நெடுஞ்சாலை பயணங்களின் போது மக்கள் மிக கவனமுடன் செல்ல வேண்டியது அவசியமாகிறது. நம் எதிரே வரும் வாகனங்களில் வருபவர் செய்யும் பிழையால் கூட நமது உயிருக்கோ, உடலுக்கோ பெருத்த சேதம் ஏற்பட அனேக வாய்ப்புள்ளது. இவ்வாறாக புதுக்கோட்டை அருகே நடந்தவிபத்தில் 3 பேர் இறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தஞ்சாவூர் காவிரி நகரை சேர்ந்தவர் செந்தமிழ்ச்செல்வன், அவரது மனைவி அருணா. இருவரும் குடும்பத்துடன் புதுக்கோட்டையிலிருந்து காரைக்குடி நோக்கி காரில் சென்று கொண்டு இருந்தனர்.

இன்று காலை 11 மணிக்கு புதுக்கோட்டை அடுத்த நமணசமுத்திரம் பகுதியில் கார் வந்து கொண்டு இருந்தது. அப்போது எதிர் திசையில் வந்த சிறிய சரக்கு வாகனத்துடன் கார் எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் மோதியது. இதில் சரக்கு வேனுக்கு பின்னால் முருகன் என்பவர் ஓட்டி வந்த காரும் விபத்தில் சிக்கியது. இந்த கோர விபத்தில் செந்தமிழ்ச்செல்வன் கார் மற்றும் சரக்கு வேன் முழுவதுமாக நொறுங்கி சின்னாபின்னமானது. விபத்தில் செந்தமிழ்ச்செல்வன், மனைவி அருணா உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே இறந்தனர். அவர்களுடன் அதே காரில் வந்த மற்றொரு பெண் மற்றும் 2 குழந்தைகள் படுகாயத்துடன் மீட்கப்பட்டனர்.
இதையும் படிங்க: செல்போனால் பறிபோன 2 உயிர்கள்... உயிரை மாய்த்துக்கொண்ட அண்ணன் - தங்கை..! புதுக்கோட்டையில் அரங்கேறிய சோகம்..!

அதே சமயம் சரக்கு வேனில் டிரைவர் அருகே பயணம் செய்த இலுப்புரை சேர்ந்த சுதாகர் என்பவரும் சடலமாக மீட்கப்பட்டார். சரக்கு ஆட்டோ டிரைவர் மூர்த்தி படுகாயங்களுடன் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். மூன்றாவதாக விபத்தில் சிக்கிய முருகன் அதிர்ஷ்டவசமாக லேசான காயங்களுடன் உயிர் தப்பினார். அடுத்தடுத்து 3 வாகனங்கள் விபத்தில் சிக்கியதால் திருச்சி டு காரைக்குடி ஹைவேஸில் டிராபிக் ஜாம் ஆனது. மேலும் விபத்து நடந்த உடனே தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற நமணசமுத்திரம் காவல் துறையினர் மற்றும் தீயணைப்புத் துறையினர் காயமடைந்தவர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ்கள் மூலம் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும் இந்த விபத்தில் உயிரிழந்தவர்கள் கார் மற்றும் டாடா ஏசி வாகனத்தில் சிக்கியிருந்த நிலையில் அவர்களது உடலை தீயணைப்புத் துறையினர் சிரமப்பட்டு மீட்டனர். பின்னர் அவர்களது உடல்கள் ஆம்புலன்ஸ் மூலம் உடற்கூறு ஆய்வுக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. மேலும் இந்த விபத்தால் திருச்சி காரைக்குடி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. உடனடியாக கிரேன் வரவழைக்கப்பட்டு, கிரேன் உதவியுடன் விபத்து நடந்த வாகனங்களை காவல்துறையினர் அப்புறப்படுத்தினர்.

விபத்து குறித்து நடத்திய முதற்கட்ட விசாரணையில் புதுக்கோட்டையிலிருந்து காரைக்குடி திசையில் சென்ற கார் ஓட்டுநர் செந்தமிழ்ச்செல்வன், தூக்க கலக்கத்தில் இருந்ததால் இந்த விபத்து நேர்ந்துள்ளதாக தெரியவந்துள்ளது. இந்த விபத்து குறித்து நமணசமுத்திரம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: 4 பேரை பலி வாங்கிய ஏணி... சோகத்தில் முடிந்த விழா!!