தமிழ்நாட்டின் திருச்சியில் இருந்து இலங்கையின் யாழ்ப்பாணத்திற்கு நேரடி விமான சேவை வருகிற மார்ச் 30-ந் தேதி முதல் தொடங்கப்பட உள்ளதாக இண்டிகோ நிறுவனம் அறிவித்துள்ளது. தற்போது சென்னை, பெங்களுர், ஐதராபாத், மும்பை, திருச்சி ஆகிய 5 நகரங்களில் இருந்து கொழும்புவிற்கு நேரடி விமான சேவை நடைமுறையில் உள்ளது. இலங்கையின் வடக்கு மற்றும் வடகிழக்கு பகுதிகளில் பொருளாதார மேம்பாட்டினையும், சுற்றுலாப் பயணிகளின் வருகையை அதிகரிக்கும் நோக்கில் யாழ்ப்பாணத்திற்கு நேரடி விமான சேவைக்கான பணிகள் நடைபெற்று வந்தன. தற்போது இண்டிகோ நிறுவனம் தனது முதலாவது சேவையை வருகிற 30-ந் தேதி முதல் தொடங்கும் என்று அறிவித்துள்ளது.

இதன்படி, திருச்சியில் இருந்து மதியம் 1.25 மணிக்கு புறப்படும் விமானம் யாழ்ப்பாணத்தை 2.25க்கு சென்றடையும். மறுமார்க்கத்தில் மதியம் 3.10 மணிக்கு புறப்பட்டு 4.05-க்கு திருச்சியை வந்தடையும். முதலில் வாரத்தில் நான்கு நாட்களுக்கும் பிறகு வரவேற்பை பொறுத்து நாள்தோறும் என்றும் விமானங்களை இயக்க இண்டிகோ நிறுவனம் திட்டமிட்டுள்ளது. ஏனெனில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் இதேபோன்று விமான சேவை தொடங்கப்பட்ட நிலையில், ஒருசில காரணங்களுக்காக அது நிறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. பயணக்கட்டணமாக 8 ஆயிரம் ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: கோயிலில் கைவரிசை காட்டிய ஆசாமி.. கட்டி வைத்து வெளுத்து வாங்கிய மக்கள்..!
இலங்கைக்கு செல்லும் சுற்றுலாப் பயணிகளில் 25 சதவிதத்தினர் இந்தியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே விமான சேவை அதிகரிக்கும் பட்சத்தில் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கும் என்று நம்பப்படுகிறது. சென்னையில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு தினசரி விமானங்களைத் தவிர, இந்தியாவில் 4 இடங்களில் இருந்து கொழும்புக்கு 30 வாராந்திர விமான சேவையை வழங்குவதாக இண்டிகோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதனிடையே திருச்சியில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு மட்டுமல்லாது பலாலி நகருக்கும் விமான சேவைகளை விமான நிறுவனங்கள் தொடங்க வேண்டும் என இலங்கையின் ரவூப் ஹக்கீம் கேட்டுக் கொண்டுள்ளார்.
மேலும் நாகை - தலைமன்னார் இடையிலான கப்பல் சேவை அவ்வப்போது நிறுத்தப்பட்டு விடுவதற்கும் அவர் கவலை தெரிவித்துள்ளார். இதற்கு தலைமன்னாரில் பயணிகளை ஏற்றுவதற்கான மையம் சரிவர இயங்கவில்லை என்று இந்திய அரசு குற்றஞ்சாட்டுவதை கவனத்தில் கொள்ள வேண்டும் என்று அவர் கூறியுள்ளார். இந்த கப்பல் சேவையைப் போன்று விமான சேவையும் இடையில் நிறுத்தப்படாமல் இருக்க, யாழ்ப்பாணம் விமான நிலையத்தில் பயணிகள் முனையத்தை சர்வதேச தரத்திற்கு கொண்டு வர வேண்டிய பொறுப்பு இலங்கை அரசுக்கு உள்ளதாகவும் ரவூப் ஹக்கீம் வலியுறுத்தி உள்ளார்.
இதையும் படிங்க: போலீசுக்கு விழுந்த அடி! அரைநிர்வாணத்தில் போலீசுடன் தகராறு.. வழக்கறிஞர் கவுன்சில் தலைவர் அட்டூழியம்..