முதல்வர் என்று பிதற்றுகிறார்கள்.. சீமான், விஜய்க்கு முதல்வர் ஸ்டாலின் சுளீர்!