வரலாற்றில் விண்வெளி ஆய்வுகள் மாபெரும் முன்னெடுப்புகளை செய்துள்ளன. தரையில் இருந்து பலநூறு கிலோ மீட்டர்கள் விண்வெளியில் உயரப் பறக்கும் வித்தையை மனிதன் கற்றுணர்ந்தது இந்த பூமி பந்தில் மனிதன் ஏன் ஆதிக்கம் செலுத்துகிறான் என்பதற்கு விடையாக அமைந்தது. நிலவைக் காட்டி கதைபேசிய காலத்தில் அந்த நிலவிலேயே மனிதன் காலடித்தடம் பதிக்க முடிந்தது தானே அறிவியலின் சிறப்பு.

இதன் தொடர்ச்சியாக பூமிக்கு இணையாக அந்தரத்தில் மிதக்கும் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தை மனிதன் உருவாக்கியது மாபெரும் கனவு என்றே சொல்லலாம். நாம் பிறந்து வளர்ந்த பூமியை தூரமென்று பார்ப்பது எவ்வளவு அழகான தருணம் என்று எண்ணிப் பார்த்தால் நெகிழ வைக்கிறது.
அப்படியான சர்வதேச விண்வெளி மையம் தான் அறிவியல் உலகில் மிக முக்கியமானதொரு பேசுபொருளாக தற்போது இருந்து வருகிறது.

நாசா எனப்படும் விண்வெளி ஆய்வு மையத்தின் சார்பில், கடந்த வருடம் ஜூன் மாதம், 5ம் தேதி, இந்திய வம்சாவளியான சுனிதா வில்லியம்ஸ் விண்வெளியில் உள்ள சர்வதேச விண்வெளி மையத்துக்கு சென்றார். அவருடன் விண்வெளி வீரர் புட்ச் வில்மோரும் உடன் சென்றிருந்தார்.
எட்டு நாட்கள் அங்கு தங்கியிருந்து இவர்கள் பூமிக்கு திரும்ப திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், அவர்கள் சென்ற ராக்கெட் பழுதடைந்த நிலையில், இருவரையும் பூமிக்கு திரும்ப கொண்டுவர தொடர்ந்து பலமுறை மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளும் பலனளிக்கவில்லை. எப்படியாவது அவர்களை மீட்டு கொண்டு வர வேண்டும் என்பதில் தீவிர முயற்சியை மேற்கொண்டு வந்தனர்.

8 நாள் பயணம், தற்போது 9 மாதங்களை எட்டியுள்ள நிலையில், அவர்களை அழைத்து வருவதற்காக, சில தினங்களுக்கு முன் அமெரிக்க தொழிலதிபர் எலான் மஸ்க்கின், ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ராக்கெட்டை செலுத்துவதாக இருந்தது. துருதிஷ்ட வசமாக கடைசி நேரத்தில், 'பால்கன் - 9' ராக்கெட்டில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால், அத்திட்டம் ஒத்திவைக்கப்பட்டது.

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நாசாவைச் சேர்ந்த விஞ்ஞானி நிக் ஹேக் மற்றும் ரஷிய விஞ்ஞானி அலெக்சாண்டர் கோர்புனோவ் ஆகியோர் இரண்டு காலி இருக்கைகள் பொருத்தப்பட்ட விண்கலத்துடன் சர்வதேச விண்வெளி மையம் சென்றனர். அவர்களாலும் இவர்களை மீட்க முடியவில்லை.

இந்நிலையில் இன்று புளோரிடாவில் உள்ள விண்வெளி மையத்தில் இருந்து, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் பால்கன் - 9 ராக்கெட் சுனிதாவையும், வில்மோரையும் மீட்டுக் கொண்டுவர இந்திய நேரப்படி அதிகாலை 4:33 மணிக்கு, விண்ணில் பாய்ந்தது.
இன்றிரவு 11.30 மணியளவில் விண்கலம் சர்வதேச விண்வெளி மையத்தை சென்றடையும் என கூறப்பட்டுள்ளது.
வருகிற 19-ந் தேதி சுனிதா வில்லியம்ஸ், வில்மோர் ஆகிய இருவரையும் அழைத்துக் கொண்டு பூமிக்கு திரும்ப திட்டமிடப்பட்டுள்ளது. கூடவே நிக் ஹேக் மற்றும் அலெக்சாண்டர் கோர்புனோவ் ஆகியோரும் அழைத்து வரப்பட உள்ளனர்.